Matrimony OTT-Platforms Jobs Coupons Business

வாகன ஓட்டிகளிடம் ஊரடங்கை மீறி வெளியில் வந்ததாக பணம்-செல்போன் பறித்த போலி போலீஸ்காரர் கைது

ஊரடங்கை மீறி வெளியில் வந்ததாக வாகன ஓட்டிகளிடம் பணம்-செல்போன் பறித்த போலி போலீஸ்காரர் கைது
ஊரடங்கை மீறி வெளியில் வந்ததாக வாகன ஓட்டிகளிடம் பணம்-செல்போன் பறித்த போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

full-width மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த வெள்ளலூரை சேர்ந்த சுரேஷ்கண்ணன் (வயது48) நேற்று முன்தினம் சிவகங்கையை அடுத்த கீழப்பூங்குடி கிராமத்தில் உள்ள தன்னுடைய சகோதரி வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். பெருமாள்பட்டி என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சுரேஷ் கண்ணனை நிறுத்தினார். அவர், மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் என கூறி, ஊரடங்கை உத்தரவை மீறி ஏன் வெளியே வந்தாய்? என மிரட்டியுள்ளார். மேலும் அவரிடம் இருந்த ரூ.7,500-ஐ பறித்துக்கொண்டு மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது.

பின்னர் அந்த வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த மாங்குடி கிராமத்தை சேர்ந்த இளையராஜா (30) என்பவரை மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு அவரையும் மாலையில் மதகுபட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து பெற்று கொள்ளுமாறு கூறிச் சென்றார். தொடர்ந்து சிவகங்கையை அடுத்த சாலூர் கிராமத்திற்கு வந்து அங்கு காய்கறி கடை வைத்திருந்த அல்லியம்மாள் என்ற பெண்ணிடம் தடையை மீறி கடை வைத்ததாக கூறி ரூ.5 ஆயிரத்தை பறித்து கொண்டு அந்த நபர் சென்றதாகவும் தெரியவருகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் பணத்தை கேட்டு சுரேஷ்கண்ணனும், செல்போனை கேட்டு இளையராஜாவும் மதகுபட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். மேலும் அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்திடம் நடந்த விவரத்தை கூறினார்கள்.

விசாரணையில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் யாரும் அவ்வாறு பணம், செல்போனை பறிக்கவில்லை எனவும், போலீஸ் அல்லாத மர்ம நபர் ஒருவர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலி போலீஸ்காரரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவின் பேரில், சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித், அன்சாரி உசேன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில் போலீஸ்காரர் போல் நடித்து பணம் பறித்தது சிவகங்கையை அடுத்த கூட்டுறவுபட்டியை சேர்ந்த அருண்பிரகாஷ் (32) என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அருண்பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அருண்பிரகாஷ் கடந்த பிப்ரவரி மாதம் கீழப்பூங்குடி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்திருந்த உறங்கான்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளார்.

இது தொடர்பாக கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு போலீஸ் போல் நடித்து பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அருண்பிரகாசிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

விருதுநகரை சேர்ந்த டிராவல்ஸ் அதிபரின் காரை திருடி விற்ற 2 பேர் கைது; வாங்கியவரும் சிக்கினார்
விருதுநகர் டிராவல்ஸ் அதிபரின் காரை திருடி விற்ற நாகர்கோவிலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருட்டு காரை வாங்கிய மதுரையை சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் பாண்டியன்நகரை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணா. டிராவல்ஸ் அதிபர். இவரது கார் கடந்த 31-1-2020 அன்று திருடு போனது. இதுகுறித்து அவர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அன்புதாசன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

முரளிகிருஷ்ணா வீட்டின் அருகிலிருந்த கண்காணிப்பு கேமரா தொடங்கி ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவில் நோக்கி கார் சென்றிருப்பது தெரியவந்தது. அதனால் சுமார் 200 கிலோமீட்டர் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கார் நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர் விசாரணையில் காரை நாகர்கோவிலை சேர்ந்த ஆஸ்டின் இன்பராஜ்(வயது40), சுரேஷ்குமார்(36) ஆகியோர் திருடியிருப்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில் காரை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

மேலும் திருட்டு காரை மதுரையை சேர்ந்த ராஜேந்திரன்(54) என்பவரிடம் விற்று இருப்பது தெரியவந்தது. மேலும் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இவர்கள் வேனை திருடி விற்று இருப்பதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து கார் திருடர்கள் 2 பேரும் திருட்டு காரை வாங்கிய ராஜேந்திரனும் கைது செய்யப்பட்டார்கள். மேலும் கார், வேன் மீட்கப்பட்டது.

ஆஸ்டின் இன்பராஜும், சுரேஷ்குமாரும் கூட்டாக பழைய கார்களை வாங்கி அதனை பிரித்து விற்று தொழில் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் பல பகுதிகளுக்கு சென்று கார்களை திருடி அதற்கு பழைய கார்களின் ஆர்.சி.புத்தகத்தை திருத்தி விற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் மேலும் எங்கெங்கு திருடியுள்ளனர் என்று விசாரணை நடந்து வருகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad