பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கர்ப்பிணிகள் உள்பட மேலும் 13 பேருக்கு கொரோனா; தேனி மாவட்டத்தில், மேலும் 3 பேருக்கு கொரோனா
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
நெல்லையில் புதிதாக 10 பேருக்கு கொரோனா: பாதித்தோர் எண்ணிக்கை 90 ஆக உயர்வுநெல்லை மாவட்டத்தில் முதலில் கொரோனா வேகமாக பரவியது. கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி வரை 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அதன்பிறகு 12 நாட்களுக்கு புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர்.
தற்போது நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கி உள்ளது. நேற்று முந்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்திருந்தது.
இந்த நிலையில் நெல்லையில் மேலும் 10 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை மேலப்பாளையத்தில் 2 வயது சிறுமி, 13 வயது இளம்பெண் உள்பட 6 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் கொரோனா பாதிப்பால் சமீபத்தில் இறந்த 83 வயது முதியவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆவார்கள்.
இதுதவிர நாங்குநேரி யூனியன் காடன்குளம் திருமலாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெற்கு கழுவூரை சேர்ந்த 37 வயது ஆணுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் மும்பை தாராவியில் வசித்து வந்தார். அங்கிருந்து தனது மனைவி மற்றும் மகனுடன் புறப்பட்டு, கடந்த 8-ந்தேதி தெற்கு கழுவூருக்கு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் அய்யப்பன், கிராம நிர்வாக அலுவலர் ஜெபாஸ்டின் வேதக்கண் ஆகியோர் அந்த நபரை பரிசோதனைக்காக முனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் அவரது மனைவி, மகன் உள்பட குடும்பத்தினர் 4 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் வீடு தனிமைப்படுத்தப்பட்டது. மேலும், 5 கிலோ மீட்டர் சுற்றளவில் யாரும் வெளியே செல்லவும், உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது. கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன், யூனியன் ஆணையாளர் பிரமநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், நாங்குநேரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், வடிவேல் முருகன் ஆகியோர் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். நாங்குநேரி தீயணைப்பு வாகனம் மூலம் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனாவால் நேற்று 10 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார். 62 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 27 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கர்ப்பிணிகள் உள்பட மேலும் 13 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கர்ப்பிணிகள் உள்பட மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் 9 பேர்
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தவர்கள் ஆவார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 87 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 95 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று 5 கர்ப்பிணிகள் உள்பட 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு:-
குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட அத்தியூரை சேர்ந்த 28 வயது கர்ப்பிணி, புதுப்பேட்டையை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி, அகரம்சிகூரை சேர்ந்த 21 வயது கர்ப்பிணி, ஒதியம் சமத்துவபுரத்தை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி, குன்னத்தை சேர்ந்த 20 வயது கர்ப்பிணி மற்றும் பெரியம்மாபாளையத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவர், காடூரை சேர்ந்த 42 மற்றும் 55 வயதுடைய 2 பேர், இலுப்பைக்குடியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவர். இதில் கர்ப்பிணிகள் உள்பட 7 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மீதமுள்ள 2 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 ஆண்களும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூரில் 4 பேர்
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே மொத்தம் 271 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மட்டும் அரியலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 4 பேரின் விவரம் வருமாறு:-
வேப்பன்குழியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவர், தத்தனூரை சேர்ந்த 51 வயதுடைய ஒருவர், அரியலூரை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர், தவுத்தாய்குளத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவர்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் மொத்தம் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில், மேலும் 3 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு
தேனி மாவட்டத்தில் 56 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவர்களில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 42 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று திரும்பியவர்கள் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டி, ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்தவருக்கு வயது 39. இவர், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்தவர். கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் எதிரொலியாக சொந்த ஊருக்கு அவர் திரும்பி வந்தார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
மற்றொருவர் தேக்கம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர். அவருக்கு வயது 36. அவரும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று திரும்பி வந்தவர் ஆவார். 3-வதாக பாதிக்கப்பட்டவர் உத்தமபாளையத்தை சேர்ந்தவர். அவருக்கு வயது 42. இவர் தனது மனைவியுடன் காஞ்சிபுரத்தில் காய்கறி விற்பனை செய்து வந்தார். கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பி வந்த நிலையில், அவருடைய மனைவிக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது காய்கறி வியாபாரிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
ஓடைப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் ஓடைப்பட்டியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 2 பெண்கள் உள்பட 5 பேர் நேற்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.