கொரோனா தொற்று ஆய்வு பணி தொடங்கியது - வீடு, வீடாக மாநகராட்சி ஊழியர்கள் செல்கிறார்கள்

சென்னையில் அனைத்து வீடுகளிலும் தினசரி பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல் இருக்கிறதா? என மாநகராட்சி சுகாதார ஊழியர்களால் ஆய்வு செய்யும் புதிய திட்டம் நேற்று முதல் செயல்படுத்தப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார்.அதன்படி சென்னை மாநகரத்தில் நேற்று முதல் கொரோனா தொற்று ஆய்வு பணி தொடங்கியது. இதில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ளடங்கிய 15 மண்டலங்களிலும் இந்த ஆய்வு பணிக்காக வார்டு வாரியாக தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் 50 முதல் 60 பேர் வரை பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக ஆய்வுக்கு சென்றனர். குடும்பத் தலைவரின் பெயர், குடும்ப நபர்களின் எண்ணிக்கை, 60 வயதுக்கு மேற்பட்டோர், 14 வயதுக்கு குறைவானோர், குடும்ப உறுப்பினர்கள் யாராவது சமீபத்தில் வெளிநாடு சென்றுள்ளார்களா? வெளிநாடு சென்று திரும்பி உள்ளார்களா? போன்ற பல்வேறு விவரங்களை வீடு வீடாக மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் சேகரிக்கிறார்கள்.

இந்த விவரங்கள் உடனுக்குடன் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல்கள் பரிமாறப்படுகிறது.

சென்னை வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரில் சிலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து வட்டார துணை ஆணையர் உத்தரவின்பேரில் உதவி சுகாதார அலுவலர் தலைமையில் சுகாதார குழு ஆய்வுக்கு சென்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆழ்வார் திருநகரில் உள்ள சில தெருக்கள் இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன.

மாநகராட்சி சுகாதார குழுவினர் ஆட்டோக்கள் மூலமும் தெருத்தெருவாக சென்று கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வு தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url