கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: வாட் வரியை 3 மடங்கு உயர்த்துகிறது சவுதி அரேபியா; ஜெர்மனியில் ஊரடங்கை தளர்த்திய பிறகு கொரோனா பரவல் அதிகரிப்பு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: வாட் வரியை 3 மடங்கு உயர்த்துகிறது சவுதி அரேபியா
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலிகளை ஏற்படுத்தி வரும் அதேவேளையில், உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் சரிவடையச் செய்துள்ளது.

உலகம் முழுவதும் தொழில்துறைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் சவுதி அரேபியா பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் சவுதி அரேபியாவின் பட்ஜெட்டில் 9 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.68 ஆயிரத்து 157 கோடி) பற்றாக்குறை விழுந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரிசெய்ய மதிப்பு கூட்டு வரி (வாட் வரி) 3 மடங்கு உயர்த்தப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

அதன்படி வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் பொருட்கள் மீதான வாட் வரி 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதத்துக்கு உயர்த்தப்படும் என நிதி மந்திரி முகமது அல் ஜாதான் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதி சலுகைகள் ஜூன் மாதத்தில் இருந்து நிறுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

கொரோனா பாதிப்பில் இத்தாலி, இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது ரஷியா
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2-ம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து நாடுகள் இருந்தன.

இந்த நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 5-வது இடத்தில் இருந்த ரஷியா, நேற்று இத்தாலி மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு நகர்ந்தது. கடந்த சில நாட்களாக, ரஷியாவில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 11,656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 2 லட்சத்து 21 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 39 ஆயிரத்து 801 பேர் மட்டுமே முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஜெர்மனியில் ஊரடங்கை தளர்த்திய பிறகு கொரோனா பரவல் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் பரவலை வெகுவாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஐரோப்பிய நாடு ஜெர்மனி. இங்கு 1.71 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் கூட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.45 லட்சத்துக்கும் அதிகம். இறப்பு விகிதமும் இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக குறைவு. இதுவரை 7,500 பேர் ஜெர்மனியில் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து அந்நாட்டின் 16 மாகாண அரசுகளும் ‘பொருளாதாரத்தை மீட்க ஊரடங்கு நிபந்தனைகளை தளர்த்தவேண்டும்’ என்று மைய அரசுக்கு நெருக்கடி அளித்தன. இதன் காரணமாக பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கடந்த புதன்கிழமை ஊரடங்கை தளர்த்தி அறிவித்தார். அதேநேரம் அதிக பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் ஊரடங்கு கடுமையாகும் எனவும் அவர் எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜெர்மனியில் கொரோனா தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது. அதாவது சில வாரங்களுக்கு முன்பு வரை, ஒருவர் மற்ற நபருக்கு கொரோனாவை பரப்புவது ஒரு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருந்தது. கடந்த 5 நாட்களில் இது 1.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

“கொரோனா பரவல் அதிகரிப்பது ஆபத்தானது. இதனால் பாதிப்புக்கு உள்ளாவோர் மற்றும் இறப்போர் எண்ணிக்கை உயரும்” என்று சமூக ஜனநாயக கட்சியின் எம்.பி.யும், தொற்றுநோய்த் துறை பேராசிரியருமான கார்ல் லாவ்டர்பாக் ஜெர்மனி அரசை எச்சரித்து உள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad