கொரோனா பாதிப்பு: தென்னிந்தியாவில் தமிழகத்தில் அதிகம் பாதிப்பு ஒரு ஒப்பீடு; 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
கொரோனா பாதிப்பு: தென்னிந்தியாவில் தமிழகத்தில் அதிகம் பாதிப்பு ஒரு ஒப்பீடுஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி மே 12 காலை 9 மணி வரை நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 17,59,579 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மே 11 காலை 9 மணி முதல் மே 12 காலை 9 மணி வரை 24 மணி நேரத்தில் சுமார் 85,891 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
கொரோனா பரிசோதனையைப் பொறுத்தவரையில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது.தமிழகத்தில் இதுவரை 2,54,899 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது,8002 பேர் கொரோனாவால பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,335 மாதிரிகள் முடிவுகளுக்காக காத்திருக்கின்றன.2,051 பேர் குணமடைந்துள்ளனர், 53 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களில் அடுத்த நிலையில் ஆந்திராவிலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தமிழகத்தோடு ஒப்பிடும்போது 75 விழுக்காடு குறைவாகவே அங்கே பாதிப்பு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தெலங்கானாவைத் தவிர கர்நாடகா, கேரளாவில் ஆயிரங்களுக்குள்தான் பாதிப்பு இருக்கிறது.
குணமடைந்தவர்களைப் பொறுத்தவரையில் சதவிகிதத்தின் அடிப்படையில் கேரளாவே முன்னிலையில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 519 பேரில் 492 பேர் குணமடைந்துவிட்டனர். கடந்த சில நாட்களில் நூற்றுக் கணக்கில் புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் குணமடைந்தோர் சதவிகிதத்தில் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கொரோனாவால் மரணமடைந்தவர்கள் தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களில் இறந்தவர்களின் சதவிகிதத்தை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கிறது.
ஆந்திராவில் 1,81,144 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது, மே 12 ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் 2,018 பாதிப்புகள் உள்ளன அதில் 998 குணமாகி உள்ளனர் மற்றும் 45 இறப்புகள் பதிவாகி உள்ளன.
கேரளாவில் கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றாலும் அம்மாநிலம் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கிறது.கேரளாவில் இதுவரை 37,858 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது, மாநிலத்தில் தற்போது 520 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகள் உள்ளன, மற்றும் 4 இறப்புகள் பதிவாகி உள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கோயம்பேடு மூலமாக பரவிய தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனாலும் அதிகமாக பரிசோதனைகள் நடப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார்கள் அதிகாரிகள். ஊரடங்கு தளர்த்தப்பட்டு பெரும்பாலான கடைகள், தனியார் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன.கேரளாவில் கொரோனா ஏறக்குறைய கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பும் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஒன்றே அம்மாநிலத்தின் புதிய சவாலாக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் 6-ல் தொற்றாளர்கள் யாரும் இல்லை. அம்மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
தெலங்கானாவில் மிகக் குறைந்த அளவில் பரிசோதனை செய்துள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய தொற்று உறுதியாகி வருவது பிரச்சினையாக உள்ளது. ஆனாலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடைகள், ஐ.டி. நிறுவனங்கள் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் 35 விழுக்காடு வாகனங்கள் சாலைகளுக்கு வந்துவிட்டன.
ஆந்திராவில் 1,81,144 மாதிரிகளை பரிசோதித்துள்ளது மே 12 ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் 2,018 பாதிப்புகள் உள்ளன, 45 இறப்புகள் பதிவு செய்துள்ளன.
ஆந்திராவில் அதிக பரிசோதனைகள் நடைபெற்றுள்ள போதும் குறைந்த அளவிலேயே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அம்மாநிலத்திற்கு நிம்மதியைத் தந்துள்ளது. அதன் காரணமாகவே பெரும்பாலான கடைகள் காலை முதல் இரவு வரை திறந்துவிடப்பட்டுள்ளன. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில் 1,11,595 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது, 862 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 31 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன.
கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சிவப்பு மண்டல பகுதிகளில் கூட ஆடை தயாரிப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பெங்களூரு, மைசூரு பகுதிகள் மட்டுமே சிவப்பு மண்டலமாக இருக்கின்றன. மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் கூட்டம் அதிகமாக கூடியதால் உணவகங்கள், பார்களில் மதுபாட்டில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை தமிழக அரசு இன்று வெளியிட்டது. ஜூன் 1 முதல் 12 வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2-ல் நடைபெறும்” என்று தமிழக அரசு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளிவைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், “கொரோனா அச்சம் அதிகரித்துள்ள நிலையில் தேர்வு அறிவிப்பு மாணவர்கள் மனதில் மேலும் பதற்றத்தை உருவாக்கும்.போக்குவரத்து வசதிக்கு உத்தரவாதம் இன்றி மாணவர்கள் தேர்வெழுத எப்படி வருவார்கள்?
கொரோனா கட்டுக்குள் வந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகே தேர்வை நடத்த வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை மனரீதியாகத் தயார் செய்தபின் தேதியை அறிவிப்பதே சரியானது” என்று தெரிவித்துள்ளார்.