தமிழகத்தில் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: 25 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிப்பு - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: 25 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிப்பு - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 
தமிழகத்தில் நேற்றுடன் 3வது கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி அறிவித்தார். மேலும் விமானம், ரயில், பஸ், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயங்க அனுமதி இல்லை. 25 மாவட்டங்களில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வு இல்லை என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மார்ச் மாதம் 25ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் தேசிய ஊரடங்கை அறிவித்தது.

முதல் ஊரடங்கை பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு அறிவித்தார். அதையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. எனினும் இந்திய அளவில் கொரோனா பாதிப்பு  90 ஆயிரத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் மத்திய நிதியமைச்சர் 20 லட்சம் கோடிக்கான நிவாரணத்தை கடந்த நான்கு நாட்களாக 4மணிக்கு அறிவித்து வந்தார். இன்றுடன் ஊரடங்கு முடிவதால்5வது அறிவிப்பை ேநற்று காலையில் அறிவித்தார். இந்நிலையில் இன்று ஊரடங்கு முடிவதால் மத்திய அரசு ேநற்று மதியம் வரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் 2ம் இடத்தில் இருக்கும் தமிழகம் ஊரடங்கு நீட்டிப்பை சில தளர்வுகளுடன் அறிவித்தது. அதாவது மே 17ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதே சமயம் ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்புள்ள சென்னை உள்பட 12 மாவட்டங்களில் தளர்வு அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: மத்திய அரசு, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமல்படுத்தியதை தொடர்ந்து, தமிழக அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.

மேலும், மத்திய அரசு இந்த ஊரடங்கை 17.5.2020 வரை (நேற்று) நீட்டித்து உத்தரவு பிறப்பித்ததை பின்பற்றி தமிழ்நாடு அரசும் இதை நடைமுறைப்படுத்தியது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி மாவட்ட கலெக்டர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 14ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவுகளின் அடிப்படையிலும், கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு வருகிற 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்: ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்:

விமானம், ரயில், பஸ், ஆட்டோ, டாக்ஸி ஓட அனுமதி இல்லை
* கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிப்பு
* சென்னை, காஞ்சி. திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் தளர்வு இல்லை

25 மாவட்டங்களில் தளர்வுகள்

ஊரடங்கை படிப்படியாக விலக்குவதற்கு பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் பரிந்துரையின்படி கீழ்க்கண்ட தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது:-

* கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு மட்டும் கீழ்க்கண்ட சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன:

* அந்தந்த மாவட்டங்களுக் குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் ‘டி.என். இபாஸ்’ இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது.

* மாவட்டத்துக்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேன்களில் 7 பேர்

* ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு சென்றுவர ‘டி.என். இபாஸ்’ பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.

* அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் (வாகன ஓட்டுனர் தவிர) செல்ல அனுமதிக்கப்படுகிறது.

* மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் ‘டி.என். இபாஸ்’ இல்லாமல் வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.

* தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

100 பணியாளர்களுக்கு அனுமதி

* தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

* சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில், 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

டாக்சி, ஆட்டோவுக்கு விலக்கு

* ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டு இருக் கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி.

* 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்கு அளிக்கப்படுகிறது.

* தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடமும், சென்னை மாநகர கமிஷனரிடமும் அனுமதி பெற வேண்டும்.

* மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் ‘டி.என். இபாஸ்’ உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்றுவர பயன்படுத்தப்படும் டாக்சி, ஆட்டோவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும். அவை வருமாறு:-

* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.

* வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

* பொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்), உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங் கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.

* அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

* பொதுமக்களுக்கான விமானம், ரெயில், பஸ் போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான ரெயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கான ரெயில் போக்குவரத்து ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது. (மத்திய, மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், ரெயில், பொதுப் பேருந்து போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.)

* டாக்கி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா.

* மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்.

* தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள்.

* இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது.

* திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் தளர்வு இல்லை

* சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடு நடைமுறைகள் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை.

* நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

* தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

* பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.

* பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்.

* கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அ.தி.மு.க. அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad