10-ம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்; கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடைபெற்றது
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
10-ம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள இருட்டிபாளையம் கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, 2 ஆயிரம் பேருக்கு அரிசி, பருப்பு, போன்ற பொருட்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மலைப்பகுதியில் வசித்தாலும் அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்து தரப்படும். தேர்வு எழுதிய பின்னர் அவர்களை பஸ் மூலம் வீட்டுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும். நன்றாக தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
மேலும் நிருபர்கள் அமைச்சரிடம், ‘மலை கிராமங்களில் போதிய ஆன்லைன் வசதி இல்லாதபோது அவர்கள் தேர்வுக்கு தயாராகாத சூழ்நிலையில் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது குறித்து என்ன கூறுகிறீர்கள்’? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர், ‘ஏதாவது காரணம் காட்டி தேர்வை தள்ளி வைத்தால் எப்போது 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிட முடியும் என நீங்களே கூறுங்கள்’ என்றார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் - கள ஆய்வுக்குழு அதிகாரிகள் உத்தரவு
கோவை மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.
இதில் கள ஆய்வுக்குழு அதிகாரிகளான புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண்மை இயக்குனர் ஆர்.கஜலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கி, தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கள ஆய்வுக்குழு அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இது பாராட்டுக்குரியது. மாநகராட்சி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மற்றும் அந்தப்பகுதியில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் அந்தப்பகுதிகளில் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்கும் பணியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதை பின்பற்றுவதுடன், கடைகளில் கூட்டம் அதிகமாக கூடுவதை கண்காணித்து, அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
முகக்கவசம் அணியாமல் வெளியே செல்பவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். பிறமாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்து உள்ளவர்களை கண்காணித்து, அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் காந்திமதி (முத்திரைத்தாள்), கலைவாணி (கலால்), நகர்நல அதிகாரி சந்தோஷ்குமார், மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன், சுகாதார துணை இயக்குனர் அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடைபெற்றது
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமை தாங்கினார். கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (அதாவது நேற்று) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் என 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக அரிசி, மளிகை மற்றும் காய்கறிகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி
பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகளான செல்போன் பழுது பார்க்கும் கடைகள், துணிக்கடைகள், இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள், காய்கறி, மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளை சுத்தம் செய்து கண்டிப்பாக கிருமிநாசினி தெளிக்க வேண்டும். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள பொது சுகாதார வளாகங்களை தூய்மையாக வைக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சென்னைக்கு சென்று வந்தவர்கள், பணி நிமித்தம் காரணமாக பிற மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கும், அவர்களை சார்ந்த குடும்ப நபர்களையும் காக்கும் வகையில் தனித்திருந்து நோய்த்தொற்று பரவாமல் மக்களை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்ற சமூக நோக்கில் செயல்பட வேண்டும்.
கிருமிநாசினி தெளிப்பு
மேலும் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சத்தான உணவுகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா, கடலூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, கடலூர் ஒன்றியக்குழு தலைவர் தெய்வபக்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் குமரகுரு எம்.எல்.ஏ. வழங்கினார்
உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பிரமணியன், தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 16 கூட்டுப்பண்ணை குழுக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் டிராக்டர்கள், பவர் டில்லர்கள் மற்றும் வேளாண் எந்திரங்களை வழங்கினார். அப்போது ஒன்றிய வீடு கட்டும் சங்கத்தலைவர் மணிராஜ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரை, ஒன்றியக் குழு முன்னாள் துணை தலைவர் சாய்ராம், வேளாண்மை அலுவலர்கள் ஜோதி ராமலிங்கம், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிவாரண பொருட்கள்
இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர், சேமங்கலம், கீழ்தனியாலம்பட்டு, மேல்தனியாலம்பட்டு, பொய்கை, அரசூர், பருகம்பட்டு ஆகிய கிராமங்களில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 4 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவருடன் விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், முபாரக் அலி பேக், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், தாசில்தார் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.