பிளஸ்-1 முடித்த இரட்டை சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை; செல்போனில் ‘பப்ஜி’ விளையாடிய கல்லூரி மாணவர் திடீர் சாவு

பிளஸ்-1 முடித்த இரட்டை சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை
வேலூரை அடுத்த காட்பாடி மாருதி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். கட்டிட என்ஜினீயர். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகன் பத்மகுமார் காட்பாடியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

மகள்கள் பத்மபிரியா, ஹரிப்பிரியா. இரட்டை சகோதரிகளான இருவருக்கும் வயது 17. இருவரும் காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து விட்டு பிளஸ்-2 வகுப்பு செல்ல இருந்தனர். தற்போது பள்ளி சார்பில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. பிளஸ்-2 வகுப்புக்கு ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க நேற்று இருவரும் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றனர். அங்கு இருவரும் ஆன்லைன் வகுப்புகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.

கீழ்தளத்தில் அவர்களுடைய தாயாரும், மகன் பத்மகுமாரும் இருந்தனர். பிற்பகல் 3 மணி ஆகியும் ஹரிப்பிரியா, பத்மபிரியா ஆகியோர் கீழே இறங்கி வரவில்லை. மதிய சாப்பாட்டிற்கு இருவரும் வராததால், தாயார் கவுரி மேலே சென்று அறைகதவை தட்டியுள்ளார். நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது. ஜன்னலையும் திறக்க முடியலை. இதனால் தாயார் பதற்றம் அடைந்தார்.

அதிர்ச்சி அடைந்த பத்மகுமாரும் அக்கம் பக்கத்தினரும் ஜன்னலை உடைத்து பார்த்தபோது இரண்டு சகோதரிகளும் அறையினுள்ளே தனித்தனி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். இதை பார்த்த தாயும், மகனும் கதறி அழுதனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்வையிட்டனர். பின்னர் இருவரின் உடல்களையும் கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வீட்டில் இரட்டைச் சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காட்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனில் ‘பப்ஜி’ விளையாடிய கல்லூரி மாணவர் திடீர் சாவு
இன்றைய தலைமுறையினர் செல்போன் மோகத்தில் மூழ்கி உள்ளனர். அதிலும், பல்வேறு வகையான செல்போன் விளையாட்டுகளுக்கு சிறுவர்கள், இளைஞர்கள் அடிமையாகி இருக்கிறார்கள். இளம் தலைமுறையினரிடையே ‘பப்ஜி’ விளையாட்டு மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஆன்லைன் மூலமாக நண்பர்கள் பலருடன் செல்போன்களில் விளையாடும் இந்த விளையாட்டு, எதிரிகளை தேடி தேடி சென்று சுட்டு வீழ்த்துவதை போன்று அமைந்துள்ளது. இந்த விளையாட்டில் இளைஞர்கள் பலர் தினமும் பல மணிநேரத்தை செலவழித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ஈரோட்டில் செல்போனில் ‘பப்ஜி’ விளையாடியபோது 16 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சதீஸ்குமார் (வயது 16). நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சதீஸ்குமார் செல்போனில் விளையாடுவதில் அதிக நேரத்தை செலவழித்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக கல்லூரி விடுமுறை விடப்பட்டு உள்ளதால் அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு அருகில் உள்ள மாட்டுச்சந்தை திடலில் உட்கார்ந்து சதீஸ்குமார் செல்போனில் ‘பப்ஜி’ விளையாடியதாக தெரிகிறது. நீண்ட நேரமாக விளையாடி கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சதீஸ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கள், ஏற்கனவே சதீஸ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் முடிவில் சதீஸ்குமார் மாரடைப்பால் இறந்தது தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனில் அதிக நேரம் விளையாடியதால் மனஅழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பில் இறந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

‘புளூவேல்’ என்ற விளையாட்டு உலகம் முழுவதும் பரவி பல்வேறு உயிர்களை காவு வாங்கியது. அதேபோல் ‘பப்ஜி’ விளையாட்டிலும் ஈரோட்டில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை மது பழக்கத்தால் விபரீதம்
கரூர் அருகே மது குடிக்கும் பழக்கத்தால், திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் அருகே உள்ள வேடிச்சிப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 33). பெயிண்டரான இவருக்கு சந்தோஷம் (24) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின் கணவன், மனைவி இருவரும், அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். ஜெயபிரகாசுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் புதுமண தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த ஜெயபிரகாஷ், அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை கீழே இறக்கி சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெயபிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த பி.திப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 24). தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதை சஞ்சயின் தாயார் கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குருபரப்பள்ளியை அடுத்த சின்னகுந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் லோகேஷ்வரன்(19). இவர் கோவையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஊரடங்கு உத்தரவால் ஊருக்கு வந்த லோகேஷ்வரனுக்கும், அவரது தாயாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தேன்கனிக்கோட்டை பட்டாளம்மான் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ்(30). தொழிலாளி. மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்ததை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த வெங்கடேஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

போதை ஊசி போட்ட சிறுவன் சாவு: 2 மருந்து கடை உரிமையாளர்கள் மீது வழக்கு
சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 17). இவன் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தான். இவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்கள் 3 பேருடன் அந்த பகுதியில் உள்ள கரட்டிற்கு சென்றான். அங்கு அவன் கையில் போதை ஊசி போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மயக்கம் அடைந்த அவனை நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு சென்று விட்டனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அஜித்குமார் பரிதாபமாக இறந்தான். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனது, நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அஜித்குமார் அதிக போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் கையில் போட்டதும், அதனால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இறந்ததும் தெரியவந்தது.

மேலும் சிறுவர்கள் போதை மாத்திரைகள் மற்றும் ஊசியை எங்கு வாங்கினர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசி ஆகியவற்றை தாதகாப்பட்டி கேட் மற்றும் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள 2 மருந்து கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கியது தெரியவந்தது

இந்த நிலையில் சேலம் மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் குருபாரதி மேற்பார்வையில் மருந்து கட்டுப்பாடு இன்ஸ்பெக்டர்கள் ரேகா, மாரிமுத்து ஆகியோர் நேற்று முன்தினம் தாதகாப்பட்டி கேட் மற்றும் கொண்டலாம்பட்டி பகுதியிலுள்ள அந்த 2 மருந்து கடைகளிலும் சோதனை நடத்தினர்.

இதையடுத்து அந்த மருந்து கடைகளின் உரிமையாளர்கள் மீது மருந்தாளுநர் இல்லாமல் மருந்து கொடுத்தல், மருந்து பதிவேடுகள் முறையாக பராமரிப்பது இல்லை, பில் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்தல், டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த கடைகளிலிருந்து மாத்திரைகளை பரிசோதனைக்கு எடுத்துச்சென்றனர். மேலும் அந்த மருந்து கடை உரிமையாளர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad