Minister,MLA Update 8-4-2020

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.


 அதன்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருடன் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வாயிலாக சம்மந்தப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கண்காணிப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படியும் கலெக்டருக்கு அறிவுரைகளை வழங்கினார்.


600 குடும்பத்தினருக்கு இலவச அரிசி - ஆலாம்பாடி ஊராட்சி தலைவர் வழங்கினார்

காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலாம்பாடி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊராட்சி தலைவர் ஆர்.ராஜாமணி ராயல் ரங்கசாமி தலைமையில் வீதிகள் தோறும் தூய்மை பணியாளர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

அதை தொடர்ந்து ஒவ்வொரு வீட்டுற்கும் சென்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ஊராட்சியில் உள்ள ஏழை கூலி தொழிலாளர்கள் 600 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கினார்.

மேலும் ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று குடிநீர் வினியோகம் மற்றும் குடிநீர் மேல்நிலைதொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு செய்தார்.ஊராட்சி தலைவருடன் முன்னாள் தலைவர் ராயல் ரங்கசாமியும் உடனிருந்தார்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடமாடும் காய்கறி வண்டிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று காய்கறிகளை வழங்கும் வகையில், ஸ்ரீவைகுண்டத்தில் நடமாடும் காய்கறி வண்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார். 


கொரோனா தடுப்பு நடவடிக்கையை கேலி செய்வோர் நாட்டின் விரோதிகள் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கலில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஏ.ஏ.ஏ பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து கிருமி நாசினி தெளிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-


பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கேலி செய்பவர்கள் இந்த நாட்டின் விரோதிகளாகத்தான் இருக்க முடியும். குறை சொல்வதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும்.

இது அரசர் காலம் முதல் இப்போது வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. காலையில் இட்லி கொடுத்தால் ஏன் பொங்கல் கொடுக்க மாட்டீர்களா என்பார்கள். மதியம் சாப்பாடு கொடுத்தால் ஏன் பிரியாணி கொடுக்க மாட்டீர்களா என்பார்கள். குறை சொல்பவர்கள் நிச்சயமாக நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். குறை சொல்பவர்கள் அவர்கள் என்ன சமூக பணிகளை செய்தார்கள்? என்று நினைத்து பார்த்தால் குறை சொல்ல மாட்டார்கள்.

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று 9 நிமிடங்கள் தீப ஒளி ஏற்றி அதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமை, தமிழகத்தின் ஒற்றுமை உலகிற்கு பறைசாற்றப்பட்டுள்ளது.

சமூக பணியில் குறை கூறி கொண்டிருக்காமல் அரசுடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் இந்தியாவைவிட்டு கொரோனா வைரசை விரட்டியடிக்க முடியும். கடவுள் இல்லை என்று பேசுவோர் மத்தியில் கடவுளை பற்றி பேசினால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் யாராவது சிகிச்சைக்கு வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனி வார்டை பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.


இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, தாளவாடி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க பவானிசாகர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தை ஒதுக்குவதாக அறிவித்தார். ஆய்வின் போது சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் இருந்தனர்.


அம்மாபேட்டை பகுதி ரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரண பொருட்கள் - அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்


அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம், மூனாஞ்சாவடி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பணமும், பொருட்களும் வழங்கினார். பின்னர் கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் விரைவில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்குமாறு உத்தரவிட்டார்.


நிகழ்ச்சியில் ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் எ.ஈஸ்வரமூர்த்தி, துணை தலைவர் பங்க் பாலு, நிலவள வங்கி தலைவர் யு.எஸ்.சுந்தரராசன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ராதா, அம்மாபேட்டை பேரூர் அ.தி.மு.க. செயலாளர் டி.செந்தில்குமார், ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 14 ஊராட்சிகளுக்கு கிருமி நாசினி - இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்

கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் அந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னதம்பிபாளையம், மைக்கேல்பாளையம், பர்கூர், கெட்டிசமுத்திரம், பச்சாம்பாளையம், கீழ்வாணி, மூங்கில்பட்டி உள்பட 14 ஊராட்சிகளுக்கு தேவையான கிருமி நாசினி, பணியாளர்களுக்கு தேவையான கையுறைகள், கைகழுவும் திரவம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஆணையாளர் தங்கவேல் தலைமை தாங்கினார்.


அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இந்த பொருட்களை அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர். அப்போது அவர் பேசுகையில், ‘கிருமி நாசினியை அந்தந்த ஊராட்சி பகுதிகளில் தெளித்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் ஈடுபடவேண்டும். தூய்மை பணியாளர்களுக்கான கையுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றையும் வழங்க வேண்டும். என்ன உதவி தேவை என்றாலும் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம்,’ என்றார்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad