கடலூர், அரியலூர், திருவாரூர் மற்றும் தஞ்சையில் நாளை முழு ஊரடங்கு; கொரோனா சோதனைக்கு ரூ. 4500 மட்டுமே வசூலிக்க வேண்டும்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
கடலூர், அரியலூர், திருவாரூர் மற்றும் தஞ்சையில் நாளை முழு ஊரடங்கு அமல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதில், சென்னையில் அதிக அளவாக 1,082 பேரும், தொடர்ந்து கோவையில் 141 பேரும் மற்றும் செங்கல்பட்டில் 86 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  சென்னையில் கோயம்பேட்டில் தொற்று உறுதி அதிகரித்து வந்தது.  இதனால் கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் மே 18-ம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊடரங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களில் சிலர் பைக், ஸ்கூட்டர் மற்றும்  கார்களில் வெளியே சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் மற்றும் நூதன தண்டனை விதித்தாலும், நாளுக்கு நாள்  பொதுமக்கள் வெளியே வருவது அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறையவில்லை.

குறிப்பாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. இதுபோன்ற நகர் பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 26ம் தேதி காலை 6 மணியில் இருந்து (இன்று) 29ம் தேதி இரவு 9 மணி வரை தொடர்ந்து 4 நாட்களும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் கடந்த 26-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதியானது.  இதன் எதிரொலியாக, கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.  இதனால் நகரில் மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும்.  இந்த ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து திருவாரூரில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.  இதனால் மருந்தகங்கள், பால் கடைகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சரக்கு வாகனங்கள் மூலம் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 2 சிறுவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது முடிவானது.  இதனால், கடலூர், திருவாரூரை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் மருந்தகங்கள், பால் கடைகள் மட்டுமே இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கடலூர், திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை தொடர்ந்து தஞ்சையிலும் நாளை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால், மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் ஆர்பாட்டம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில்,  சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்கக்கோரி சென்னை கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் திடீரென ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி போலீஸ் வாகன முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்ப கோரிக்கை வைத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்களிடம்  போலீஸ் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா சோதனைக்கு தனிநபர் ஒருவருக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ. 4500 மட்டுமே வசூலிக்க வேண்டும்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
கொரோனா சோதனைக்கு தனிநபர் ஒருவருக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ. 4500 மட்டுமே வசூலிக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் ஆய்வகங்கள் ரூ.5,500 முதல் ரூ. 6,000 கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு தரப்பில் 34 ஆய்வகங்களிலும் தனியார் ஆய்வகங்களிலும் 12 தனியார் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு தனியார் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுமதியின்றி வந்த 170 பேருக்கு பரிசோதனை
சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுமதியின்றி வந்த 170 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ள நிலையில்
அனுமதியின்றி வந்த 170 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு சோதனை மாதிரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad