ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு: எவை இயங்கும்? எவை இயங்காது? 1200 வெளிமாநில தொழிலாளர்களுடன் முதல் ரெயில் சேவை தொடங்கியது

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கொரோனா பாதிப்பு குறையாததால் மத்திய அரசு நடவடிக்கை - மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு; கட்டுப்பாடுகள் தளர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

முதல்-மந்திரிகள் கோரிக்கை

பின்னர் 24-ந் தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 25-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். என்றாலும் கொரோனா பரவும் வேகம் குறையவில்லை. இதைத்தொடர்ந்து மே 3-ந் தேதி (நாளை) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டனர்.

மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

அதுபற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை வருகிற 17-ந் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. சில கட்டுப்பாடுகளையும் தளர்த்தி இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

*பேரழிவு மேலாண்மை சட்டத்தின்படி, 3-ந் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம், மிதமாக உள்ள ஆரஞ்சு மண்டலம், பாதிப்பு இல்லாத பச்சை ஆகியவற்றில் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த வழிமுறைகளும் பின்பற்றப்படவேண்டும்.

எவை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை பகுதிகள் ?

இதுவரையில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டமோ அல்லது கடந்த 21 நாள்களாக ஒரு கொரோனா பாதிப்பு கூட கண்டறியப்படாத மாவட்டம் பச்சை மண்டலமாக அறியப்படுகிறது.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆவதும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சிகப்பு மண்டலமாக அறியப்படுகிறது.இந்த இரண்டு வரையறைகளின் கீழும் வராத மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலமாக அறியப்படுகிறது.

தொடரும் தடை:
நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மெட்ரோ, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு உள்ள தடை தொடரும்.
பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள், ஓட்டல்கள், திரையரங்குகள், மால்கள், விளையாட்டு மைதானங்கள், பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள், அரசியல், மத, சமூக நிகழ்வுகளுக்கான தடை தொடரும்.
மத வழிபாட்டுத் தலங்களுக்கான தடைகளும் தொடரும்.
அத்தியாவசியமற்ற பயணங்கள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை கட்டாயம் தடை செய்யப்படுகிறது.
சிவப்பு மண்டலங்களுக்கானத் தளர்வுகள்:
சிவப்பு மண்டலமாக அறியப்பட்ட மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிரவும் அனைத்து பகுதிகளிலும் முழு கட்டுப்பாடுகள் தொடரும்.
சிவப்பு மண்டல மாவட்டங்களில் டாக்ஸி, ஆட்டோ, பேருந்து, சலூன் கடைகள் உள்ளிட்டவைகளுக்கான தடைகள் தொடரும்.
சிவப்பு மண்டலங்களில் ஊரகப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள், சிறு, குறு தொழில்கள், உணவு உற்பத்திதுறை, செங்கல் சூளைகள் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது.
ஊரகப் பகுதிகளில் மால்கள் தவிர்த்த மற்ற அனைத்து விதமான கடைகளுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.
மாநில எல்லைகளில் சரக்கு வாகனங்களைத் தடை செய்யக் கூடாது.
சிவப்பு மண்டலப் பகுதிகளில் தனியார் அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவேண்டும்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் உயர் அதிகாரிகள் அனைவரும் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும். அதற்கு கீழ் நிலையிலுள்ள பணியாளர்களில் தேவைக்கேற்ப 33 சதவீதப் பணியாளர்கள் மட்டும் அலுவலகம் வந்து பணியாற்றவேண்டும்.
சிவப்பு மண்டலங்களிலும் விவசாயம் சார்ந்த பணிகள் முழுவதும் அனுமதியளிக்கப்படுகிறது.
சிவப்பு மண்டலங்களில் தகவல் தொடர்புதுறை, கால் சென்டர், தகவல் மையம், குளிர்பதன மையம், பொருள்களை சேகரித்துவைக்கும் தொழில்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

ஆரஞ்சு மண்டலங்களுக்கான தளர்வுகள்:
ஆரஞ்சு மண்டலங்களில் கூடுதலாக டாக்ஸி இயங்குவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஒரு பயணியுடன் மட்டுமே பயணிக்க வேண்டும்.
குறிப்பிட்ட விஷயங்களுக்கு மட்டும் மாவட்டங்களுக்கு இடையே தனிப்பட்ட முறையில் ஒருவர் பயணிக்க முடியும்.
நான்கு சக்கர வாகனங்களில் அதிகபட்சமாக இரண்டு பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் பின்னால் ஒருவரை அமரவைத்துக்கொள்ளலாம்.

பச்சை மண்டலங்களுக்கான தளர்வுகள்:
பச்சை மண்டலங்களில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
மேலே தடைசெய்யப்பட்டுள்ள முக்கியமான சில நடவடிக்கைகளைத் தவிர்த்து அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.
50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதியளிக்கப்படுகிறது.
எல்லா வகையான சரக்கு வாகனங்களுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. சரக்கு வாகனங்களை மாநில நிர்வாகமோ யூனியன் பிரதேச நிர்வாகமோ தடை செய்யக்கூடாது. அவர்களுக்கு எந்த அனுமதிச் சீட்டும் தேவையில்லை.
மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கூறிய அறிவுரைகளின் படி ஊரடங்கு உத்தரவைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

மாநகராட்சி பகுதி

* மாநகராட்சி பகுதி மாவட்டங்களில் வரும் பட்சத்தில், மாநகராட்சி எல்லைக்குள் வரும் பகுதிகளை ஒரு மண்டலமாகவும், அந்த எல்லைக்குள் வராத மாவட்ட பகுதிகளை மற்றொரு மண்டலமாகவும் பிரிக்க வேண்டும். மாநகராட்சி எல்லைக்கு வெளியே உள்ள பகுதிகளில் 21 நாட்களில் யாருக்கும் புதிதாக நோய்த்தொற்று இல்லை என்றால், அங்கு கூடுதல் பொருளாதார நடவடிக்கைளுக்கு அனுமதி அளிக்கலாம்.

* சிவப்பு மண்டலமும், ஆரஞ்சு மண்டலமும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஆகும். இதை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வாரந்தோறும் வரையறுக்க வேண்டும். இந்த பகுதியில் வசிப்பவர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த பகுதியில் தொற்று எந்த நிலையில் இருக்கிறது? யார்-யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்? என்பதை அறியமுடியும். அந்த பகுதியில் அவசர மருத்துவ மற்றும் அத்தியாவசிய சேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் நடமாட்டத்தை அனுமதிக்கக்கூடாது.

பஸ் போக்குவரத்து

* புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி ரெயில், மெட்ரோ ரெயில், விமான போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்துக்கு தடை நீடிக்கும். ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா, டாக்சிகளுக்கும் தடை நீடிக்கும். சலூன்களை திறக்கவும் அனுமதி இல்லை. என்றாலும் குறிப்பிட்ட சில தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.

* பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு இருக்கும். சமூக, அரசியல், கலாசார, மத வழிபாடுகளுக்காக கூடுவதற்கும் அனுமதி கிடையாது.

* சில குறிப்பிட்ட முக்கியமான காரணங்கள் இருந்தால் மட்டுமே சாலை, ரெயில், விமான பயணத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

* பச்சை மண்டலத்தில், தடை விதிக்கப்பட்டுள்ள சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை தவிர பிற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. அங்கு பஸ் டெப்போக்கள் 50 சதவீத பஸ்களை இயக்கலாம். பஸ்களில் பாதி அளவு பயணிகளையே ஏற்றிச் செல்லவேண்டும்.

வெளியே செல்ல கட்டுப்பாடு

* அத்தியாவசிய நடவடிக்கைகளை தவிர வேறு எதற்காகவும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வெளியே செல்ல கட்டுப்பாடு நீடிக்கும்.

* கொரோனா பாதிப்பு உள்ள அனைத்து மண்டலங்களிலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சுகாதார காரணங்களை தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்லக்கூடாது. வீட்டிலேயே இருக்க வேண்டும்.

* அனைத்து மண்டலங்களிலும் ஆஸ்பத்திரிகள், வெளிநோயாளிகள் பிரிவு சமூக விலகல் விதிமுறையுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சிவப்பு மண்டல பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக மட்டுமே தனி நபர்கள் வெளியே செல்லவும், வாகனங்கள் இயக்கத்துக்கும் அனுமதிக்கப்படும்.

* 4 சக்கர வாகனம் என்றால் டிரைவரை தவிர அதிகபட்சம் 2 பேர் செல்லலாம். இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்ல அனுமதி கிடையாது.

* மதுபானம், புகையிலை பொருள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒரே சமயத்தில் 5 பேருக்கு மேல் கடையில் நிற்கக்கூடாது. குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

* மதுபானம், புகையிலை பொருட்களை பொது இடங்களில் பயன்படுத்த அனுமதி கிடையாது.

கட்டுமான பணிக்கு அனுமதி

* நகர்ப்புறங்களில் கட்டுமானம் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் கிடைத்தால், கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.

* நகர்ப்புறங்களில் வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகளில் அத்தியாவசியம் அல்லாத பொருட்களின் விற்பனைக்கு அனுமதி கிடையாது. என்றாலும் தனியாக உள்ள கடைகள், குடியிருப்பு வளாகங்களில் உள்ள கடைகள் திறந்து இருக்கலாம்.

* ஆன்லைன் வர்த்தகத்தை பொறுத்தமட்டில் சிவப்பு மண்டலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி உண்டு.

* தனியார் அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.

* போக்குவரத்து வசதி செய்து கொடுக்கும் நிலையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்றுமதி மண்டலங்கள், தொழிற்பேட்டைகளில் உள்ள நிறுவனங்கள் செயல்படலாம். பிற தொழிற்சாலைகளை பொறுத்தமட்டில் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சணல், தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ஷிப்டு முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி செயல்படலாம்.

* அனைத்து அரசு அலுவலகங்களும் துணைச் செயலாளர், அதற்கு மேற்பட்ட அந்தஸ்துள்ள அனைத்து அதிகாரிகளின் முழு அளவிலான வருகையுடனும், 33 சதவீத ஊழியர்கள் வருகையுடனும் இயங்கலாம்.

சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி

* போலீஸ், பாதுகாப்பு துறை, சிறைத்துறை, தீயணைப்பு, சுகாதார மற்றும் குடும்ப நல அலுவலகங்கள் கட்டுப்பாடுகள் இன்றி செயல்படலாம்.

* அனைத்து வகையான சரக்கு போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

* சிவப்பு மண்டலங்களில் அச்சு, மின்னணு ஊடகங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், கால் சென்டர்கள், குளிர்பதன கிடங்குகள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

* ஆரஞ்சு மண்டலத்தில் சிவப்பு மண்டலத்தில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் டாக்சி போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் டிரைவருடன் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்.

* கிராமப்புறங்களில் வேளாண்மை, செங்கல் தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

1200 வெளிமாநில தொழிலாளர்களுடன் முதல் ரெயில் சேவை தொடங்கியது
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மார்ச் 24 நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இதேபோல் வெளிமாநிலங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், மற்றும் சுற்றுலா சென்று இருந்தவர்களும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை.

ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக ரயில்வே நேற்று 6 சிறப்பு ரயில்களை இயக்கியது.  கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக ரயில்வே நேற்று 6 சிறப்பு ரயில்களை அறிவித்தது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐதராபாத் -  ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாலை 4.50 மணிக்கு 1200 வெளிமாநில தொழிலாளர்களுடன் முதல் ரயில் புறப்பட்டு சென்றது.

அதன்படி தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி-ஜார்கண்ட் மாநிலம் ஹாதியா, மத்தியபிரதேச மாநிலம் நாசிக்- உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, கேரள மாநிலம் ஆலுவா-ஒடிசா மாநிலம் புவனேசுவரம், நாசிக்-பீகார் மாநிலம் பாட்னா, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்- பாட்னா, கோட்டா-ஹாதியா இடையே தலா ஒரு ரெயில் வீதம் 6 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்தது. இந்த சிறப்பு ரெயில்கள் வழியில் எங்கும் நிற்காமல் செல்லும் என்றும், பயணிகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் சிறப்பு ரெயில் தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளியில் இருந்து புறப்பட்டது. 1,200 பயணிகளை ஏற்றி கொண்ட 24 பெட்டிகளை கொண்ட ரயில் கிழக்கு ஜார்கண்ட் மாநிலத்திற்கு நிற்காமல் பயணிக்கிறது.

ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, பயணிகள் அனைவரும் காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளுக்காக பரிசோதிக்கப்பட்டனர். தொழிலாளர்கள் அனைவரும் ஐதராபாத் நகரில் உள்ள ஒரு சிறந்த பொறியியல் பள்ளியான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஒரு கட்டுமான தளத்தில் பணிபுரிந்தனர்.

72 இருக்கைகள் கொண்ட  ஒவ்வொரு பெட்டியிலும் 54 பேர்பயணம் மேற்கொண்டு உள்ளனர். பொதுப்பெட்டியில்2 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். படுக்கை வசதி கொண்டபெட்டியில் மத்திய படுக்கை பயன்படுத்தப்படவில்லை.

இதேபோல் மகாராஷ்டிராவின் நாசிக் - உபியின் லக்னோவுக்கு இரவு 9.30 மணிக்கு மற்றொரு ரயில் புறப்பட்டு சென்றது. கேரளாவின் அலுவா - ஒடிசாவின் புவனேஸ்வருக்கு மாலை 6மணிக்கும், நாசிக் - மத்தியப் பிரதேசத்தின் போபாலுக்கு இரவு 8 மணிக்கும், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் - பீகாரின் பாட்னாவுக்கு இரவு 10 மணிக்கும், ராஜஸ்தானின் கோட்டா - ஜார்க்கண்டின் ஹாதியாவுக்கு இரவு 9 மணிக்கு ஒரு ரயில் என 5 ரயில்கள் புறப்பட்டு சென்றன. இந்த ரயில்கள் புறப்பட்ட இடம் மற்றும் சேரவேண்டிய இடம் என 2 இடங்களில் மட்டுமே நிற்கும். சமூக இடைவெளியை பின்பற்றி 1000 முதல் 1200 பயணிகளே இந்த ரயிலில் பயணம் செய்தனர்.

ராஜஸ்தானின் கோட்டா மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு தலா ஒரு ரயில்கள் புறப்பட்டு ஜார்க்கண்டுக்கு சென்றன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அடையாள அட்டையுடன்  தகுந்த பயணச்சீட்டுடன் வந்தவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லாத பட்சத்தில் தான் பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டது. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.  இவர்களுக்கான உணவு மற்றும் குடிநீரை அனுப்பிவைக்கும் மாநில அரசு செய்து தந்திருந்தது. . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad