அரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; தாம்பரத்தில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு; கரூர் மாவட்டத்தில்ஒரே நாளில் கர்ப்பிணி உள்பட 4 பேருக்கு கொரோனா

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

36 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் ஆவர். அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே மொத்தம் 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று 36 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 30 பேர் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் ஆவர். 6 பேர் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.

பரிசோதனை

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள் குறித்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் பரிசோதனை செய்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றில் இருந்து 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை அரியலூர் மாவட்டத்தில் 83 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் அரசு மருத்துவமனையில்கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 35 பேர் வீடு திரும்பினர்
அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 35 பேர் நேற்று வீடு திரும்பினர்.

35 பேர் குணமடைந்தனர்

அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் நோய் தனிப்பிரிவில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

தற்போது அவர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது வீட்டிற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பழங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி 14 நாட்கள் தனிமையில் அவர்களது வீடுகளில் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வருகை புரிந்தவர்களில் 525 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 301 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 224 நபர்களுக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதன் விளைவாக அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும், எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழுவினரின் கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர்.

ஒத்துழைக்க வேண்டும்

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரத்னா கூறுகையில், இன்று (அதாவது நேற்று) அரியலூர் அரசு மருத்துவ மனையில் கொரோனா தொற்று நேரடி பாதிப்பு ஏற்பட்ட 24 ஆண்களும், தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 9 பெண்களும், 2 குழந்தைகளும் என 35 நபர்கள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிற்கு ஒருவர் என வெளியில் வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு என்பதை கடைபிடிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

தாம்பரத்தில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் 6-வது தெருவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி ஏற்றி வந்த ஆட்டோ டிரைவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 6 பெண்கள், 5 ஆண்கள், 2 குழந்தைகள் என 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து இந்த பகுதிக்குள் வெளிநபர்கள் யாரும் செல்லாத வண்ணம் தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.

அதேபோல் கிழக்கு தாம்பரம் சர்மா தெரு பகுதியில் வசிக்கும் 45 வயது காய்கறி வியாபாரி. அவர் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார். அவருடைய மனைவி, 5 வயது மகள் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் உட்பட தாம்பரத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல்லாவரம்

இதேபோல் பல்லாவரம் நகராட்சியில் தனியார் தொலைக் காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 35 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 391 ஆக உயர்ந்தது. இவர்களில் 66 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடர்களையும் தடுமாற வைத்த கொரோனா
பழங்காலத்தில் இருந்தே வானவியலையும், ஜோதிடத்தையும் இரு கண்களாக பாவித்து ஜோதிடர்கள் எதிர்காலத்தை கணித்து கூறி வருகின்றனர். தற்போது ஜோதிடம் பல்வேறு பரிணாமங்களாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஜோதிடவியல் குறித்து பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இளநிலை பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரையிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. எந்தவொரு விழாக்களையும், சுப நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு முன்பாக, ஜோதிடர்களிடம் கருத்துக்களை கேட்டு, சுபமுகூர்த்த தினத்தில் நல்ல நேரத்தில் நடத்துவார்கள். மேலும் திருமணத்துக்காக மணமக்களின் ஜாதகம் மூலம் பொருத்தம் பார்ப்பார்கள். ஒவ்வொருவரும் எந்த தொழில் செய்தால் சிறந்து விளங்கலாம்? முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன? எந்த நேரத்தில் வீடு கட்டும் பணியை தொடங்காலம் என்பது குறித்து ஜோதிடர்கள் கணித்து கூறுவார்கள். இது காலம் காலமாய் நம்பிக்கை சார்ந்த விஷயமாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட விழாக்களும், சுப நிகழ்ச்சிகளும் மட்டுமே எளிமையான முறையில் நடைபெறுகிறது. புதிதாக எந்தவொரு விழாக்களை நடத்துவதற்கும், திருமணத்துக்கு ஜாதகம் பார்ப்பதற்கும் யாரும் முன்வருவது இல்லை. இதனால் ஜோதிட தொழிலை நம்பியுள்ள பலர் வருமானம் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர்.எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடர்களையும் இந்த கொடூர கொரோனா தடுமாற வைத்து விட்டது. இதுதவிர கைரேகை ஜோதிடம், கிளிஜோதிடம் பார்ப்பவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து கோவை நியூசித்தாபுதுர் பகுதியை சேர்ந்த ஜோதிடர் ஆனந்த் பாரதி கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் உள்ளனர். இவர்கள் திருமண விழா, புதுமனை புகுவிழா, காதணி விழா உள்ளிட்ட விழாக்களுக்கு நல்ல நாள், நேரம் பார்த்து குறித்து கொடுப்பார்கள். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்படுவதால், எந்தவித வருமானமும் இல்லாமல் வறுமையில் வாடுகிறோம்.

ஜோதிடர்களை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்கவில்லை. இதனால் அரசின் நிவாரண உதவி எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ரேஷன் கடையில் வழங்கிய ரூ.1,000 மற்றும் உணவுப்பொருட்களை வைத்தே குடும்பத்தை நடத்தி வருகிறோம். எனவே அரசு எங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி 14 போலீசாருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 395 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையை சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் சளி தொல்லையால் அவதி அடைந்த அவர், கடந்த 7-ந் தேதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த பெண் நேற்று அதிகாலையில் இறந்தார். கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இவரே முதல் பலி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நேற்று தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

14 போலீசாருக்கு கொரோனா

இது மட்டுமின்றி 14 போலீஸ்காரர்கள் உள்பட 16 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூரில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த 4-ந்தேதி முதல் 134 பெண் காவலர்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சமூக இடைவெளியுடன் பயிற்சி மேற்கொண்டாலும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்று பரிசோதிப்பதற்காக அவர்களிடம் இருந்து உமிழ்நீர் எடுக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் 10 பயிற்சி பெண் காவலர்கள், அவர்களுக்கு பயிற்சி அளித்த சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு, 2 போலீஸ்காரர்கள் என 14 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிகிச்சை

இதையடுத்து அந்த 14 பேரையும் சுகாதாரத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் கேட்டபோது, கடலூர் காவலர் பயிற்சி பள்ளி தனியாக செயல்பட்டு வருகிறது. அதில் பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் மற்றும் பயிற்சி அளித்த போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிகமாக மூடல்

மற்றவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா உறுதி செய்யப்பட்டதன் மூலம் காவலர் பயிற்சி பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அதன் அருகில் தான் இருக்கிறது. இருப்பினும் அங்கு வேலை பார்த்து வருவோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றார்.

இதையடுத்து தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அங்கு பிளச்சிங் பவுடர் போடுதல் போன்ற சுகாதார பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இருப்பினும் காவலர் பயிற்சி பள்ளிக்கு அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளதால், அங்கு பணியாற்றி வரும் போலீசார் அச்சத்தில் உள்ளனர். இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற 2 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 508 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

குமரியில் தொற்று கண்டறியப்பட்டவக்கீல், கோர்ட்டு ஊழியருக்கு 2-வது பரிசோதனையில் கொரோனா இல்லைபெங்களூரு பெண்ணுக்கு உறுதியானது
குமரியில் தொற்று கண்டறியப்பட்ட வக்கீல், கோர்ட்டு ஊழியருக்கு 2-வது பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவில் தெரிய வந்தது. பெங்களூரு வங்கி பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதிப்பு எண்ணிக்கை

குமரி மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருந்தது. அவர்களில் 6 பேர் மட்டும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு பெண் சென்னையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கேரளாவைச் சேர்ந்த 5 வயது குழந்தை அந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களைத்தவிர முதலில் தொற்று கண்டறியப்பட்ட 16 பேரும் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

இதற்கிடையே சென்னையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்று குமரி மாவட்டத்துக்கு ஆம்புலன்சில் திரும்பிய மயிலாடியைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு மணி நேரம் மட்டுமே சிகிச்சை பெற்ற அவர் இறந்து விட்டார். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டது. மேலும் குமரியில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

முதல் பலி

இந்த நிலையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர் மயிலாடி பகுதியைச் சேர்ந்த வக்கீல். இவர் கடந்த 50 நாட்களுக்கு முன் சென்னை சென்று திரும்பியவர். மற்றொருவர் ஆசாரிபள்ளத்தை அடுத்த பாம்பன்விளையைச் சேர்ந்த பெண். இவர் தஞ்சை மாவட்டத்தில் கோர்ட்டு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் மீண்டும் வேலையில் சேர்வதற்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொரோனா பரிசோதனை சான்று பெற வந்தவர்.

மற்றொருவர் மார்த்தாண்டம் பனிச்சவிளை பகுதியைச் சேர்ந்த பெண். இவர் பெங்களூருவில் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். ஆரல்வாய்மொழி வழியாக வந்தபோது சோதனைச்சாவடி மூலம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இவருடன் வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று இல்லை. எனவே இவருக்கு நேற்று இரவு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடைய வீட்டில் உள்ள தாயார், சகோதரி ஆகியோருக்கும் சளி மாதிரிகள் சேகரித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் குமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.

2 பேருக்கு பாதிப்பு இல்லை

மயிலாடியைச் சேர்ந்த வக்கீல், பாம்பன்விளையைச் சேர்ந்த கோர்ட்டு ஊழியர் ஆகியோருக்கு 2-வது பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா இல்லை என பரிசோதனையில் தெரிய வந்தது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், டாக்டர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டது. ஒருமுறை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, மறுபரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என முடிவு வந்தால் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்து பார்த்து அதிலும் தொற்று இல்லை என்பது தெரிய வந்தால்தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நேற்று இரவு அவர்கள் 2 பேருக்கும் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு இன்று (புதன்கிழமை)தெரிய வரும். அதிலும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டத்தில்ஒரே நாளில் கர்ப்பிணி உள்பட 4 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கர்ப்பிணி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 4 பேர்

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 42 பேர், கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று, குணம் அடைந்து வீடு திரும்பினர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரப்பாளையம் பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், மராட்டிய மாநிலத்தில் இருந்து பள்ளப்பட்டிக்கு வந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் பள்ளப்பட்டியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவருக்கும், 33 வயதுடைய ஒருவருக்கும், 43 வயதுடைய ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் கரூர் அருகே உள்ள உழைப்பாளி நகர் பகுதியை சேர்ந்த 23 வயது கர்ப்பிணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் கர்ப்பிணிக்கு கொரோனா அறிகுறி இல்லாத நிலையில், பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

தடுப்புகள் அமைப்பு

இதையடுத்து உழைப்பாளி நகர் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதுடன் வெளி ஆட்கள் யாரும் அப்பகுதிக்குள் நுழையாமல் இருக்க தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்றது. ஏற்கனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் தற்போது 4 பேரையும் சேர்த்து மொத்தம் 10 பேரும், திண்டுக்கல் மாவட்டதை சேர்ந்த 18 பேரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 29 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகரிப்பு

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலைபார்த்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்கள் மூலம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா மற்றும் அரியலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று களரம்பட்டி, எளம்பலூர், செல்லியம்பாளையம் ஆகிய கிராமங்கள் மற்றும் பெரம்பலூர் நகரம், பெரம்பலூர் வட்டார பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. மேலும் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், பசும்பலூர், சிறுநிலா, பாதாங்கி ஆகிய கிராமங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

27 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பெரம்பலூர் மேரிபுரத்தை சேர்ந்த கூட்டுறவு ஊழியரின் மனைவி, துறைமங்கலம் புதுக்காலனியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மற்றும் 17 கர்ப்பிணிகள் உள்பட 27 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று இருப்பது நேற்று காலை உறுதி செய்யப்பட்டது. இந்த 27 பேரில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 18 ஆகும். இதனால் இம்மாவட்டத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இதில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது தொடர்பில் இருந்துள்ள 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தொற்று ஏற்படும் அபாயம்

இதில் சுமார் 70 பேர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் புதிய வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் கொரோனா வார்டில் தங்கவைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் எவ்வித தடையும் இன்றி, மருத்துவமனைக்கு வெளியே சாதாரணமாக நடமாடுவதாகவும், இதனால் இந்திராநகர், திருநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு கொரோனா தொற்று ஏற் படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வைரலாக செய்தி பரவியது.

அதன்பேரில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கொரோனா வார்டு உள்ள புதிய வளாகத்தில் தெற்கு நுழைவுவாயில், வடக்கு நுழைவு வாயில் ஆகிய இரு பகுதிகளிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா தொற்று மருத்துவ ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்டோரின் ஆய்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை சென்று வந்த 7 வயது சிறுவனுக்கு கொரோனா?
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன், 9 வயது சிறுவன் 2 பேரும் சென்னையில் உள்ள அவர்களது தாத்தா வீட்டில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் அவர்களது தாத்தா இறந்து விட்டார். இதனால் துக்கம் விசாரிக்க இ-பாஸ் மூலம் அந்த சிறுவர்களின் தாய் மற்றும் உறவினர் ஒருவரும், ஆம்னி வேனில் சென்னை சென்றனர். வேனை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஓட்டிச்சென்றார். பின்னர் சென்னையில் இருந்து 2 சிறுவர்கள் உள்பட 5 பேரும் ஜலகண்டாபுரம் திரும்பினார்கள். இது பற்றி தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் நங்கவள்ளி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். மேலும் சளி மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொரோனா அறிகுறி

இந்த நிலையில் 7 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை அந்த சிறுவன் மற்றும் அவர்களது குடும்பத்தினர், வேன் டிரைவர் ஆகியோரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ குழுவினர் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே ஜலகண்டாபுரத்தில் சிறுவன் வசித்து வந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 69 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் நேற்று வரை 46 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 23 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் வல்லத்தை சேர்ந்த 52 வயது பெண் குணமடைந்ததையடுத்து நேற்று வீடு திரும்பினார். தற்போது 22 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

தேங்காய் வியாபாரம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சியை சேர்ந்த ஒருவர் சென்னை மதுரவாயலில் தங்கி இருந்து கோயம்பேடு மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் சொந்த ஊருக்கு வந்தார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், தாசில்தார் அருள்பிரகாசம், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பாலசுப்பிரமணியன், ரவிச்சந்திரன், ஒன்றிய குழு தலைவர் பழனிவேல், துவரங்குறிச்சி ஊராட்சி தலைவர் மல்லிகா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசித்து வந்த பகுதிகளை பார்வையிட்டனர். இதையடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டவர் வீட்டில் இருந்து அதிராம்பட்டினம் சாலையின் இருபக்கமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன.

மூதாட்டிக்கு தொற்று

கும்பகோணம் தோப்புத்தெருவை சேர்ந்த 64 வயது மூதாட்டி தனது மகளின் பிரசவத்திற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் அந்த மூதாட்டி உறவினரின் திருமணத்திற்காக கடந்த 10-ந் தேதி கும்பகோணம் வந்தார். அப்போது தஞ்சை மாவட்ட எல்லையான, நீலத்தநல்லூர் கொள்ளிடம் பாலத்தில் உள்ள சோதனை சாவடியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என சுகாதார துறையினர் பரிசோதனை செய்தனர்.

நேற்று வந்த பரிசோதனை முடிவில் அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த மூதாட்டியை சுகாதாரத்துறையினர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சுகாதாரத்துறையினர் தோப்புத்தெரு முழுவதும் ‘சீல்’ வைத்து அடைத்தனர். அந்த மூதாட்டியுடன் வசித்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில், பெண்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு
தேனி மாவட்டத்தில் கடந்த 10-ந்தேதி வரை 59 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் போடியை சேர்ந்த ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 42 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் 16 பேர் பெரியகுளம், ஜெயமங்கலம், கெங்குவார்பட்டி அருகில் உள்ள கோட்டார்பட்டி, ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சேடப்பட்டி, தேக்கம்பட்டி, ஓடைப்பட்டி, போடி, உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 3 பெண்கள் உள்பட 6 பேர் ஓடைப்பட்டியை சேர்ந்தவர்கள். மற்றொருவர் தேவதானப்பட்டியை சேர்ந்தவர்.

ஓடைப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய தெருவில் வசிக்கும் மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அதே தெருவில் வசிக்கும் 6 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தேவதானப்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபருக்கு வயது 43. அவர் குஜராத்தில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வசித்து வந்த குடியிருப்பு பகுதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அப்பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரே நாளில் 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 6 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 90 ஆக இருந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த 49 வயது நபர் சென்னையில் இருந்து குடும்பத்துடன் தனது மனைவியின் சொந்த ஊரான வடக்கு விஜயநாராயணத்துக்கு வந்தார். தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், அவரை முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கூடங்குளத்தை சேர்ந்த ஒருவர் மும்பையில் குடும்பத்துடன் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் அவர் தனது மனைவி, 2 மகன்களுடன் உரிய அனுமதியுடன் அங்கிருந்து சொந்த ஊரான கூடங்குளம் நோக்கி வந்தார். நெல்லை மாவட்ட எல்லையில் வந்தபோது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஏர்வாடியை சேர்ந்த ஒருவர் மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் நெல்லை மாவட்ட எல்கையான கங்கைகொண்டான் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனால் பாதிக்கப்பட்ட 3 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்தது.

தென்காசி மாவட்டத்தில் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 26 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிவகிரியை சேர்ந்த 27 வயது பெண் 5 மாத கைக்குழந்தையுடனும், புளியங்குடியைச் சேர்ந்த 23 வயது பெண் 2 மாத கைக்குழந்தையுடனும் கொரோனா வார்டில் நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

இந்த நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து கர்ப்பிணி ஒருவர் துக்க நிகழ்ச்சிக்காக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பொய்கை கிராமத்துக்கு வந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் 33 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் குஜராத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேருக்கு கொரோனா பரிசோதனை
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். 112 பேர் குணமடைந்த நிலையில், 2 பேர் மட்டும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் அந்த 2 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். 114 பேரும் குணமடைந்த நிலையில் தற்போது திருப்பூர் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், வெளிமாநிலம், வெளிமாவட்டங்களுக்கு சென்று வந்தவர்கள் உள்பட பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பிட்ட சிலர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று 2 பேருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் தற்போது 7 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை இவர்களுக்கு கொரோனா தொற்று ஏதும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரி எடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். விரைவில் அவர்களுக்கான முடிவு தெரியவரும். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

கே.வி.குப்பத்தில் லாரி டிரைவருக்கு கொரோனா; பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு ‘சீல்’
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கலை அடுத்த கீழ்முட்டுக்கூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய லாரி டிரைவர். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள வாழைப்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த 9-ந் தேதி இரவு 10 மணிக்கு வாழைப்பழம் லோடு எடுத்துக்கொண்டு சென்னை பூந்தமல்லிக்கு சென்று திரும்பினார். அப்போது சரக்கு இறக்கிய நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அன்றே வீட்டுக்கு அவர் திரும்பினார். இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு அவருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது ஊரில் இருந்து நடந்தே வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, தனக்கு தொற்று இருப்பது குறித்து தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் தாசில்தார் சரவணமுத்து, மண்டல துணை தாசில்தார் சந்தோஷ், கிராம நிர்வாக அதிகாரி குமரன் மற்றும் சுகாதாரத் துறையினர் டிரைவரை அழைத்து ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரின் வீட்டின் முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்குமார், கலைச்செல்வி மற்றும் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்பதற்கான ஸ்டிக்கர் ஒட்டினர். மேலும் அப்பகுதியில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து தாசில்தார் சரவணமுத்து, டிரைவர் வேலை பார்த்த பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சென்று அதை ‘சீல்’ வைத்தார். டிரைவரின் வீடு தனி வீடு என்பதால் அருகில் உள்ளவர்களுக்கு தொற்று பரவி இருக்க வாய்ப்பு குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில், தம்பதி உள்பட 4 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் 40 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 332 பேருக்கு முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 2 பேர் கர்ப்பிணிகள். விருதுநகர் அருகே உள்ள வேப்பிலைப்பட்டியை சேர்ந்த 24 வயது கர்ப்பிணிக்கும், அவரது 29 வயது கணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து திரும்பியவர்கள். இந்த பெண் கன்னிசேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் 1½ மாதங்களுக்கு முன்னர் பெங்களூருவில் இருந்து வந்துள்ளார். அதன் பின்னர் வேறு எங்கும் செல்லவில்லை என்று இவர் கூறினாலும், இவருக்கு நோய் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அருப்புக்கோட்டைக்கு சென்னையில் இருந்து திரும்பிப 39 வயது நபருக்கும் கொரோனாவால் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு அடைந்த வேப்பிலைப்பட்டியை சேர்ந்த கர்ப்பிணியும் அவரது கணவரும் திருத்தங்கலில் உள்ள அந்த பெண்ணின் தாயார் வீட்டில் வசித்து வந்தனர். எனவே சுகாதாரத்துறையினர் வேப்பிலைப்பட்டி கிராமத்திலும், திருத்தங்கல் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியிலும் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதே போன்று அருப்புக்கோட்டை பகுதியில் நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் பகுதியில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான தம்பதி உள்பட 4 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad