கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் திட்டம்: உடல்நலம் குறித்த சுய பதிவு செய்ய இணையதளம் அறிமுகம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை; சளி மாதிரி சேகரிக்கப்படும் கருவிகள் பற்றாக்குறை: கொரோனா பரிசோதனை 4 மணி நேரம் நிறுத்தம்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் திட்டம்: உடல்நலம் குறித்த சுய பதிவு செய்ய இணையதளம் அறிமுகம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பும் அதிகரித்து வருவது, மக்களிடையே பீதியை ஏற்படுத்துகிறது. தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என பொது மக்களிடம் பரிசோதனை மேற்கொள்வது அதிகப்படுத்தப்பட்டு உள்ளது.

பரிசோதனை அதிகப்படுத்தியதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக கண்டறியப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று சென்னையில் 538 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 15 மண்டலங்களில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. அங்கு குறிப்பிட்ட சில வார்டுகளில் மட்டும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மாநகராட்சி இணையதளம்

கோயம்பேடு மார்க்கெட் மூலம் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு மளமளவென உயர்ந்திருக்கிறது. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் தொற்று நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தங்களது உடல்நலம் குறித்த தகவல்களை சுய பதிவு செய்து கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி cov-id19.ch-e-n-n-a-i-c-o-r-p-o-r-at-i-on.gov.in/c19/sym-pt-oms/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது சுய விவரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் விரைவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் நபர் கண்டறியப்பட்டு, அவருக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொள்ளும்.

சளி மாதிரி சேகரிக்கப்படும் கருவிகள் பற்றாக்குறை:ஆரல்வாய்மொழியில் கொரோனா பரிசோதனை 4 மணி நேரம் நிறுத்தம்
சளி மாதிரி சேகரிக்கப்படும் கருவிகள் தீர்ந்து போனதால் ஆரல்வாய்மொழி கல்லூரியில் கொரோனா பரிசோதனை பணி 4 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அவதிக்குள்ளானார்கள்.

ஆரல்வாய்மொழி கல்லூரி மையம்

சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து குமரிக்கு வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு குமரிக்கு படையெடுத்த வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக அண்ணா கல்லூரி மையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சளி மாதிரி சேகரிப்பதற்கான கருவிகள் இல்லை.

கொரோனா பரிசோதனை பணி நிறுத்தம்

இதனால் அந்த நபர்களிடம் சளி மாதிரி சேகரிக்கப்படவில்லை. கருவிகள் வந்தவுடன் சளி மாதிரி சேகரிக்கப்படும் என்று மருத்துவ பணியாளர்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா பரிசோதனை பணி நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வகையில் சுமார் 4 மணி நேரமாக கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி சேகரிக்கும் பணி நடைபெறவில்லை. கொரோனா பரிசோதனை கருவிகள் தட்டுப்பாட்டால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அங்கேயே வெகுநேரமாக காத்திருந்தனர். இதனால் சின்ன குழந்தைகள், பெரியவர்கள் ஏராளமானோர் மிகவும் அவதிக்குள்ளானார்கள். பின்னர் காலை 8 மணிக்கு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கருவிகள் கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து 4 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் சளி மாதிரி சேகரிக்கும் பணி தொடங்கியது. பரிசோதனைக்கு பிறகு கன்னியாகுமரி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கருவிகள் தீர்ந்து போனதால் ஏற்பட்ட பரபரப்பு, சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு முடிவுக்கு வந்தது. நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை (அதாவது 24 மணி நேரத்தில்) வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 90 வாகனங்களில் 252 பேர் குமரிக்கு வந்தனர். இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு பிறகு கன்னியாகுமரி முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆஸ்டின் எம்.எல்.ஏ.

இதனை அறிந்த ஆஸ்டின் எம்.எல்.ஏ. அந்த மையத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். பின்னர், கருவிகள் தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன்? என்று மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

குளிர்சாதன வசதியுடன் செயல்பட்ட பிரபல நகைக்கடைக்கு ‘சீல்’ - வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் நேர கட்டுப்பாடுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டன. இதற்கிடையில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில தளர்வுகள் செய்யப்பட்டன. அதன்படி சிறிய நகை கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை) உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டன. இந்தநிலையில் பொள்ளாச்சியில் நேற்று சிறிய நகை கடைகள் மட்டுமல்லாது குளிர்சாதன வசதி கொண்ட பெரிய அளவிலான கடைகளும் திறக்கப்பட்டன.

இதையடுத்து சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவின் பேரில் தாசில்தார் தணிகவேல் மேற்பார்வையில் மண்டல துணை தாசில்தார் மாரீஸ்வரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பட்டுராஜ், வினோத், சுந்தர்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் தனராஜ் ஆகியோர் பொள்ளாச்சி கடை வீதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட பிரபல நகைக்கடையான சின்ன அண்ணன் நகைக்கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சிறிய நகைக்கடைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்று அரசு அறிவித்து உள்ளது. ஆனால் பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள சின்ன அண்ணன் நகைக்கடையில் அதிக பணியாளர்கள் பணிபுரிந்தனர். மேலும் அது 2 தளங்களுடன் குளிர்சாதன வசதி கொண்ட கடையாகும். அந்த கடையை திறப்பதற்கு அனுமதி கிடையாது. மேலும் கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக அந்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

குளிர்சாதன வசதி இல்லாவிட்டாலும் பெரிய கடைகளாக இருந்தால் செயல்பட அனுமதி இல்லை. ஒரு கடையில் 2 பணியாளர்கள் வேலையில் இருக்கலாம். மேலும் கடையில் வேலை பார்ப்பவர்களும், வாடிக்கையாளர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி மருந்து (சானிடைசர்) வைத்திருக்க வேண்டும். தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் ‘சீல்’ வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோத்தகிரி மார்க்கெட்டில், மளிகை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - தாசில்தாரிடம் வியாபாரிகள் கோரிக்கை
கோத்தகிரி பேரூராட்சி மார்க்கெட்டில் காய்கறி, மளிகை, ஜவுளி, இறைச்சி கடைகள் உள்பட மொத்தம் 200 கடைகள் உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாகவும், கடைவீதி பகுதி சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாலும் மார்க்கெட் மூடப்பட்டது. தற்போது மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் கோத்தகிரி காந்தி மைதானத்தில் திறந்தவெளியில் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் மளிகை கடைகளை திறந்தவெளியில் வைத்து வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மார்க்கெட்டில் இடைவெளி விட்டு அமைந்து உள்ள 40 மளிகை கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வியாபாரிகள், கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் மோகனாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மார்க்கெட்டில் கடந்த 1½ மாதங்களாக கடைகள் திறக்கப்படாமல், அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டு உள்ளது. இதனால் எலிகள் உணவு பொருட்களை நாசம் செய்து வருகின்றன. கடைகள் திறக்கப்படாததாலும், பொருட்கள் சேதமடைந்து வருவதாலும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் அனைத்து விதமான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால், மார்க்கெட் மட்டும் திறக்கப்படாமல் உள்ளது.

எனவே கடைகளை சுத்தம் செய்ய நுழைவுவாயில்களை திறந்து விட வேண்டும். பெரும்பாலான கடைகள் திறந்தவெளிக்கு மாற்றப்பட்டதால், மீதம் உள்ள கடைகள் சமூக இடைவெளியுடன் செயல்பட மார்க்கெட்டை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு இன்று(செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வெளி மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு வந்தவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் மாநகராட்சி ஆணையாளர் தகவல்
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, சேலம் மாநகர பகுதியை வசிப்பிடமாக கொண்டு பணி நிமித்தமாக வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் தங்கி இருந்து விட்டு வருபவர்களை தீவிரமாக கண்காணித்து கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக சிறப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறியதாவது:-

வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறையினரின் சோதனைச்சாவடியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தும் பகுதியில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் வெளிமாநிலங்களில் இருந்து 134 பேரும், வெளி மாவட்டங்களில் இருந்து 296 பேரும் என மொத்தம் 430 பேர் சேலத்திற்கு வந்துள்ளனர்.

சமுதாய சமையற்கூடம்

அவர்களில் 345 பேருக்கு கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தும் பகுதியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அங்கு அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? என பரிசோதனை செய்த பின்னரே மாநகருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையே மாநகராட்சி சார்பில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலேயே சமுதாய சமையற்கூடம் ஏற்படுத்தப்பட்டு 2,250 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சேலம் நகருக்குள் யாராவது வந்தால் அவர்களது வீடுகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.

சிறப்பு குழுக்கள்

அந்த நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தவிர வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய சமையற்கூடத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

திருச்சி என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம் பகுதியில் ஊரடங்கால் மூடப்பட்ட தரைக்கடைகளை திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி மறுப்பு
திருச்சி என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம் பகுதியில் ஊரடங்கால் மூடப்பட்ட தரைக்கடைகளை திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

சாலையோர வியாபாரம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் சாலையோர வியாபாரம் முடங்கிபோனது. திருச்சி மாநகரை பொறுத்தவரை சாலையோர வியாபாரிகள் அதிகமாக தொழில் நடத்தியது சத்திரம் பஸ் நிலையம் மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில்தான். இந்த நிலையில் தரைக்கடை வியாபாரிகளுக்கு நேற்று முதல் ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டு அவர்கள் மீண்டும் வியாபாரம் செய்திட அனுமதி அளிக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் பிரதானதாக தரைக்கடைகள் அமைந்துள்ள இடமாக என்.எஸ்.பி. சாலை மற்றும் தெப்பக்குளம் பகுதியை சுற்றி இருப்பவை ஆகும். இந்த பகுதியில் உள்ள தரைக்கடைகளை தவிர, ஏனைய பகுதிகளில் உள்ள தரைக்கடைகள் நேற்று முதல் வழக்கம்போல செயல்பட தொடங்கியது.

அனுமதி மறுப்பு

ஆனால் என்.எஸ்.பி. சாலையில் உள்ள சாலையோர தரைக்கடைகளை திறக்க அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், வியாபாரிகள் பெரும் வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள். 45 நாட்கள் கழித்து ஆவலுடன் கடைகளை திறக்க வந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கினர். பின்னர் கோட்டை பகுதியில் உள்ள திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மோகன், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோரை தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பினர் சந்தித்து முறையிட்டனர். ஆனாலும் மாலைவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இது தொடர்பாக மனிதநேய வர்த்தக நலச்சங்க பொதுச்செயலாளர் அஷ்ரப் அலி கூறும் போது, என்.எஸ்.பி.சாலை, தெப்பக்குளம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் உள்ளன. 45 நாட்களாக வருவாய் இன்றி தவித்து வருகிறோம். தரைக்கடைகள் வியாபாரத்திற்கு அரசு அனுமதித்தும் அதிகாரிகள் திறக்கவிடாமல் தடுக்கிறார்கள். இது தொடர்பாக அனைத்து தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்புடன் பேசி, நாளை(இன்று) மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று போராட்டம் நடத்தி கலெக்டரை சந்திக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

போக்குவரத்தை தொடங்க ஆயத்தப்பணிகள் தீவிரம்: தயார் நிலையில் அரசு பஸ்கள்
கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பஸ்களும் இயக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் ரெயில்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இயங்க தொடங்கும் என மத்திய ரெயில்வே துறை அறிவித்துள்ளது. அதற்கான முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது.

வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் ஊரடங்கில் மேலும் தளர்வு செய்யப்பட்டு உள்ளது. இதனால் டீக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. குளிர்சாதன வசதியுடன் கூடிய கடைகள், சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஊரடங்கிற்கு பிறகு வருகிற 18-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படுவதாக தெரிகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்ட கட்டுப்பாட்டின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. நெல்லையில் 3 பணிமனைகளும், பாபநாசம், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், சேரன்மாதேவி, திசையன்விளை, கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட 18 இடங்களிலும் பணிமனைகள் உள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக பஸ்கள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அந்த பஸ்களை சுத்தம் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. தற்போது அந்த பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பஸ்களுக்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது. 18-ந் தேதி அரசு பஸ்களை இயக்க தயார் நிலையில் இருக்கிறோம். அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.

பாபநாசம் பணிமனை

பாபநாசம் அரசு பணிமனையில் நேற்று பஸ்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது. அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கோபால குமரேசன், மகேஸ்வரன், அருணாச்சல முருகன் ஆகியோர் தலைமையில் பஸ்கள் அனைத்துக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பணிமனை வாயில், அலுவலகம் மற்றும் ஓய்வறைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த பஸ்களை பராமரிப்பதற்காக ஒரு டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் மற்றும் தூய்மை பணியாளர் உள்ளிட்ட 5 பேர் தினமும் பணியமர்த்தப்பட்டு வந்தனர். இவர்கள் அந்த பஸ்களை இயக்கியும், கிருமிநாசினி தெளித்தும் பராமரித்து வந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 பணிமனைகளில் மொத்தம் 326 பஸ்கள் உள்ளன. விரைவில் பஸ் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், பஸ்களை கழுவி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே தொடர் பராமரிப்பில் இருப்பதால் பஸ்களில் எந்தவித பழுதும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் பஸ்களை மீண்டும் இயக்கியும், பிரேக் உள்ளிட்டவை சரியாக இயங்குகிறதா? என்பது குறித்தும் பரிசோதனை செய்யப்பட்டன. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad