ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 58 ஆக உயர்வு - கலெக்டர் சி.கதிரவன்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 58 ஆக உயர்வு - கலெக்டர் சி.கதிரவன்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 26 பேருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி ஆனது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

full-width உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. ஈரோட்டில் கொரோனா வைரஸ் கடந்த மாதம் காலூன்றியது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் மதபோதகம் செய்ய கடந்த 11-ந்தேதி ஈரோட்டிற்கு வந்தனர். இதில் ஒருவர் உடல்நலக்குறைவால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறப்பதற்கு முன்பு அவர் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டுவசதிவாரிய பகுதியில் உள்ள மசூதியில் தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த 6 பேர் தங்கியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 6 பேரையும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் 3 பேருக்கு முதலில் கொரோனா தொற்று இருப் பது உறுதியானது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டினருடன் தொடர்புடையவர்கள், தொடர்பு வைத்திருந்தவர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் பழகியவர்கள் உள்ளிட்டோரை தனிமைப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது. இதற்கிடையே தாய்லாந்து நாட்டினருடன் தொடர்புடைய ஈரோட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் புதுடெல்லியில் நடந்த தப்லிக் மாநாட்டுக்கு சென்று திரும்பியவர் களுக்கு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. எனவே புதுடெல்லி சென்று திரும்பியவர்களின் விவரங்கள் முழுமையாக கண்டறியப்பட்டன. அவர்கள் அனைவரும் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியாக அறிவிக்கப்பட்டு உள்ள பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28 பேருக்கும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஈரோடு ரெயில்வே ஆஸ்பத்திரியில் பணியாற்றிய பெண் டாக்டருக்கும் கொரோனா பரவியது. அவர் மூலமாக அவரது 10 மாத குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன்காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 32 ஆக இருந்து வந்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டாலும், ஈரோட்டில் இல்லாததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் தமிழகத்தில் ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் சென்னையில் நேற்று மாலை அறிவித்தார். இதில் ஈரோடு மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரேநாளில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 14 பெண்கள் உள்பட 26 பேருக்கும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த 26 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர், அக்கம் பக்கத்தினர் என 83 பேரின் ரத்தம், சளி மாதிரிகள் எடுக் கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்துதான் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் 8-வது இடத்தில் இருந்த ஈரோடு மாவட்டம், ஒரே நாளில் 3-வது இடத்துக்கு சென்றது.

கடந்த 5 நாட்களாக கொரோனா தொற்று இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்து வருவதாக மக்களிடையே எண்ணம் இருந்து வந்தது. ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியபோது, சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. அப்போதே கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தனி கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஈரோடும் இடம் பெற்றிருந்தது.

இதுவரை ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கவுந்தப்பாடி, சத்தியமங்கலம் உள்பட 10 இடங்களில் 33 ஆயிரத்து 330 குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 66 ஆயிரத்து 806 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்களது கைகளில் அழியாத மை கொண்டு முத்திரை குத்தப்பட்டு உள்ளது. வீடுகளின் முன்பும், 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக நோட்டீசு ஒட்டப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் கொரோனா பரவுதல் அதிகரித்து இருப்பதால், தற்போது உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு உடையவர்கள் யார்? யார்? அவர்கள் எந்தெந்த பகுதிகளில் உள்ளனர்? அவர்கள் கடந்த சில நாட்களாக எங்கெல்லாம் சென்று வந்துள்ளனர்? போன்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்பட உள்ளார்கள். இதனால் ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், கடந்த 16 நாட்களாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

தற்போது 14-ந் தேதியுடன் நாட்டில் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தாலும், கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்து வருகிறது. அப்படி குறிப்பிட்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டால், அதில் ஈரோடு நிச்சயம் இடம்பெறும் என்றே கூறலாம்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஈரோடு ரெயில்வே ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் உள்பட 4 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 பேர் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் மொத்தம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 806 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளை அணுக வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், மூச்சு திணறல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் 1800120555550 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். மேலும் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளை தொடர்பு கொள்ளலாம். இதேபோல் 24 மணிநேரமும் செயல்படும் 104 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களையும் பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

தும்மல் வரும்போது தங்களது கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு மற்ற நபர்களுக்கு பரவுவதை தடுக்க வேண்டும். 2 மணிநேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி, சோப்பு கொண்டு கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும்.

பொதுஇடங்களில் அடிக்கடி கிருமி நாசினியை தெளித்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான வழிமுறை களை அனைவரும் பின்பற்ற வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

ராமநாதபுரத்தில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 4,777 பேரில் 1,488 பேர் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளனர். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 15 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பேருக்கு நோய் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்துள்ளது. மீதம் உள்ள 4 பேரின் முடிவுகள் எதிர்பார்த்துள்ளோம். நோய் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டவர்களும் 14 நாட்கள் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை ஊரடங்கு உத்தரவு சமயத்தை பயன்படுத்தி பதுக்கி வைத்திருப்பதோ, கூடுதல்விலைக்கு விற்பனை செய்வதோ இல்லாமல் தடுப்பதற்காக அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 85 மொத்த விற்பனையாளர்களும், 4,856 சில்லரை விற்பனையாளர்களும் உள்ளனர். இவர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இந்த விற்பனையாளர்களுக்கும் பொருட்கள் கொள்முதல் செய்து கொண்டுவருவதற்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவினை பயன்படுத்தி யாராவது பொருட்களை பதுக்கி வைத்திருந்தாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

7 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டது: தூத்துக்குடி மாவட்டத்தில் 1,723 பேர் கண்காணிப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் 7 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், 1,723 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய தனியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் ஏற்கனவே பாதிக்கப்பட்ட 17 பேருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 70 பேரையும், குறைந்த தொடர்பு கொண்டவர்கள் 158 பேரையும் கண்டறிந்து உள்ளனர். 70 பேருக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் 7 இடங்கள் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் தனியாக தொடர்பு எண்கள் அடங்கிய துண்டுபிரசுரம் அச்சடிக்கப்பட்டு வீடு, வீடாக வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த மக்கள் ஏதேனும் தேவைப்பட்டால், அந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

மாவட்டத்தில் வெளிநாடு சென்று வந்தவர்கள் 2 ஆயிரத்து 200 பேர் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட 762 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இதனால் தற்போது 1,723 பேர் மட்டும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 6 நாட்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதனை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பிறகு மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 2 நடமாடும் மருத்துவ குழுக்கள் அங்கு முகாம்கள் நடத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அங்குள்ள டாக்டர் மற்றும் நர்சுகளின் ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அடுத்த 5 நாட்கள் ஆஸ்பத்திரியில் கிருமி நாசினி தெளிக்கப்படும். அதன்பிறகு செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறலாம்.

அத்தியாவசிய பணிகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 267 பேருக்கு இந்த பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரத்து 245 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். உப்பு ஏற்றுமதி செய்வதற்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் உரிய பாஸ் பெற்றுக்கொண்டு செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url