Matrimony OTT-Platforms Jobs Coupons Business

கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்த வேண்டும் - நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்

பவானி பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி சந்தையில் கிருமி நாசினி சுரங்கப்பாதை - அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார்
பவானி பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி சந்தையில் கிருமி நாசினி சுரங்கப்பாதையை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார்.

பவானி தினசரி காய்கறி சந்தை தற்போது புதிய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க காய்கறி சந்தையில் கிருமி நாசினி சுரங்கப்பாதை பவானி நகர ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு கிருமி நாசினி சுரங்கப்பாதையை திறந்து வைத்தார். இதில் நகராட்சி பொறியாளர் கதிர்வேலு, நகர அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவர் பவானி அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கோபாலகிருஷ்ணனிடம், ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இருக்கிறார்களா? போதிய மருந்துகள் உள்ளதா? என கேட்டறிந்தார். அதற்கு டாக்டர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘பவானி அரசு ஆஸ்பத்திரியில் 14 டாக்டர்கள் உள்ளனர். தொடர்ந்து 3 சிப்ட் என முறை வைத்து டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது,’ என்றார்.

கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்த வேண்டும் - நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்
கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்த வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தி உள்ளார். ராமநாதபுரம் நவாஸ்கனி எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களுக்கும், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கும் மட்டும் ரத்த மாதிரிகளை பெற்று பரிசோதனை செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரியையும் பரிசோதனை செய்ய வேண்டும். பல நாடுகளில் பரிசோதனை நடவடிக்கை விரைவுபடுத்தியதால்தான் அதிகமான எண்ணிக்கையில் நோய் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டது.

எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே இந்த நோய் தொற்று பரவி மரணத்தை ஏற்படுத்துகிறது. எனவே அறிகுறி தென்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை தாமதிக்காமல் சந்தேகிக்கப்படும் அனைவரின் ரத்த மாதிரிகளையும் பெற்று முழுமையான பரிசோதனையை விரைவாக அரசு மேற்கொள்ள வேண்டும். தொற்று உறுதியாகும் பட்சத்தில் அவர்களுக்கான சிகிச்சைகளை ஆரம்ப நிலையிலேயே சிறப்பாக வழங்கவும், அவர்களின் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும் இது பெரும் உதவியாக இருக்கும்.

தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் நோய்தொற்று உள்ளவரை மட்டும் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், குடும்பத்தினர் போன்றவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மட்டும் செய்து வருகிறார்கள். ஆனால் உறுதி செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் ரத்த மாதிரிகளை கொண்டு முழுமையான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதே போன்று வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உடல் வெப்பநிலை போன்ற அடிப்படை சோதனைகள் மட்டும் செய்யப்படுகிறது.

இதன்மூலம் நோய் தொற்றை முழுமையாக கண்டறிய முடியுமா என்ற கேள்வி எழுகிறது? எனவே ரத்த மாதிரிகளை பெற்று முழுமையான பரிசோதனையை தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவரையும் பரிசோதனை செய்ய அரசு முன்வர வேண்டும். முழுமையான நோய்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையை தெளிவாக கணக்கிட்டு அவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகளை அளித்து முற்றிலுமாக கொரோனா நோய்தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை பாதுகாக்க இந்த பரிசோதனை உதவும். எனவே தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கிருமிநாசினி சுரங்கப்பாதை - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கிருமி நாசினி சுரங்கப்பாதையை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் வி.வி.டி. சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கிருமிநாசினி சுரங்கப்பாதையை திறந்து வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அம்மா உணவகத்தில் மதிய உணவின்போது முட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு மக்கள் தனித்து இருப்பதே ஒரே வழி. ஊரடங்கின்போது மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக அனைத்து தரப்பினருக்கும் உணவு பொருட்கள் மற்றும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து வந்த 2 ஆயிரத்து 300 பேர் வீடுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மக்கள் கூடுவதை தவிர்க்க பல்வேறு இடங்களில் காய்கறி சந்தை மற்றும் நடமாடும் காய்கறி கடைகளும் தொடங்கப்பட்டு வருகிறது. அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. விவசாய பணிகள் எந்த இடையூறும் இன்றி நடைபெற அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

பயிர் காப்பீடு

மேலும் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையாக ரூ.3 கோடியே 86 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதில் வெங்காயம் பயிரிட்ட 1,500 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 72 லட்சம், மக்காச்சோளம் பயிரிட்ட 1,904 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சம் ஆக மொத்தம் 3 ஆயிரத்து 404 பேருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நிவாரணத்தொகை மற்றும் விலையில்லா ரேஷன் பொருட்கள் 4 லட்சத்து 61 ஆயிரத்து 378 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 17 ஆயிரத்து 393 பேருக்கு மட்டும் வழங்கப்பட வேண்டி உள்ளது. அதுவும் விரைந்து வழங்கப்படும்.

ஆய்வகம்

மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 7 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கான ஆய்வகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு சில நாட்களில் இந்த ஆய்வகம் செயல்பட தொடங்கும்.

நடிகர் அஜித்குமார் ரூ.1¼ கோடி நிதியை கொரோனா தடுப்பு பணிக்காக அளித்து உள்ளார். முதல்-அமைச்சர் பேரிடர் காலங்களில் மனித நேயத்துடன் பிறருக்கு உதவ வேண்டும் எனவும், முதல் -அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மக்கள் தங்கள் பங்களிப்பை அதிகமாக அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார். பொதுமக்கள் அதிகமாக நிதியுதவி வழங்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் திருவாசகமணி, தொழில் அதிபர்கள் கபிலன், கோடீசுவரன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார், மாநகராட்சி செயற்பொறியாளர் பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர்கள் பிரின்ஸ், ராமச்சந்திரன், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியில்...

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் தற்காலிக மார்க்கெட் நுழைவுவாயிலில் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து, கிருமிநாசினி சுரங்கப்பாதை வழியாக நடந்து சென்றார்.

சின்னப்பன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் ராஜாராம், யூனியன் ஆணையாளர் மாணிக்கவாசகம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், பொது கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வக்கீல் ரத்தினராஜ், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ரூ.4 லட்சம் நிதியுதவி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகளுக்கு தமிழக அரசுக்கு உதவிடும் வகையில், கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்தின் கல்வி நிறுவனங்கள் சார்பில், முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம் வழங்கினார். சங்க பொருளாளர் சுரேஷ்குமார், எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி செயலாளர் கண்ணன், பொது மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், நிர்வாகி ஜோதிபாசு, வேலாயுதபுரம் நாடார் உறவின் முறை சங்க தலைவர் வேல்முருகேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கோவில்பட்டி-எட்டயபுரம் ரோடு ஸ்ரீ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 9 படுக்கைகள், 2 வெண்டிலேட்டர்களுடன் (செயற்கை சுவாசக்கருவி) கூடிய தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் லதா ஸ்ரீவெங்கடேஷ், டாக்டர் ஸ்ரீவெங்கடேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

பல்லடத்தில் 2 இடங்களில் கிருமி நாசினி சுரங்கப்பாதை - கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
பல்லடத்தில் 2 கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதைகளை கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.

பல்லடத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பல்லடம் பஸ் நிலையத்தில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதனை கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. தனது சொந்தசெலவில் அமைத்து மக்கள்பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். இதை தொடர்ந்து மேலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பல்லடம் அரசுஆஸ்பத்திரி நுழைவாயிலில் ரெயின்போ ரோட்டரி சங்கம் சார்பில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதே போல் அரசுஆஸ்பத்திரி பின்புற நுழைவாயிலில் வனம் இந்தியா அறக்கட்டளை சார்பில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த 2 கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதைகளையும் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சுல்தானா, நகராட்சி ஆணையாளர் கணேசன்,மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சங்கர், ரெயின்போ ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், தங்கலட்சுமிநடராஜன், சுந்தர்ராஜ் மற்றும் நிர்வாகிகள், வனம் இந்தியா நிர்வாகிகள் சுவாதிசின்னச்சாமி, நாச்சிமுத்து, டி.எம்.எஸ்.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad