ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்-மந்திரிகளுடன் மோடி இன்று ஆலோசனை; டெல்லியில் இருந்து சென்னை உள்பட 15 நகரங்களுக்கு ரெயில் போக்குவரத்து நாளை தொடங்குகிறது
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்-மந்திரிகளுடன் மோடி இன்று ஆலோசனை
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவ்வப்போது நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 1½ மாதம் ஆகிவிட்ட போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பாதிப்புக்கு பிறகு அவர் மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துவது இது 5-வது தடவை ஆகும். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். வெளிமாநிலங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மூலம் குக்கிராமங்களிலும் கொரோனா தொற்றும் பரவும் ஆபத்து இருப்பதால், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதுதான் நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இதற்கிடையே, கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மேற்கு வங்காளத்தில் ஊரடங்கை 21-ந் தேதி வரை அந்த மாநில அரசு நீட்டித்து உள்ளது.
வருகிற 25-ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ஊரடங்கை மே 30-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரி முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு வங்காள இமாம்கள் சங்கத்தின் தலைவர் முகமது யாகியா கடிதம் எழுதி உள்ளார். மத்திய அரசிடமும் இதே கோரிக்கையை எழுப்ப வேண்டும் என்று மம்தா பானர்ஜியை கேட்டுக் கொண்டுள்ள அவர், இந்த விஷயத்தில் முஸ்லிம் தலைவர்கள் அரசுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும், மக்களின் உயிரை பாதுகாப்பது முக்கியம் என்றும் கூறி உள்ளார்.
எனவே மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், தொழில் நிறுவனங்களின் எதிர்காலம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசிப்பார் என்றும், அதன் அடிப்படையில் ஊரடங்கை விலக்கிக் கொள்வதா? அல்லது சில கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பதா? எந்தெந்த பகுதிகளில் நீட்டிப்பது? என்பது பற்றி மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் இருந்து சென்னை உள்பட 15 நகரங்களுக்கு ரெயில் போக்குவரத்து நாளை தொடங்குகிறது
கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1-ந் தேதி முதல் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் ரெயில் போக்குவரத்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் தொடங்குவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் வகையில் 12-ந் தேதியில் (நாளை) இருந்து ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது நாளை டெல்லியில் இருந்து 15 ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுகின்றன.
இந்த ரெயில்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், ஆமதாபாத், செகந்திராபாத், திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேசுவரம், மட்கோன், ஜம்முதாவி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில்கள் அங்கு சென்றுவிட்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பி வரும்.
இந்த ரெயில்களில் பயணம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள முகவரியில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும். இதற்கான முன்பதிவு இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
ரெயில் நிலைய கவுண்ட்டர்களில் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது. அவை மூடப்பட்டு இருக்கும். மேலும் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட்டும் வழங்கப்படாது.
டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படும். நோய்த்தொற்று இல்லாதவர்கள் மட்டுமே ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ரெயில் புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
கொரோனா நோய்த் தொற்று வார்டாக மாற்றவும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் சிறப்பு ரெயிலுக்காகவும் 20 ஆயிரம் பெட்டிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. எனவே போதிய பெட்டிகள் கிடைப்பதை பொறுத்து பயணிகளுக்காக மேலும் பல சிறப்பு ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் இயக்க தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.