கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலெக்டர் ஆலோசனை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ள வடமாநில தொழிலாளர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை - கலெக்டர் பொன்னையா பேட்டி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ள வடமாநில தொழிலாளர்கள் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் 32 ஆயிரம் வடமாநில தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

அதன்படி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கூட்டாக தங்கி இருந்த 399 வடமாநில தொழிலாளர்கள், ஒரகடம் அடுத்த எழிச்சூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு, உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, நேற்று அந்த விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ள வடமாநில தொழிலாளர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் பொன்னையா, நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பன்னாட்டு தொழிற்சாலைகள் மற்றும் சிறு, குறு தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் தமிழகம் மட்டுமல்லாது வடமாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தங்கியிருந்து கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக மாவட்டத்தில் தங்க இடம் இல்லாமல் கூட்டமாக தங்கி உள்ள வடமாநில தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று வேளையும் உணவளிக்கப்பட்டு வருவதுடன், மேலும் அவர்கள் மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது சுங்குவார்சத்திரம், மாம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, கட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதியில் கூட்டாக தங்கி இருந்த 399 வடமாநில தொழிலாளர்கள் ஒரகடம் அடுத்த எழிச்சூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள எந்த ஒரு வடமாநில தொழிலாளர்களுக்கும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது குன்றத்தூர் தாசில்தார் ஜெயசித்ரா, மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் இந்திராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலெக்டர் ஆலோசனை
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊராட்சிகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயநாதன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேசியதாவது:-

ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் போன்றவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைகாலம் தொடங்குவதால் குடிநீர் பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். மேலும் அத்தியாவசிய பணிகளுக்காக ஊராட்சி ஊழியர்கள் மதியம் வெளியில் சென்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைதொடர்ந்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:-


நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் ஊராட்சிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று வழங்கலாம். மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பணிகளுக்காக செல்லும் ஊராட்சி ஊழியர்களை போலீசார் தடுத்தால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்வதுடன், கொரோனா குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேல்விஷாரம் தனியார் கல்லூரியில் 400 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க ஏற்பாடு - கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு
மேல்விஷாரம் தனியார் கல்லூரியில் 400 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, உதவி கலெக்டர் இளம்பகவத் மற்றும் அதிகாரிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மேல்விஷாரத்தில் உள்ள தனியார் கல்லூரியை ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள அறைகள் கழிவறைகளுடன் கூடியவையாக உள்ளதா, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் உள்ளனவா எனவும் கேட்டறிந்தனர்.

பின்னர் கலெக்டர் திவ்யதர்ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கல்லூரியில் சுமார் 300 முதல் 400 பேர்வரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிப்பதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளோம். மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா மற்றும் ஓச்சேரி ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளையும் தேர்வு செய்து வைத்துள்ளோம். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க டாக்டர்களின் செல் நம்பர், மருத்துவமனைக்கு வரும் நபர்கள் அறிந்து கொள்ளும்படி வைக்கவும் தெரிவித்துள்ளோம். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, மேல்விஷாரம் நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம், பொறியாளர் பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பகுதிகளை கண்டறிய புதிய செயலி விரைவில் அறிமுகம் - கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுமக்கள் கண்டறியும் வகையில் புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார். இதுகுறித்து அவர், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு முதல் முதலில் துபாயில் இருந்து வந்த ராதாபுரத்தை சேர்ந்த 43 வயது மதிக்கதக்க ஒருவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் இன்று (அதாவது நேற்று) வீடு திரும்பினார். அவர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 36 பேரும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 42 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களின் குடும்பத்தை சேர்ந்த 171 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுடைய ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 83 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மீதி உள்ளவர்களுக்கும் விரைவில் பரிசோதனை செய்யப்படும்.

உணவு ஏற்பாடு

வெளி மாநிலத்தை சேர்ந்த 5 ஆயிரத்து 361 தொழிலாளர்கள் நெல்லை மாவட்டத்தில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அந்தந்த நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆதரவற்ற நிலையில் உள்ள 267 பேர் காப்பகங்களில் சேர்க்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 428 பேருக்கு நெல்லை தாசில்தார் மூலமும், 86 திருநங்கைகளுக்கு சமூக நலத்துறை மூலமும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாநகர பகுதியில் வீதியில் சுற்றி திரிந்த ஆதரவற்றவர்கள் 32 பேர் காப்பகங்களில் சேர்க்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

புதிய செயலி அறிமுகம்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி இதுவரை ரூ.14 லட்சம் கிடைத்துள்ளது. கொரோனா நோய் பாதிக்கப்பட்ட இடங்களை பொதுமக்கள் கண்டறியும் வகையில் புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அதில் குறிப்பிட்ட விவரங்கள் நெல்லை மாவட்ட இணையதளத்திலும் பதிவு செய்யப்படும்.

நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், களக்காடு, பத்தமடை, பேட்டை, கோடீஸ்வரன் நகர் உள்ளிட்ட 8 இடங்கள் கொரோனா மையமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த மையங்களை சுற்றியுள்ள வீடுகள் கணக்கெடுத்து பரிசோதனை செய்யப்படும். அதாவது 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள வீடுகள் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

3 தனியார் ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு கொரோனா தனிமை வார்டு அமைக்கப்படுகிறது. ஏற்கனவே நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா தனிமை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை

நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், போலீசாருக்கும் ரத்தம் பரிசோதனை செய்யப்படுகிறது. முதல் கட்டமாக அங்கு காவல் பணியில் இருந்த 10 போலீஸ்காரர்களுக்கு ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. படிப்படியாக டாக்டர் கள், நர்சுகளுக்கும் பரிசோதனை செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.


அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே, மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கொரோனா தடுப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் சேரலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் சேரலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணியில் போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து பணியாற்றுவதற்கான ஆணை பெறப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுக்கு உட்பட்ட திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதற்கான மதிப்பூதியம் ஏற்கனவே தேர்தல் பணிகளில் வழங்கப்பட்டது போன்று அளிக்கப்படும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம், முன்னாள் படைவீரர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே பணியமர்த்தப்படுவார்கள்.

பணியில் சேரலாம்

ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் நாட்டு நலன் கருதி தாங்களாக முன்வந்து இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் தங்களுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை அணுகி பணியில் சேர்ந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பணியின்போது, உரிய பாதுகாப்பு சாதனங்கள் போலீசார் மூலம் வழங்கப்படும். மேலும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை 0461-2902025 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விருப்பத்தை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

செவ்வாப்பேட்டை ஊராட்சியில் 25 கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் - மாவட்ட கலெக்டர் வழங்கினார்
செவ்வாப்பேட்டை ஊராட்சியில் 25 கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

கொரோனா வைரஸ் காரண மாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வருமானம் இன்றி தவிக்கும் ஏழைகள், வட மாநிலத்தவர்களுக்கு தன்னார்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை மற்றும் திருவூர் ஊராட்சியை சேர்ந்த 25 கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் காய்கறி உள்ளிட்டவற்றை தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சார்பாக, தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

செவ்வாப்பேட்டை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு, கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் தொகுப்பை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறும்போது, ‘திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 413 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித்தொகை ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. கண்காணிப்பு குழுவினர் அந்த பகுதி பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் தாசில்தார் விஜயகுமாரி, செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி அன்பு, துணைத்தலைவர் சசிகலா கோபிச்சந்திரன், திருவூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, ஒன்றிய கவுன்சிலர்கள் வேதவள்ளி சதீஷ்குமார், நவமணி அபினாஷ், திலீப் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் கொரோனா தொற்று குறித்து அதிவிரைவு பரிசோதனை - கலெக்டர் கந்தசாமி தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கொரோனா வைரஸ் தொற்றுகுறித்து அதிவிரைவு பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று ஆரணி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளில் உள்ள படுக்கை வசதிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் 806 நபர்களுக்கு மேல் வந்துள்ளனர். அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையினர், நகராட்சி, பேருராட்சி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

64 நபர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப உள்ளார். 6 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா பகுதிகளிலும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. ஆரணி அரசு மருத்துவமனை, தச்சூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளும், வந்தவாசி அரசு கல்லூரி, செய்யார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பகுதிகளில் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமாக அதிவிரைவு பரிசோதனை (ராபிட் டெஸ்ட்) செய்யப்பட உள்ளது. இந்த சோதனையின்போது கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என உடனடியாக கண்டறியப்படும். அப்போது படுக்கை வசதிகளை தயார்படுத்த முடியாது என்பதால் இப்போதே அனைத்து தாலுகா பகுதிகளிலும் தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்தி வருகிறோம்.

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு வந்து செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புகளை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்களாகவே வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆரணி உதவிகலெக்டர் மைதிலி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, செய்யாறு சுகாதார துணை இயக்குனர் அஜிதா, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நந்தினி, வட்டார மருத்துவ அலுவலர்கள் சுதா, மதன் ஆகியோர் உடனிருந்தனர்.

கொரோனாவுக்கு ஒருவர் பலி எதிரொலி: மாவட்டம் முழுவதும் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் - இன்று முதல் அமல்
கொரோனாவுக்கு ஒருவர் பலியானதன் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கொரோனாவினால் இறந்துள்ளார். இவர் வெளி மாநிலத்துக்கோ, நாடுகளுக்கோ செல்லவில்லை. இவருக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

வீடு, வீடாக அரசு அலுவலர்கள் கணக்கெடுப்புக்கு வரும்போது பொதுமக்கள் காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல் மற்றும் தும்மலுக்கான அறிகுறிகள் இருந்தால் தங்கள் விவரங்களை தாங்களாகவே முன் வந்து தெரிவிக்க வேண்டும். ஒரு சிலர் தெரிவிக்காமல் விட்டுவிடுவதால் அந்தப்பகுதி அல்லது அந்த தெருவில் பலருக்கு தொற்று ஏற்பட காரணமாகிறது. எனவே பொதுமக்கள் மற்றவர்களின் நலன்கருதி ஒத்துழைக்க வேண்டும். இறந்து போனவர் வசித்து வந்த பகுதியில் தற்போது 5 துறைகளை சேர்ந்த 200 அலுவலர்கள் வீடு வாரியான கணக்கெடுப்பு பணியிலும், இன்னும் 50 நபர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேரின் உறவினர்கள் 56 பேருக்கு கொரோனா சோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களின் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள் தவிர்த்து 11 பேர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு பயணம் செய்திடாத நபருக்கு அதுவும் வேலூரில் தொற்று ஏற்பட்டுள்ளது கவலைக்குரிய ஒன்றாகும்.

இனியும் பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் தங்களது பொறுப்பில் அலட்சியமாக இருந்தால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இயலாது. தினமும் காலை நேரங்களில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ஊரடங்கு அமலில் இருப்பதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகின்றனர்.

பொதுமக்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை முறையே 3 நாட்களுக்கோ அல்லது 10 நாட்களுக்கோ வாங்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டும் தினமும் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எனவே வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவது அவசியமாகிறது.

எனவே இன்று (வியாழக்கிழமை) முதல் வேலூர் மாவட்டம் முழுவதும் காய்கறி கடைகள், இதர கடைகள் ஆகியவை கீழ்குறிப்பிட்டுள்ளவாறு மட்டுமே இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

அதன்விவரம் வருமாறு:-

* மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் வாரத்துக்கு திங்கட்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் மட்டுமே காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறப்பதற்கு அனுமதிக்கப்படும்.

* பெட்ரோல் பங்குகள் தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையும், மருந்தகங்கள் தினமும் வழக்கம்போலவும், பால் விற்பனை நிலையங்கள் தினமும் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

* இறைச்சி கடைகள் ஊரடங்கு காலம் முழுவதும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

* பெட்டிக்கடைகள், தள்ளுவண்டிகள், மார்க்கெட்டுக்காக ஒதுக்கி உள்ள இடங்களுக்கு வெளியே முளைத்துள்ள புதிய கடைகள் ஆகியவை அனுமதிக்கப்பட மாட்டாது.

* சமூக விலகலை கடைபிடிக்காத காரணத்துக்காக இதுவரை மூடி சீல் வைக்கப்பட்ட கடைகளும், இனி மூடி சீல் வைக்கப்பட உள்ள கடைகளும் ஊரடங்கு முடிந்த பின்னரும் அடுத்த 3 மாதங்கள் வரை திறப்பதற்கு அனுமதிக்கப்படாது. அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* அனைத்து கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளில் பொதுமக்களின் பிரார்த்தனைகள் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. மீறி வழிபாடுகள் நடந்தால் உரிய அமைப்பினர் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இறந்து போனவர்களை புதைப்பது அல்லது எரிப்பது தொடர்பாக தமிழக அரசு தெளிவான வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி இறந்து போனவர்களின் உடல் துணியால் பல அடுக்குகளாக சுற்றி மூடப்படும். இறுதி சடங்கிற்காக உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படாது.

எனினும் அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் தொலைவில் நின்று மதச் சடங்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், மத ரீதியான பிரார்த்தனைகளை செய்து கொள்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.

அவ்வாறு அனுமதிக்கப்படும் போது இறந்து போனவர்களின் உறவினர்கள் அதிகபட்சம் 10 பேரை தவிர ஏனையோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சடலத்தை புதைப்பது அல்லது எரிப்பது தொடர்பான உள்ளாட்சி அமைப்பினை சேர்ந்த தூய்மை பணியாளர்களால் மட்டுமே நடத்தப்படும்.

எனவே பொதுமக்கள் நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் - கலெக்டர் வழங்கினார்
தூய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் கண்ணன் மளிகை பொருட்கள் வழங்கினார்.

மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் முழுவீச்சில் அயராது பணியாற்றுவோரில் தூய்மை பணியாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு பலரும் மளிகை பொருட்கள் போன்றவற்றை வழங்குகின்றனர். மேலும் ஏழை, எளியோருக்கும், ஆதரவற்றோருக்கும் பலரும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். முக கவசமும் வழங்கப்பட்டு வருகிறது.


அதன்படி திருச்சுழியில் சீட்ஸ் மற்றும் ரமணர் விவசாய உற்பத்தியாளர் சங்கம் வழங்கிய விலையில்லா மளிகை பொருட்களை தூய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் கண்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்சுழி யூனியன் தலைவர் பொன்னுத்தம்பி, துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி, தாசில்தார் ரவிச்சந்திரன், திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு சசிதர், ஊராட்சி உதவி இயக்குனர் தணிக்கை உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, திருநாவுக்கரசி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசீலன், லலிதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் திருச்சுழி பஞ்சவர்ணகுமார், கீழக்கண்டமங்கலம் கிருஷ்ணம்மாள் மருதன், சீட்ஸ் தொண்டு நிறுவன செயலர் பாண்டியன், ரமணர் விவசாய உற்பத்தி நிறுவன நிர்வாகிகள் கலாவதி, சீமைச்சாமி, முத்து முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாத்தூர் அமீர்பாளையத்தில் வசிக்கும் 32 திருநங்கைகளுக்கு ஒருவாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் பலசரக்கு பொருட்கள், காய்கறிகளை ராஜவர்மன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் வழங்கினார். பின்னர் 46 பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பஞ்சாயத்து தலைவர்களிடம் இலவச முககவசம், கையுறை வழங்கினார். இதில் மாநில அ.தி.மு.க. பேரவை துணைச்செயலாளர் சேதுராமானுஜம், நகர செயலாளர் வாசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை, மாவட்ட கவுன்சிலர்கள் இந்திராகண்ணன், சீனியம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் மாரியம்மாள், கவிதா கருப்பசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாகுலன், காஜா மைதீன் பந்தே நவாஷ், மேலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகாசி ரத்ன விலாஸ் பஸ் நிறுத்தம் பகுதிகளில் மக்கள் நீதி மய்ய நற்பணி அணி சார்பாக வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட நற்பணி அணி செயலாளர் நாகராஜன், மாவட்ட செயலாளர் காளிதாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிச்சை மணி, நெல்சன், சிவகாசி முகுந்தன், சதுரகிரி, சிவகாசி ஒன்றிய மக்கள் நீதி மய்ய செயலாளர் பவுன்ராஜ், முருகநாதன், காளிராஜன், சஞ்சீவி, பாண்டி, ரவி, மாரியப்பன் முத்து, காளி, சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிவகாசி நகர தே.மு.தி.க. சார்பில் 150 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை நகர நிர்வாகிகள் சந்திரசேகர், வழிவிடு முருகன், மகேந்திரன்ராமர், கோமதிநாயகம் ஆகியோர் வழங்கினார்கள். பா.ஜனதா கட்சியின் சார்பில் ஏழைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் கட்சியின் நிர்வாகிகள் பாட்டக்குளம் பழனிசாமி, குருநாதன், பரமசிவம், ராமர், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகாசி அருகே ஆனைக்குட்டம் பகுதியில் வேலைபார்த்த வடமாநிலத்தவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. ஆனைக்குட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராஜ் தலைமை தாங்கினார். திருத்தங்கல் ரோட்டரி கிளப் தலைவர் டாக்டர் பிச்சைமணி தனது சொந்த செலவில் சுமார் 50 குடும்பங்களுக்கு காலை உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் முருகவேல், ரவி, கருப்பசாமி, ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தினக் கூலிகளாக டிக்கெட் கேன்வாசர்கள், பஸ் பாடி கிளனர்கள், தூய்மை பணியாளர்கள் 8 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ. தொழிலாளர் சங்கம் சார்பில் தலா ரூ. 2000 நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சி.ஐ.டி.யூ. கிளை செயலர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். சம்மேளன செயலாளர் வெள்ளத்துரை நிதியை வழங்கினார். கிளை தலைவர் ராஜா, பொருளாளர் கண்ணன், ஓய்வுபெற்ற தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் சார்பாக மொட்டமலை இலங்கை அகதிகள் முகாமில் வாழும் 150 குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் வக்கீல் பிரபாகரன் தலைமையில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.

ராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், அய்யனாபுரம், நல்லமநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் 5000 முககவசங்களை தி.மு.க. பிரமுகர் கோசுகுண்டு சீனிவாசன் வழங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கசாமி, துணை செயலாளர் பாலவிநாயகம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad