Matrimony OTT-Platforms Jobs Coupons Business

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.

full-width கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த நோய்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. ஆனாலும் கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கும் இந்த நோய் தொற்று பரவி இருக்கலாம் என்றும், எனவே திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வர வேண்டும் என அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 69 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றது தெரியவந்தது. இவர்களில் 59 பேர், திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். மற்ற 10 பேர் யார்? யார்? என்று அடையாளம் காணும் முயற்சியில் சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் முதற்கட்டமாக டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.மேலும் லண்டன் சென்று வந்த திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

அதன்பின்னர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் 2 பேருக்கும், நேற்று 2 பெண்கள் உள்பட மேலும், 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை திருப்பூர் மாவட்டத்தில் 26-ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கூறியதாவது:-

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உள்பட மேலும், 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொண்டதில் அதில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் டெல்லி சென்று வந்த மணியக்காரம்பாளையத்தை சேர்ந்த ஒருவரின் 35 வயதுடைய மனைவி மற்றும் அவர்களது மகளான 16 வயது சிறுமிக்கும், தாராபுரத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒருவர், தேவராயம்பாளையத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் என 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பூபதி கூறியதாவது:-

திருப்பூரில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் லண்டனுக்கு சென்று வந்த திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் மட்டும் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்று உள்ளார். கொரோனா பாதிப்புகள் உள்ள மங்கலம், அவினாசி தேவாரயம்பாளையம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அந்த பகுதிகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போதும் அதே பகுதியை சேர்ந்த சிலர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரத்த மாதிரி எடுத்து விரைவாக சோதனை செய்யப்படும். மேலும், அந்த பகுதியில் சளி, இருமல் உள்ளவர்கள் இருக்கிறார்களா? என மருத்துவ குழு மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஊரடங்கு உத்தரவால், பறிக்க முடியவில்லை கொடியிலேயே முற்றி பயனற்று போன வெற்றிலை - விவசாயிகள் கவலை
ஊரடங்கு உத்தரவு காரணமாக வெற்றிலைகளை பறிக்க முடியாததால் கொடியிலேயே முற்றி பயனற்று போனதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர், நஞ்சமடைகுட்டை, வெள்ளாளபாளையம், காட்டுப்பாளையம், வேம்பத்தி, குப்பாண்டம்பாளையம், பிரம்மதேசம், ஒரிச்சேரிபுதூர், செட்டிக்குட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலைகளை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர்.

இங்கு பறிக்கப்படும் வெற்றிலை அந்தியூர் மற்றும் அத்தாணி சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படும். ஈரோடு, மேட்டூர், மேட்டுப்பாளையம், ஓமலூர், எடப்பாடி, கர்நாடக மாநிலம் மைசூர், மாதேஸ்வரன் மலை, கர்காகண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து வெற்றிலைகளை வாங்கி செல்கிறார்கள். ராசி வெற்றிலை, பீடா வெற்றிலை, செங்காம்பு வெற்றிலை என பல்வேறு வகைகளில் வெற்றிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ராசி வெற்றிலை என்பது இளம் வெற்றிலை ஆகும். இந்த வெற்றிலைகள் திருமண விழாக்கள், கோவில் விழாக்களுக்கு பயன்படுத்த வியாபாரிகள் வாங்கி செல்வதுண்டு. பீடா வெற்றிலை என்பது ஓரளவுக்கு முற்றிய வெற்றிலை ஆகும். இது பீடா கடைகளில் பயன்படுத்தப்படும். செங்காம்பு வெற்றிலை என்பது முற்றிலும் முற்றிய வெற்றிலை ஆகும். இது ராசி மற்றும் பீடா ரக வெற்றிலைகள் கெடாமல் இருக்கவும், வாடாமல் இருக்கவும் அதன் மேல் வைத்து கட்டுவதற்கு பயன்படுத்தப்படும். விழாக்கள் போன்ற சீசன் நேரங்களில் ராசி ரக வெற்றிலை கட்டு ஒன்று (100 வெற்றிலைகளை கொண்டது) ரூ.120 முதல் ரூ.160 வரையும், பீடா வெற்றிலை ரூ.80 முதல் ரூ.110 வரையும் விற்பனை ஆகும். செங்காம்பு வெற்றிலை கட்டு ஒன்று ரூ.6-க்கு விற்பனை செய்யப்படும்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. கடைகள் மற்றும் சந்தைகள் அடைக்கப்பட்டுவிட்டன. வாகன போக்குவரத்தும் இல்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாய வேலைகளுக்கு கூலி ஆட்கள் கூட கிடைப்பதில்லை. இதன்காரணமாக அந்தியூர் பகுதியில் உள்ள வெற்றிலைகளை பறிக்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘அந்தியூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இது முருங்கை மற்றும் அகத்தி மரங்களுக்கு இடையே ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த மரங்களில் வெற்றிலை கொடி போல் படரவிடப்படும். வெற்றிலை கொடி 10 அடி உயரத்துக்கு மட்டுமே வளரவிடப்படும். மரத்தில் பரவி வளர ஏதுவாக வெற்றிலை கொடிகள் வாழை நார் கொண்டு கட்டப்படும். 10 அடி உயரத்துக்கு கொடி செல்வதால் வெற்றிலைகளை பறிக்க சிறிய ஏணி பயன்படுத்தப்படும். அதன் மூலம் கொடியின் நுனியில் உள்ள இளம் வெற்றிலை, பின்னர் ஓரளவுக்கு முற்றிய வெற்றிலை, இதையடுத்து முழுவதும் முற்றிய வெற்றிலைகள் பறிக்கப்படும். வாரத்துக்கு 2 முறை இதுபோன்று வெற்றிலைகள் பறிக்கப்படும். 8 நாட்கள் வரை வெற்றிலைகளை பறிக்காமல் விட்டாலும் அந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிலாளர்கள் யாரும் வெற்றிலை பறிக்க வரவில்லை. வெற்றிலைகளை பறித்தாலும் அதை வாங்க வியாபாரிகளும் இல்லை. இதனால் நாங்கள் வெற்றிலைகளை பறிக்க முடியாமல் அப்படியே கொடியிலேயே விட்டுவிட்டோம். வெற்றிலைகள் பறிக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் வெற்றிலைகள் அனைத்தும் முற்றிவிட்டதுடன், 15 அடி உயரத்துக்கு சென்றுவிட்டது. வெற்றிலைகள் முற்றிவிட்டதால் அவைகள் பயனற்று போய்விட்டன.

இதேநிலை இன்னும் 15 நாட்கள் நீடித்தால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்களுடைய வருமானம் முற்றிலும் முடங்கி விட்டது. வெற்றிலை கொடிகளை அழித்துவிட்டு மீண்டும் வளர்க்க வேண்டும் என்றால் 11 மாதங்கள் வரை ஆகும். அதுவரை எங்கள் வாழ்வாதாரம், பொருளாதாரம் கேள்விக்குறிதான். அரசு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கவலையுடன் தெரிவித்தனர்.

காஞ்சீபுரம் அருகே, செல்போன் வெடித்து வாலிபர் காயம்
காஞ்சீபுரம் அருகே செல்போன் வெடித்து வாலிபர் காயமடைந்தார்.

காஞ்சீபுரம் அருகே கோவிந்தவாடி கிராமம் புதிய காலனியை சேர்ந்தவர் அருள்மொழி (வயது 21). நேற்று காஞ்சீபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் அவசர அவசரமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை அருள்மொழி உள்பட விவசாயிகள், தார் பாய் போட்டு மூடி கொண்டு இருந்தனர்.

அப்போது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. அப்போது திடீரென அருள்மொழி பாக்கேட்டில் வைத்து இருந்த செல்போன் வெடித்தது. இதில் காயமடைந்த அவரை உடனடியாக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கோபி பகுதியில் வாழை இலை விலை கடும் வீழ்ச்சி
ஊரடங்கு உத்தரவு காரணமாக கோபி பகுதியில் வாழை இலை விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.

விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் தமிழர்கள். அவ்வாறு விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழர்கள் தங்களுடைய வீட்டுக்கு விருந்தாளியாக யார் வந்தாலும் அவர்களுக்கு தலைவாழை இலை போட்டு உணவு படைப்பார்கள். இது காலந்தொட்டு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. தற்போது தலைவாழை விருந்தோம்பல் குறைந்துவிட்டது. எனினும் வாழை இலையில் விருந்தளிப்பது இன்னும் குறைந்தபாடில்லை. திருமணம், பூப்புனித நன்னீராட்டு விழா, கோவில் திருவிழாக்கள் உள்பட பல்வேறு விழாக்களில் வாழை இலையில் உணவு பரிமாறுவதை தமிழர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். மேலும் ஓட்டல்களில் வாழை இலையில் உணவு கொடுக்கப்படுகிறது.

அதனால் தமிழர்களின் வாழ்வியலில் வாழை இலைக்கு அவ்வளவு முக்கியத்துவம் உண்டு. அவ்வாறு முக்கியத்துவம் பெற்ற வாழை இலையை வாங்க தற்போது யாரும் இல்லை என்பது வேடிக்கையாக இருக்கிறதல்லவா? கொரோனாவின் தாக்கத்துக்கு வாழை இலை மட்டும் என்ன விதிவிலக்கா?

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்கால் பாசன பகுதிகளான எல்லமடை, தொட்டியபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக வாழை பயிரிடப்பட்டு உள்ளது. இங்கு வாழை இலை அறுக்க ஒரு ஏக்கருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மொத்த வியாபாரிகள் இங்கு வந்து வாழை இலைகளை அறுத்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. ஒரு சில உணவகங்கள் மட்டும் உணவுகளை வழங்கி வருகிறது. அதுவும் பார்சலில் மட்டும் தான் உணவுகள் வழங்கப்படுகின்றன. போக்குவரத்தும் முற்றிலும் முடங்கிவிட்டது. சந்தைகள் செயல்படவில்லை. அதுமட்டுமின்றி திருமணம், கோவில் விழா உள்பட அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள்.

விழாக்கள், ஓட்டல்கள், சந்தைகள் நடைபெறாததால் வாழை இலையின் பயன்பாடு குறைந்துவிட்டது. இதனால் கோபி பகுதியில் வாழை இலைகளை அறுக்க வியாபாரிகள் முன் வருவதில்லை.

இதுகுறித்து வாழை இலை வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘நாங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் என விலை நிர்ணயித்து ஒப்பந்த அடிப்படையில் வாழை இலைகளை அறுத்து சென்று விற்பனை செய்தோம். ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன. ஓட்டல்களும் அடைக்கப்பட்டு விட்டன. இதனால் வாழை இலைகளின் பயன்பாடு முற்றிலும் குறைந்து விட்டது. ரூ.15 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் எடுத்ததால் அந்த பணத்தை விவசாயிகளிடம் நாங்கள் கொடுத்தாக வேண்டும். இதற்காக நாங்கள் வாழை இலைகளை அறுத்து விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். ஆனால் வாழை இலைகளை அறுக்க கூலி தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அறுத்த வாழை இலைகளை கொண்டு செல்ல சரக்கு வாகனங்கள் கிடைப்பதில்லை. அப்படியே சரக்கு வாகனங்கள் கிடைத்தாலும் அதை விற்பனை செய்ய சந்தைகள் இல்லை.

இதுபோன்ற காரணங்களால் நாங்கள் என்ன செய்வதென்றே கண் விழி பிதுங்கி நிற்கிறோம். ஊரடங்குக்கு முன்பு 130 இலைகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.400-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது 130 இலைகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.100-க்கு விற்பனை ஆகிறது. அதுவும் சரியாக விற்பனை ஆகாமல் உள்ளது. வாழை இலைகளின் விலை வீழ்ச்சியால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது,’ என்றார்.

உத்திரமேரூரில் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
உத்திரமேரூரில் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து எற்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென வானில் கருமேகம் சூழ்ந்து பயங்கர இடி, மின்னலுடன் சூறை காற்று வீசியது.

இதில் மேனலூர் கிராமத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்துக்கு அருகில் சென்ற உயரழுத்த மின்சார கம்பிகள் காற்றின் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று உரசியது. அதில் இருந்து வந்த தீப்பொறிகள் கிருஷ்ணமூர்த்தியின் கரும்பு தோட்டத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

நல்ல விளைச்சலுடன் அரவைக்கு தயாராக இருந்த 3 ஏக்கரிலான கரும்பு தோட்டம் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கரும்பு தோட்டத்தில் எரிந்த தீயை அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர், ஓலை கொட்டைகளும் தீ விபத்தில் இருந்து தப்பியது.

பூட்டி இருந்த பேன்சி கடையில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
மதுரையில் பேன்சி கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கைக்கெடிகாரம், சுவர் கெடிகாரம், கவரிங் நகைகள், வீட்டு அலங்கார பொருட்கள் என பேன்சி பொருட்களை மொத்தமாகவும் சில்லரையாகவும் கடைகளை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் அடுத்தடுத்து நெருக்கடியாக அமைந்து இருக்கும். இதில் மேலகோபுர தெரு பகுதியில் 2 மாடிகளை கொண்ட பேன்சி கடையில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது.

உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் திடீர் நகர், மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் விரைந்து வந்தனர். அவர்கள் கடையில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

மேலும் நெருக்கடியான கடைகள் உள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தாலும் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் மற்ற கடைகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் கடையின் 2 மாடிகளில் இருந்த விலை உயர்ந்த கெடிகாரங்கள் மற்றும் பேன்சி பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதனால் சேத மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது.

ஊரடங்கு நேரத்தில் பூட்டிய கடையில் எவ்வாறு தீப்பிடித்தது என தெரியவில்லை. மின் கசிவு காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் மதுரை திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புளியங்குடி- வடகரை பகுதியில் தோட்டங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் - தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தின
புளியங்குடி, வடகரை பகுதியில் தோட்டங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதில் ஏராளமான தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தின.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருணாசல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் முத்துப்பாண்டி (வயது 54), முருகராஜ் (43). இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடி பீட் பகுதியில் உள்ளது. அவர்கள் தங்களது தோட்டத்தில் வாழை, எலுமிச்சை பயிரிட்டு உள்ளனர். தென்னை, பலா, மா மரங்களும் உள்ளன. யானைகள் விளைநிலங்களில் புகுவதை தடுக்கும் வகையில், இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை தோட்டத்தில் பட்டாசு வெடித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் வீடு திரும்பிய நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் 5 யானைகள் குட்டியுடன் விளைநிலங்களில் புகுந்தது. அங்கிருந்த வாழை, தென்னை, எலுமிச்சை பயிர்களை சேதப்படுத்தியது. பின்னர் யானை கூட்டங்கள் அங்கிருந்து அதிகாலையில் வெளியேறி சென்றன.

இந்நிலையில் நேற்று காலை சகோதரர்கள் இருவரும் தோட்டத்திற்கு சென்றபோது யானை கூட்டங்கள் அட்டகாசம் செய்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் குலை தள்ளிய நிலையில் இருந்த 70-க்கும் மேற்பட்ட வாழைகள், தென்னை குருத்துகள் மற்றும் தண்ணீர் பைப்லைன் குழாய்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளன.

தகவல் அறிந்து புளியங்குடி வனச்சரக அலுவலர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் வனசரகர் அசோக்குமார் மற்றும் வனக்காவலர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

வடகரை

இதேபோல் கடையநல்லூர் அருகே வடகரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அருகே மேட்டுக்கால், வைரவன் காடு பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் மா, வாழை, தென்னை போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் ரெசவு முகமது மற்றும் சவுகத் அலி ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்து அங்கு அவர்கள் பல ஏக்கரில் பயிரிட்டிருந்த தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்தது. மேலும் மாமரங்களையும் சேதப்படுத்தியது.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மரங்களில் காய்த்து தொங்கும் மாங்காய், தேங்காய் போன்றவைகளை பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், யானைகளின் அட்டகாசம் விவசாயிகளை மேலும் வேதனை அடைய செய்துள்ளது. எனவே வனத்துறையினர் உடனடியாக இரவு நேரத்தில் வெடி வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொங்கலூர், சேவூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை; 4,600 வாழைகள் முறிந்து விழுந்தன
பொங்கலூர் மற்றும் சேவூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் 4,600 வாழைகள் முறிந்து விழுந்தன.

பொங்கலூர் சுற்றுவட்டார பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் தென்னை மற்றும் காய்கறி, வாழை சாகுபடி நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா தாக்குதல் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. எனவே விவசாய பொருட்கள் கொண்டு சென்று விற்பனை செய்வதில் சில சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் விவசாயிகள் விளைவித்த பொருட்களை நஷ்டம் ஏற்படாதவாறு பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பொங்கலூர் பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கருமேகம் திரண்டது. அப்போது திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சிறிய மரங்கள் மற்றும் வாழை மரங்கள் முறிந்து கீழே சாய்ந்து விழுந்தன. பொங்கலூரை அடுத்த டி.ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரது தோட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தது. அதுபோல் காட்டூர் அருகே உள்ள திருமலைநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் என்பவரது தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நேந்திரன் வாழை 600-க்கும் மேல் முறிந்து கீழே சாய்ந்தது. தொங்குட்டிபாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 2 ஆயிரத்து 500 வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. அதன்படி பொங்கலூர் பகுதியில் மட்டும் 3,600 வாழைகள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சேவூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், தண்டுக்காரன் பாளையம், தத்தனூர், புலிப்பார் உள்ளிட்ட பல பகுதிகளில் பயிரிட்டுள்ள 1000-வாழை மரங்கள் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் முறிந்து சேதம் அடைந்தன. இது குறித்து விவசாயிகள் கூறும்போது “ வாழை ஒன்றுக்கு ரூ.200 வரை செலவு ஆகிறது. இந்நிலையில் வாழைமரம் குழை தள்ளி அறுவடைக்கு தயாராக இருக்கும் போது பலத்த காற்றால் சேதமடைந்துள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும்“ என்றனர். இந்த நிலையில் நேற்று மாலையில் திருப்பூரில் லேசான மழை பெய்தது.

கும்மிடிப்பூண்டி அருகே, மின்னல் தாக்கி 2 பேர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புதுகும்மிடிப்பூண்டி, சிப்காட், ஆரம்பாக்கம், எளாவூர், கவரைப்பேட்டை, ஈகுவார்பாளையம், பாதிரிவேடு, மாதர்பாக்கம் ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது வானம் இருண்டு மதிய வேளையானது இரவு போல காட்சியளித்தது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி விஜயன் (வயது 42) நேற்று அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான விஜயனுக்கு லட்சுமி(35) என்ற மனைவியும், வனிதா(15) என்ற மகளும், பரத்(12) என்ற மகனும் உள்ளனர்.

அதே போல மாதர்பாக்கம் இருளர் காலனியைச் சேர்ந்த நாகராஜூம்(55), அவருடைய மனைவி புஜ்ஜியம்மாவும் (49) செதில்பாக்கம் அருகே உள்ள புதுகண்டிகை ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த இடியுடன் வானத்தில் மின்னல் பளச்சிட்டது. இந்த அதிர்ச்சியால் புஜ்ஜியம்மா உயிரிழந்தார். அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவரது உடலில் காயம் ஏதும் இல்லை. உடன் இருந்த அவரது கணவருக்கும் எதுவும் ஆகாததால் அவர் மின்னல் தாக்கி இறந்தாரா? அல்லது அதிர்ச்சியில் இறந்தாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

அதேபோல் பாஞ்சாலி ஊராட்சிக்கு உட்பட்ட கீமலூர் கிராமத்தில் கோவிந்தய்யா(65) மின்னல் தாக்கி காயம் அடைந்தார். அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி தாசில்தார் குமார், துணை தாசில்தார் ராஜேஷ் குமார், வட்ட வழங்கல் அதிகாரி ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.

இதுதவிர கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் அருகே உள்ள சூரப்பூண்டியில் வசித்து வரும் வசந்தா(38) என்பவரது வீட்டில் இருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் அந்த தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மீது மின்னல் தாக்கி பழுதானது. பலத்த காற்றின் காரணமாக கும்மிடிப்பூண்டி பஜாரில் மின் கம்பிகள் அறுந்ததால் கும்மிடிப்பூண்டி பகுதியில் பல்வேறு இடங்களில் பல மணி நேரம் மின்தடை நீடித்தது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad