அமெரிக்கா, மஸ்கட்டில் இருந்து 324 பேர் சென்னை வந்தனர்; பிரதமர் அறிவித்த 4-வது ஊரடங்கு தேவையா? தேவையில்லையா? பொதுமக்கள் கருத்து; தாளவாடி அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

அமெரிக்கா, மஸ்கட்டில் இருந்து 324 பேர் சென்னை வந்தனர்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டது. தமிழகத்தில் தங்கி இருந்த வெளிநாட்டு பயணிகள் அவர்களது சொந்த நாட்டுக்கு சிறப்பு விமானங்கள் மூலமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதேபோல் ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தின் மூலம் 60-க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

அதன்படி துபாய், குவைத் மற்றும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு இயக்கிய 4 சிறப்பு விமானங்களில் 710 பேர் அழைத்து வரப்பட்டு தனியார் கல்லூரி மற்றும் ஓட்டல்களில் 14 நாள் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்காவில் சிக்கி தவித்தவர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானம் மும்பை வழியாக சென்னை வந்தது. இந்த விமானத்தில் 6 குழந்தைகள், 48 பெண்கள் உள்பட 141 பேர் வந்தனர். அதேபோல் மஸ்கட்டில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் 27 குழந்தைகள், 50 பெண்கள் உள்பட 183 பேர் வந்தனர்.

இவர்களுக்கு குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை முடிந்த பின்னர் விமான நிலையத்திலேயே தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலமாக 324 பேரும் சென்னை மற்றும் புறநகரில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்த அழைத்துச்செல்லப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் இவர்கள் யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும். தொற்று இல்லாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்து பின்னர் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் தமாமில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கொச்சி வந்த சிறப்பு விமானம் பயணிகளை கொச்சியில் இறக்கிவிட்டு சென்னை வந்தது. இந்த விமானத்தில் வந்த விமானி, ஊழியர்கள் உள்பட 14 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து 4 ரெயில்கள் மூலம் வடமாநில தொழிலாளர்கள் 2,301 பேர் சொந்த ஊர் பயணம்
வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், இந்த வடமாநில தொழிலாளர்கள் தொழில்கள் இன்றி முடங்கினர். இதனையடுத்து ஏராளமானோர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில், சொந்த ஊர் செல்ல விரும்பும் வெளிமாநிலத்தினர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஆன்லைனில் பதிவு செய்தவர்களை சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதன் முதலாக காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்ட், பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

பீகார், அசாம், ஜார்கண்ட்

இந்தநிலையில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 9-ந் தேதி முதல் கட்டமாக ஒடிசா மாநிலம் பூரிக்கு 1,038 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 10, 12-ந் தேதிகளில் மணிப்பூர், ஆந்திரா, மராட்டியம், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மூலம் அந்தந்த மாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று 4-வது கட்டமாக சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு பீகார் மாநிலம் பூர்னாவுக்கும், மாலை 4 மணிக்கு பீகார் மாநிலம் பரோனிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்களில் முறையே 1,092 மற்றும் 1,209 என மொத்தம் 2,301 தொழிலாளர்கள் பீகார் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, இரவு 9 மணிக்கு அசாம் மாநிலம் கவுகாத்திக்கும், இரவு 11 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்களில் சுமார் 1,200 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாளவாடி அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தமிழக-கர்நாடக எல்லையில் உள்ளது சாம்ராஜ்நகர் மாவட்டம். இங்குள்ள குண்டல்பேட்டை தாலுகா சவுதஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவமல்லப்பா. விவசாயி.

இவரது வீடு, தோட்டம் குண்டல்பேட்டை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. தோட்டத்தில் அவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை சிவமல்லப்பாவின் 3 ஆடுகளை கடித்து கொன்றது. ஒரு கன்றுக்குட்டியை கடித்து காயப்படுத்தியது.

சிறுத்தையின் அட்டகாசத்தால் அந்த பகுதி விவசாயிகள் பீதியடைந்தனர். கடந்த 2 வாரங்களாக அந்த பகுதியில் இந்த சிறுத்தையின் அட்டகாசம் தொடர்ந்தது.

எனவே அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று சாம்ராஜ்நகர் மாவட்ட வனத்துறையினர் சிவமல்லப்பாவின் தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூண்டு வைத்தனர். அதில் ஒரு ஆட்டையும் கட்டிப்போட்டனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறதா? என கண்காணித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் அங்கு சென்று கூண்டை பார்த்தனர். அப்போது கூண்டில் சிறுத்தை சிக்கியது தெரிய வந்தது. ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட அந்த சிறுத்தை பயங்கரமாக உறுமியது.

இதைத்தொடர்ந்து அந்த சிறுத்தையை வனத்துறை வாகனத்தில் ஏற்றி பந்திப்பூர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். கூண்டை திறந்து விட்டதும் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் பாய்ந்து சென்றது.

அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அந்தப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்வு: ஈரோட்டில் வழக்கம் போல் இயங்க தொடங்கிய வாகனங்கள்
ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. பெரிய கடைகள், நிறுவனங்களை தவிர பெரும்பாலான சிறிய கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது. இதேபோல் குறைவான தொழிலாளர்கள் உதவியுடன் தனியார் நிறுவனங்களும் செயல்பட தொடங்கி உள்ளன. ஆனால் பஸ் போக்குவரத்து தொடங் கப்படாததால் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சென்று வருகிறார்கள். இதன் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், ஈரோட்டில் வாகனங்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கியதாகவே தெரிகிறது.

ஈரோடு காளைமாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, சுவஸ்திக் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தியபோது அடைக்கப்பட்ட சாலைகள் தற்போதும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வானங்கள் குறுக்கும், நெடுக்குமாக செல்கின்றன. இதேபோல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மேம்பாலமும் அடைக்கப்பட்டு உள்ளது. காலை, மாலை நேரத்திலாவது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மேம்பாலத்தை திறந்து விடலாம் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தவர்களுக்கு பரிசோதனை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் அங்கு வேலை செய்து வந்த பலரும் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்த அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தது.

மருத்துவ பரிசோதனை

இதையடுத்து சொந்த ஊருக்கு செல்லும் வடமாநிலத்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் வைத்திருந்தால் தான் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லம், வடகால், பகுதியில் தங்கி உள்ள மேகாலயா மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 32 பேருக்கு ஸ்ரீபெரும்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து குமரி திரும்பிய 1,800 பேரின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தீவிரம்
வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து குமரி திரும்பிய 1,800 பேரின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் வருவாய்த்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

தனிமைப்படுத்தல்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 3-வது கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட பிறகு ஏராளமானோர் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து குமரிக்கு வருகின்றனர். அவர்களுக்கு குமரி மாவட்ட எல்லைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதில் கொரோனா தொற்று கண்டறியப்படுபவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். தொற்று இல்லாதவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பி வைக்கிறார்கள்.

ஸ்டிக்கர் ஒட்டும் பணி

இவ்வாறு கடந்த 3-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 1,800 பேர் குமரி மாவட்டம் திரும்பி உள்ளனர். அவர்களுடைய வீடுகளில் வெளி மாநிலம், வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதை அப்பகுதி மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், சுகாதாரத்துறையினர் அடையாளம் காணும் வகையிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் வருவாய்த்துறையைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று நாகர்கோவில் வடிவீஸ்வரம், தளவாய்புரம், புன்னைநகர் உள்ளிட்ட நகர பகுதி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்டி க்கர்கள் ஒட்டும் பணி நடந்து வருகிறது.

சேலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் பெரும்பாலான கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் பெரும்பாலான கடைகள் திறக்கப் பட்டுள்ளன.

குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய ஓமியோதிபதி மாத்திரைகளையும், கபசுர குடிநீரை பயன்படுத்துமாறும் அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாய பொடிகளை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாட்டு மருந்துக்கடைகள்

அதேநேரத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாத பொதுமக்கள், சின்னக்கடை வீதியில் உள்ள நாட்டு மருந்துக்கடைகளில் நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் பொடிகளை வாங்கி செல்கிறார்கள். கடந்த 45 நாட்களாக நாட்டு மருந்துக் கடைகள் அதிகமாக உள்ள சின்னக்கடை வீதியில் எந்தவித கடைகளும் திறக்கப்படவில்லை. ஆனால் தற்போது சின்னக்கடை வீதியில் அனைத்து விதமான கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் அங்குள்ள நாட்டு மருந்துக் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் தினமும் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக அந்த கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று கொண்டு நாட்டு மருந்துகளை வாங்கி செல்வதை காணமுடிகிறது.

சமூக இடைவெளி

இதேபோல் சேலம் நகரில் உள்ள சில ஏ.டி.எம். மையங்களிலும் பெண்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வரிசையில் நின்று பணம் எடுத்து செல்வதையும் காணமுடிகிறது. கொரோனா வைரசை இன்னும் கட்டுப்படுத்த முடியாத சூழலில், பொதுமக்கள் அனைவரும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது அவசியமாகும்.

எனவே, சின்னக்கடை வீதியில் உள்ள கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் எனவும், அரசு உத்தரவை மீறி வியாபாரம் செய்யும் நாட்டு மருந்துக் கடைக்காரர்கள் மீதும், முக கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பொது இடங்களில் கடைபிடிக்காமல் செயல்படும் பொதுமக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் அறிவித்த 4-வது ஊரடங்கு தேவையா? தேவையில்லையா? பொதுமக்கள் கருத்து
பிரதமர் அறிவித்த 4-வது ஊரடங்கு தேவையா? தேவையில்லையா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அத்தியாவசியம் இல்லாத பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளையும் குறிப்பிட்ட நேரம் திறக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும். அந்த ஊரடங்கில் புதிய வழிமுறைகள் பின்பற்றப்படும் என்றும், அதுகுறித்து வருகிற 18-ந் தேதிக்கு முன் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து திருச்சி மாவட்ட பொதுமக்கள் கூறிய கருத்துகளின் விவரம் வருமாறு:-

சமூக ஆர்வலர் ரவிக்குமார்(சோமரசம்பேட்டை):- 3 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு விட்டது. நான்காவது முறையாகவும் நீட்டிக்கப்பட்டால் நாட்டில் வாழ்வது எப்படி? என்ற கேள்வி தான் எழுகிறது. கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள் என்று மத்திய மந்திரி ஏற்கனவே கூறிவிட்டார். பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நான்காவது முறையாக பிறப்பிக்கப்பட உள்ள ஊரடங்கு உத்தரவு மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார். மக்களை வாழவிடுவதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்.

வக்கீல் லட்சுமி பிரியா(தில்லைநகர்):- நமது நாட்டின் 4 தூண்களில் முதன்மையான நீதித்துறை வரலாற்றில் சுமார் 50 நாட்களாக கோர்ட்டுகள் மூடப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என சொல்லப்படுவது உண்டு. பல வழக்குகளில் தீர்ப்பு கூறப்படாமல் உள்ளன. வாய்தா தேதிகள் ஒத்தி வைக்கப்பட்டுக்கொண்டே செல்வதால் வழக்காடிகளுக்கு வக்கீல்களாகிய நாங்கள் பதில் சொல்ல முடியவில்லை. அத்தியாவசிய வழக்குகளில் மட்டுமே ஆன்லைன் மூலமும், காணொலி காட்சி மூலம் விசாரணைகள் நடக்கின்றன. ஊரடங்கினால் வியாபாரிகள், தொழிலாளர்கள் மட்டும் இன்றி வக்கீல்களாகிய நாங்களும் வருவாய் இழந்து தவிக்கிறோம். இனியும் ஊரடங்கு நீடித்தால் எப்படித்தான் சமாளிக்க போகிறோம் என்றே தெரியவில்லை.

கட்டுப்படுத்த முடியும்

ஒலி, ஒளி அமைப்பாளர் நாராயணன்(வையம்பட்டி):- கொரோனா குறித்த இந்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இனியும் நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இருப்பினும் இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்தால் மட்டும் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும். பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும்.

இல்லத்தரசி சுஜிதா(நெ.1டோல்கேட்):- கொரோனா தொற்றை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்த 3 கட்ட ஊரடங்கு உத்தரவை மக்கள் யாரும் விழிப்புணர்வுடன் கடை பிடிப்பதாக தெரியவில்லை. மூன்றாவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட இந்த சூழலில்தான் நோய் தொற்று காட்டுத்தீபோல் பரவி வருவது தெரிகிறது. இதனால் கொரோனா கிருமி மிகவும் ஆபத்தானது என உணர்த்தியிருக்கிறது. எனவே இந்த சமயத்தில்தான் நாம் மிக கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இதன் வீரியத்தை மக்கள் புரிந்துகொண்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நோய் தொற்று சமூக பரவல் எனும் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டால் மிகப்பெரிய உயிரிழப்பை சந்திக்க நேரிடும். எனவே புதிய கட்டுப்பாடுகளுடன் நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அது வரவேற்க்கத்தக்கது.

கூலித்தொழிலாளி பாண்டி(மணப்பாறை):- கூலி வேலை செய்து வரும் சூழ்நிலையில் இந்த ஊரடங்கு என்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? படாதா? என்பதெல்லாம் தெரியவில்லை. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் என்னை போன்ற தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஆகவே ஏழை, எளிய மக்களின் வாழ்வு பாதிக்கப்படாத வகையில் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு வழிவகுக்க வேண்டும்.

இல்லத்தரசி பாமா(துறையூர்):- ஊரடங்கு உத்தரவால் பெருமளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நோய்த்தொற்று பரவுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. 144 தடை உத்தரவு காலங்களில் வழங்கப்படும் நிவாரணம் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும். ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் முடிவு பொதுமக்களின் உயிரை பாதுகாப்பதாக அமைந்துள்ளது. இதனால் மக்களுக்கு சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நன்மை தருவதாகவே அமைந்துள்ளது. சில நேரங்களில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் பொதுமக்கள் மீண்டும் எழுச்சியுடன் பணிபுரிய உயிர் இருந்தால் போதுமானது.

விவசாய சங்க பிரதிநிதி ஆசைத்தம்பி(லால்குடி):- ஊரடங்கால் பொதுமக்களிடையே பணப்புழக்கம் இல்லாததால் விவசாயிகள் தங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யமுடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள நகைக்கடன், பயிர்கடன் மற்றும் ஏழை மாணவ, மாணவிகளின் கல்வி கடனை தள்ளுபடி செய்ய விரைந்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஊரடங்கு காலத்தில் உரம், பூச்சி மருந்து, விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களை 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad