Matrimony OTT-Platforms Jobs Coupons Business

பெண் ஊழியர் உள்பட 3 பேருக்கு கொரோனா: தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் வெளியேற்றம் - நுழைவு வாயிலை மூடி தீவிர கண்காணிப்பு

நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; 100 வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன - ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து நாசம்
நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளிக்காற்றால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பறந்ததுடன் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து நாசம் ஆனது.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நல்ல வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் நம்பியூர், வேமாண்டம்பாளையம், பட்டிமணியக்காரன்பாளையம், எல்லப்பாளையம், இருகாலூர், கொழந்தபாளையம், வரப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. மாலை 4.30 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. இதைத்தொடர்ந்து 5 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த மழை 6 மணி வரை நீடித்தது.

1 மணி நேரம் நீடித்த சூறாவளிக்காற்றால் நம்பியூர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளின் தகரத்தினாலான மற்றும் ஓடுகளாலான வீட்டின் மேற்கூரைகள் பறந்தன. 100-க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள், ஆல மரங்கள் முறிந்து விழுந்தன. மரங்கள் மற்றும் வீட்டின் மேற்கூரைகள் விழுந்ததில் எல்லப்பாளையத்தில் 4 கார்கள் சேதம் அடைந்தன. மேலும் பட்டிமணியாரன்பாளையத்தில் 5 மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதன்காரணமாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி நம்பியூர் பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம் ஆனது.

இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் அந்தந்த பகுதி வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று சேதங்களை பார்வையிட்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பான அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி, பனையம்பள்ளி பகுதியில் நேற்று மாலை 4.45 மணி முதல் மாலை 5 மணி வரை சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசம் ஆனது.

தாளவாடி அருகே உள்ள பனக்கள்ளி, கெட்டவாடி, கல்மண்டிபுரம், நெய்தாளபுரம், ஜீர்கள்ளி ஆகிய பகுதிகளிலும் மாலை 3 மணி முதல் 3.30 மணி வரை சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் திடீர் தீ
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் காய்ந்த செடிகள் மற்றும் சருகுகள் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தன.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல புதிய படிக்கட்டு பாதை உள்ளது. இந்த பாதை அருகே மலைப்பகுதியில் காய்ந்த செடிகள் மற்றும் சருகுகள் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தன. மேலும் கிரிவலபாதை அருகே ரோட்டின் ஓரமாக இருந்த சருகுகளும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மலைப்பகுதியில் தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது முறையாக மலையில் உள்ள சருகுகள் மீது தீப்பற்றி எரிய காரணம் என்ன? மர்ம நபர்கள் யாரும் தீ வைத்து விட்டார்களா என்று திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் ஊழியர் உள்பட 3 பேருக்கு கொரோனா: தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் வெளியேற்றம் - நுழைவு வாயிலை மூடி தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் உள்பட 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அந்த ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும் நுழைவு வாயிலை மூடி தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் தூத்துக்குடியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த பெண் ஊழியர், அவரது கணவர், மாமியார் ஆகிய 3 பேருக்கும் நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தனிமைப்படுத்தப்பட்டு, அவரது ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த மற்ற நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஒரு நோயாளி மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையடுத்து ஆஸ்பத்திரிக்குள் செல்ல வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆஸ்பத்திரியின் நுழைவு வாயிலை மூடி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆஸ்பத்திரி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சி சுகாதார அலுவலர் அருண்குமார் தலைமையில் ஆஸ்பத்திரியின் வெளிப்பகுதியிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

தூத்துக்குடியில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். மற்ற 2 பேரும் அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உள்ளனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. தற்போது ஆஸ்பத்திரியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. எந்த சிகிச்சையும் நடைபெறவில்லை. ரத்த பரிசோதனை முடிவுகள் வந்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு: சைதாப்பேட்டை பகுதி முழுவதும் சுகாதாரப்பணிகள் தீவிரம்
வேலூரில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து சைதாப்பேட்டை பகுதி முழுவதும் சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி தென்பட்டவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை மற்றும் சி.எம்.சி.யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இது தவிர வேலூர் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளான சின்னஅல்லாபுரம், கருகம்புத்தூர், கஸ்பா, ஆர்.என்.பாளையம் போன்ற பகுதிகளில் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றியுள்ள சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இந்தநிலையில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கொரோனாவால் நேற்று முன்தினம் திடீரென இறந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இறந்த நபர் சைதாப்பேட்டை பகுதியில் பஜ்ஜி, போண்டா போட்டு விற்பனை செய்யும் சிறிய கடை நடத்தி வந்துள்ளார். அவரது கடைக்கு வடமாநிலத்தவர்கள் பலர் வந்து உணவு பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர். எனவே அவர் வசித்த பகுதி முழுவதும் தற்போது வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தொகை குறித்த தகவல்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.

இறந்த நபர் சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சில தனியார் மருத்துவமனைகளுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் அவர் சி.எம்.சி.யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மருத்துவமனையில் இருந்தபோது கொரோனா உறுதி செய்யப்படுவதற்கு முன்பு உறவினர்கள் அவரை சந்தித்துள்ளனர். எனவே அவர் வசித்து வந்த பகுதியை சேர்ந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்படுகிறது.

இறந்த நபர் சிகிச்சை பெற்று வந்த சி.எம்.சி. மருத்துவமனை வளாகம் உள்பட பல்வேறு இடங்களிலும், அவர் வசித்த பகுதி முழுவதும் நவீன கிருமி நாசினி தெளிப்பு எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் சைதாப்பேட்டை பகுதி முழுவதும் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூய்மை காவலர்கள் கொண்ட 30 குழுக்கள் மூலமும் ஆற்காடு சாலை, வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பு என பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad