தர்மபுரி மாவட்டத்தில் கடைகளை திறக்க புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது; நீலகிரி மாவட்டத்தில், 373 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை- கலெக்டர்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

தர்மபுரி மாவட்டத்தில் கடைகளை திறக்க புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கில் செய்யப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் கடைகள், நிறுவனங்களை திறக்க உரிய விதிமுறைகளின்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் நாளை (வெள்ளிக்கிழமை) வரை மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். இதன்படி நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் டீ கடைகள், பேக்கரிகள், உணவகங்களை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கலாம். இந்த கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்.

பூக்கடைகள், மளிகை கடைகளை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கலாம். தர்மபுரி நகராட்சி பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய அனுமதி பெற்ற கடைகள், உழவர் சந்தை மூலம் அனுமதிக்கப்பட்ட நடமாடும் காய்கறி, பழக்கடைகள் செயல்படலாம். கிராமப்புற பகுதிகளில் காய்கறி, பழக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள்

வீட்டு உபயோக எந்திரங்கள் விற்பனை செய்யும் கடைகள், குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகை கடைகள், பெட்டி கடைகள், பர்னிச்சர் கடைகள், கூரியர், பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங், ஜெராக்ஸ் கடைகள், வாகன பழுதுநீக்கும் கடைகள், நாட்டு மருந்து கடைகள், வாகன உதிரிபாக கடைகள், நர்சரி கார்டன்கள், மரக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். சாலையோர தள்ளுவண்டி கடைகள், சிறிய ஜவுளி கடைகளுக்கு நகர்ப்புற பகுதிகளில் அனுமதி இல்லை. கிராமங்களில் இந்த கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.

இதேபோல் கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் நகர்ப்புற பகுதிகளில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். கிராமப்புறங்களில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். செல்போன், கணினி, மோட்டார் எந்திரங்கள், மின்சாதன பொருட்கள், மிக்சி, கிரைண்டர், டி.வி, எலக்ட்ரிக்கல், கணினி, கண் கண்ணாடி விற்பனை, பழுதுநீக்கும் கடைகள் நகர்ப்புற பகுதிகளில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம். கிராமப்புற பகுதிகளில் தினமும் செயல் படலாம்.

பருவமழை தொடங்கும் முன்னரே காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: கலெக்டர் சி.கதிரவன் தகவல்
பருவமழை தொடங்கும் முன்னரே காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பருவமழை தொடங்கும் முன்னரே காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உள்ளாட்சித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 30 சுகாதார ஆய்வாளர்களை கொண்டு அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் முகவரிகள் பெறப்பட்டு மாவட்ட அளவில் தொகுக்கப்பட்டு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பட்டியல் தயார் செய்யப்பட்ட விவரத்தினை வட்டாரம் வாரியாக பிரிக்கப்பட்டு 14 வட்டாரங்கள், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

இந்த முகவரிகள் அடங்கிய கிராமங்களில் வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் 10 பேர் வீதம் 420 களப்பணியாளர்களையும், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் நகராட்சிகளில் 141 களப்பணியாளர்களும் என மொத்தம் 561 களப்பணியாளர்களை கொண்டு வீட்டின் உட்புறமும், வெளிபுறமும் புகை மருந்து அடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொசு புழுக்களை ஒழிப்பதற்கு அபேட் மருந்து தண்ணீரில் ஊற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் கண்ட பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். துண்டு பிரசுரங்கள் மூலம் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை கண்காணிக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உடைந்த பிளாஸ்டிக் பொருள்களில் மழை நீர் தேங்கி அதன் மூலம் கொசு உற்பத்தியாகி, டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது வீட்டில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழித்து சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.

மேலும் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை பிளச்சிங் பவுடரை கொண்டு சுத்தமாக கழுவி உலர்த்திய பிறகு தண்ணீர் பிடிக்க வேண்டும். பிடித்த தண்ணீரை காற்று புகா வண்ணம் துணிகளை கொண்டு கட்டி மூடி வைக்க வேண்டும். டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, உரல், ஆட்டுக்கல் போன்ற வீட்டில் உபயோகப்படாத பொருட்களில் மழைநீர் தேங்காமல் அகற்றிட வேண்டும்.

சுகாதார பணியாளர்கள் வரும்போது வீட்டின் உட்புறம் புகை மருந்து அடிக்க அனுமதி அளித்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எனவே, வீடு வீடாக செல்லும் பொது சுகாதாரத்துறை களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் மீதும், கொசுப்புழு வீட்டில் வளர்ப்பவர்கள் மீதும் பொது சுகாதாரத்துறை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, காய்ச்சல் கண்ட நபர்கள் எவரேனும் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையோ அல்லது அரசு மருத்துவமனையையோ அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ஈரோடு மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றி வளமாக வாழ பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

கொள்ளிடம் சோதனைச்சாவடியில்கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கூடுதல் கலெக்டர் ஆய்வு
கொள்ளிடம் சோதனைச்சாவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தனிமைப்படுத்தும் பணியில்...

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு தேசிய நெடுஞ்சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து வாகனங்களில் வருவோர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை உரிய இடங்களில் தனிமைப்படுத்தும் பணியில் மருத்துவக்குழுவினர், வருவாய்துறையினர், காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர்களை மடக்கி அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை கொள்ளிடம் அருகே உள்ள சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

கூடுதல் கலெக்டர் ஆய்வு

இந்த பணியை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பரிசோதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர்களின் விவரங்களையும் கேட்டறிந்தார். ஆய்வின்போது சீர்காழி தாசில்தார் சாந்தி, ஒன்றிய ஆணையர் இளங்கோவன், ஜான்சன், ஒன்றிய பொறியாளர் உமாமகேஸ்வரி, பணி மேற்பார்வையாளர் திருச்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில், 373 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை- கலெக்டர் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர பிற நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) முதல் துணிக்கடைகள் உள்பட அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம். ஏ.சி. இல்லாத சிறிய துணிக்கடைகள் அனுமதிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் இயங்க அனுமதி இல்லை.

சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணித்து அபராதம் விதிக்க 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வருகிறவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் இருந்து நீலகிரி வருகிறவர்களுக்கு சளி மாதிரி பரிசோதிக்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வர 813 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

அரசு கட்டுப்பாட்டு அறையில் அதற்கான அனுமதி பெற்று வரலாம். வெளிமாநில இ-பாஸ் இருப்பதுடன், தமிழக அரசின் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு வந்தால் சளி மாதிரி பரிசோதிக்கப்படுவதுடன், 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் மையத்தில் கட்டாயம் தங்க வைக்கப்படுவார்கள். வடமாநில தொழிலாளர்கள் 1,941 பேர் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து அழைத்ததால் 40 பேர் மிசோரம், மேகலாயா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் எந்தெந்த மாநிலங்களில் இருந்து வந்து உள்ளனர் என்று கண்காணிப்பு அதிகாரிகள் விவரங்கள் சேகரிக்கின்றனர்.

அம்மாநில அரசுகள் நாங்கள் அவர்களை அழைத்து கொள்கிறோம் என்று அனுமதி தெரிவித்தால், தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். எனவே கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூட வேண்டாம். நீலகிரியில் பிரசவிக்கும் தருவாயில் உள்ள கர்ப்பிணிகள் 373 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வாழ்வாதாரம் பாதித்த ஆட்டோ டிரைவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு கடன்கள் வழங்க புதியதாக 188 சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சை மாவட்டத்தில், இந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தில் 107 பணிகள்
கலெக்டர் தகவல்
தஞ்சை மாவட்டத்தில் இந்த அண்டு குடிமராமத்து திட்டத்தில் 107 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கலெக்டர் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்புப்பணிகள் மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வெளிமாநில பணியாளர்கள் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு விருப்பமுள்ளவர்களின் விவரங்களை வாங்க வேண்டும். தற்போது வரை பீகார், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் உள்பட 30 மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 171 பேர், அவர்களின் சொந்த மாநிலத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

8 சோதனை சாவடிகள்

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு வருபவர்களை மாவட்டத்தின் 8 சோதனை சாவடிகளிலும் தீவிரமாக கண்காணித்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்திருந்தால், அவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். அதன் முடிவு வரும் வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்க வைக்க வேண்டும்.

குடிமராமத்து பணி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டினை மையமாக வைத்து, 5 கிலோ மீட்டர் சுற்றளவில் சீல் வைத்த பகுதியாக கணக்கிடப்படுகிறது. தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் சிரமங்களை குறைப்பதற்காக, பாதிக்கப்பட்டவரின் தெரு மற்றும் தொடர்புடைய தெருக்களை மட்டும் சீல் வைக்கப்பட்ட பகுதியாக கணக்கிடவும், 28 நாட்கள் முடிவுற்று புதிய தொற்றுகள் ஏற்படாமலிருந்தால், அந்த பகுதியை சீல் வைக்கப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கவும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளலாம். குடிமராமத்து திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 107 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உமா மகேஸ்வரி, தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொறுப்பு) டாக்டர். மருததுரை, முன்னாள் முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் வேலுமணி(தஞ்சை), வீராசாமி (கும்பகோணம்), வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad