20 லட்சம் கோடி பேக்கேஜ் - முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
20 லட்சம் கோடி பேக்கேஜ் - முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்இந்தியாவில் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிப்பது பற்றியும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று தெலுங்கானா, அசாம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கேட்டுக்கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ஒரே ஒரு வைரஸ் உலகையே உருக்குலைத்ததுடன் இரண்டே முக்கால் லட்சம் பேர் பலியானதையும் கோடிக்கணக்கான உயிர்கள் நெருக்கடியை சந்தித்து வருவதையும் உருக்கத்துடன் குறிப்பிட்டார்,
மனித இனம் வைரஸிடம் தோல்வியை ஒப்புக்கொள்ளாது என்ற அவர், நம்மை காத்துக் கொண்டு முன்னேற வேண்டியது அவசியம் என்றார். இந்த நெருக்கடி இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது. சுயசார்புடைய இந்தியா என்பதே நமது ஏற்றத்துக்கு ஒரே வழி என்று கூறிய மோடி, இதற்குப் பிறகு இந்தியாவை மிகச் சிறந்த தேசமாக வடிவமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கொரோனாவுக்கு முன் இந்தியாவிடம் ஒரு பிபிஇ கருவி கூட இல்லை என்றும் தற்போது நாளொன்றுக்கு 2 லட்சம் பிபிஇ உபகரணங்களும், 2 லட்சம் என்95 முகக்கவசங்களும் தயாரிக்கப்படுவதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
21-ம் நூற்றாண்டு நம்முடையதே என்பதை வலியுறுத்தியதுடன், தோல்வி என்பதே நம்மிடம் கிடையாது என்றும் மோடி கூறினார். யோகா உள்ளிட்ட மருத்துவ முறைகள் கொரோனாவுக்கு எதிரான புதிய நம்பிக்கைகளை விதைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
பொருளாதாரம், கட்டமைப்பு, தொழில்நுட்பம், வலிமை, தேவை ஆகிய ஐந்து தூண்களாலேயே இந்தியாவின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய மோடி, கொரோனா பாதிப்புக்காக இதுவரை அறிவிக்கப்பட்ட நிதித்தொகுப்பையும் சேர்த்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய் புதிய தொகுப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். இதுகுறித்து நிதி அமைச்சர் நிர்மலா விளக்குவார் என்றார்.இந்த நிதித்தொகுப்பு சுயசார்புடைய இந்தியாவை கட்டமைப்பதில் மிக முக்கிய பங்காற்றும் என்றும் மோடி சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய மோடி, ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மே 18ம் தேதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.
நீண்ட நாள் நீடிக்கவுள்ள கொரோனா நம்மை பாதிக்காமல் இருக்க முகக்கவசம் மற்றும் தனிமனித விலகலை கடைப்பிடித்து அதனை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறிய பிரதமர், நான்காவது ஊரடங்கானது மாநில அரசுகளின் கருத்துக்கள் அடிப்படையில், புதிய வடிவில் இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில், பிரதமர் மோடி கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை வெளியிடுகிறார். அதற்கான விரிவான விளக்கங்களையும் அவர் தருகிறார்.