10-ம் வகுப்பு தேர்வு குறித்த தெளிவான விளக்கம் 19-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி; நாடு முழுவதும் ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து
ஈரோட்டில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாக உள்ளது. மாநில அளவில் கொரோனா பாதிப்பில் 2-வது மாவட்டமாக ஈரோடு இருந்தது. மக்களின் ஒத்துழைப்புடன் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை பணியாளர்கள் போன்றோர்களின் சீரிய பணியினால் கடந்த 29 நாட்களாக மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
தமிழகத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘வாட்ஸ் அப்’ குழு மூலமாகவும், யு-டியூப், கல்வி தொலைக்காட்சி வழியாகவும் தினமும் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. ‘வாட்ஸ் அப்’ வசதி இல்லாதவர்கள் கல்வி தொலைக் காட்சி வழியாக பயன்பெற்று வருகின்றனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சில மாணவ-மாணவிகள் வேறு மாவட்டத்திற்கு சென்று எழுத உள்ளனர். அவர்களுக்கு மாற்று வழிகளை செய்து கொடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இதனை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளோம். இதுதொடர்பான தெளிவான விளக்கம் வருகிற 19-ந் தேதி அறிக்கையாக தெரிவிக்கப்படும்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் நிலையை கருத்தில் வைத்தும்தான் 10-ம் வகுப்பு பொதுதேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டது. குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் தேர்வு முடிவு பெற்று விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கலெக்டர்கள் தலைமையில் தேர்வுகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை.
நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகள் ஜூலை மாதம் தொடங்க உள்ளன. இந்த தேர்வை பொறுத்தவரையில் 2 வாரம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிகள் முடிந்த உடனே 15 நாட்களுக்கு ஒரு முறை மாதிரி தேர்வு நடத்தப்படும். அதில், 3 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு செய்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் தங்கி படிக்க வசதி செய்யப்படும். அப்போது மாணவர்களுக்கு தேவையான உணவு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
இந்த பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.
ஜார்கண்ட், உத்தரபிரதேசத்துக்கு 2 சிறப்பு ரெயில்களில் வட மாநிலத்தவர்கள் 3 ஆயிரம் பேர் பயணம்
ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகள் மீட்டு முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகின்றன.
அவர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்களை ரெயில்வே இயக்கி வருகிறது.
அந்தவகையில் தமிழகத்துக்கு புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களை தமிழக அரசு சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறது. அதன்படி நேற்று ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களுக்கு சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து 2 ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
3 ஆயிரம் பேர்
மாலை 5.30 மணிக்கு 10-வது நடைமேடையில் இருந்து புறப்பட்ட ஜார்கண்ட் ரெயிலில் 1,464 வடமாநிலத் தொழிலாளர்கள் பயணம் மேற்கொண்டனர். அதேபோல் இரவு 7 மணிக்கு உத்தரபிரதேசம் மாநிலத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் என நேற்று மட்டுமே சுமார் 3 ஆயிரம் வட மாநிலத்தவர்கள் சிறப்பு ரெயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்காக சுமார் 3 மணி நேரத்துக்கு முன்பாக ரெயில் நிலையத்துக்குள் பஸ்களில் அழைத்து வரப்பட்ட வட மாநிலத்தவர்களுக்கு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் கள் ரெயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக முகாம்களில் இருந்து கிளம்பும் போது, அனைவருக்கும் தண்ணீர் பாட் டில்கள், உணவு பொட்டலங் கள், நொறுக்குத்தீனிகள் போன்றவை சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன.
நாடு முழுவதும் ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை முன்னிட்டு மெயில்கள், மெட்ரோ, எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து பயணிகள் ரெயில்களும் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. வருகிற 17ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. ஜூன் 30ந்தேதி வரையிலும் ஊரடங்குக்கு பிந்தைய சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும். முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டு நோயாளிகளை கவனிக்க 3 ரோபோக்கள்
மதுரை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு மதுரை மற்றும் விருதுநகரைச் சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, சமூக இடைவெளி அவசியம் என்பதால், நோயாளிகளுக்கு மருந்து, உணவு போன்றவை வழங்குவதில் சிக்கல் இருந்து வந்தது.
இதற்கிடையே அங்கு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்தநிலையில், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, மருந்து பொருட்கள் மற்றும் உணவு, உடை போன்றவற்றை வழங்கி கவனிப்பதற்கு வசதியாக புதிய 3 ரோபோக்கள் தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் சார்பில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. இவை அனைத்தும் ரூ.3 லட்சம் மதிப்பிலானது. 3.2 கிலோ எடையுடைய இந்த ரோபோ ஒவ்வொன்றும், ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருத்துவ பணியாளர்கள் அருகில் சென்று பொருட்களை வழங்குவதற்கு பதிலாக இந்த ரோபோக்கள் பொருட்களை எடுத்துச் செல்லும். 15 கிலோ அளவிற்கு உணவு பொருட்களை எடுத்து செல்லும் திறன்கொண்டது. மேலும் அந்த ரோபோவில் உள்ள கேமராக்கள் மூலம் நோயாளிகளிடம் பேசி மருத்துவ துறையினருக்கு தகவல் அனுப்ப முடியும். இதே போல் டாக்டர்களும் செவிலியர்களும் கூட நோயாளிகளுக்கு சொல்ல விரும்புகின்ற விஷயங்களை வாய்மொழியாக சொல்லி அந்த செய்தியினை நோயாளியிடம் கொண்டு சேர்க்க முடியும்.
இதற்கான அறிமுக நிகழ்ச்சி மற்றும் செயல் விளக்கம் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ரோபோவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினய், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் மருது பாண்டி, டீன் சங்குமணி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ், பா.ஜ.க. மாநில நிர்வாகி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து ரோபோவை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து செவிலியர்களுக்கும் டாக்டர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.