Matrimony OTT-Platforms Jobs Coupons Business

சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று; கொரோனா தடுப்பு பணியில் உயிரிழப்பவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிதி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உட்பட 210 நாடுகளுக்கு மேலாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ்  தாக்கத்தால் உலக முழுவதும் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும் கொரோனா  வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 14 மண்டலங்களில் கொரோனா பரவியது கண்டறியப்பட்டுள்ள நிலையில் கடைசி மண்டலமான மணலியிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. எனவே, மத்திய அரசு பல்வேறு தொழில்களுக்கு விதி விலக்கு அளிக்க  பரிந்துரை செய்தும், தற்போதைய கட்டுப்பாடு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை தான் முதல் இடத்தில்  உள்ளது. இதுவரை சென்னையில் கொரோனாவால் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த வாகனத்தணிக்கையை தீவிரப்படுத்தவும்  காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 14 மண்டலங்களில் கொரோனா பரவியது  கண்டறியப்பட்டுள்ள நிலையில் கடைசி மண்டலமாக மணலியிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்  சென்னை உள்ள அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தனது ஆதிக்கத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் மருத்துவமனையில் 32 பேருக்கு கொரோனா தொற்று இல்லை
திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 32 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட 32 பேரும் 28 நாட்களுக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழப்பவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிதி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிர் இழப்பவர்களுக்கான நிதி உதவியை, ரூ.50 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். தற்போது அந்த நிதியை 50 லட்ச ரூபாயாக உயர்த்தி அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று நோய் போராட்டத்தில் முன் நின்று பணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் துறையைச்

சார்ந்த பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிற அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், எவருக்கேனும் இந்நோய் ஏற்பட்டால் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் எனவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் கொடுக்கப்படும் எனவும், எதிர்பாராதவிதமாக இறப்பு ஏற்படுமானால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் வழங்குவதுடன் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் எனவும் நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் அரும்பணியாற்றி வரும் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் எவரேனும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் திட்டம் மூலம் வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த போர்க்காலப் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத் துறைகளான மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களும் கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டு நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு நான் ஏற்கனவே அறிவித்த 10 லட்சம் ரூபாய்க்குப் பதிலாக 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். மேலும், அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும்.

இத்தகைய தன்னலமற்ற பணியை முன்னின்று செய்யும் மேற்சொன்ன நபர்கள் தனியார் மற்றும் அரசு துறையிலிருந்து இறப்பை சந்திக்க நேர்ந்தால் அவர்களின் பணிக்கு நன்றிக்கடன் செலுத்துவது அரசின் கடமை என்பதை கருத்தில் கொண்டு உயிரிழந்தவர்களின் உடலை பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

கொரோனோ தொற்று தடுப்பு பணியில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் இப்பணியில் ஈடுபட்டுள்ள பிற துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் இப்பணியில் ஈடுபட்டு உயிரிழக்க நேரிடும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின் பணியை பாராட்டி அவர்களுக்கு உரிய விருதுகளும், பாராட்டுச்சான்றுகளும் வழங்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்களில் எவருக்கேனும் கொரோனோ தொற்று ஏற்பட்டால், அந்த மருத்துவப் பிரிவில் பணிபுரியும் அனைவருக்கும் பரிசோதனை செய்யவும், அந்த மருத்துவமனையின் பிரிவில் முழுமையாக நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்குப் பிறகு மீண்டும் அங்கு மருத்துவப்பணிகளைத் தொடரவும் அனுமதிக்கப்படும்.

தற்போது நிலவிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சென்னை மாநகரத்தில் நோய் தடுப்பு பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்தவும், நோய் தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்புகளை உடனுக்குடன் கண்டறிந்து சோதனைக்கு உள்ளாக்கவும், மாநகர பகுதிகளில் மூச்சிறைப்பு, காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் கொரோனோ தொற்று பரிசோதனை செய்யவும், இதன் மூலம் சென்னை மாநகரில் தற்போது செய்யப்பட்டு வரும் பரிசோதனைகளை கணிசமாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்.

இதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கார்த்திகேயன் மற்றும் பாஸ்கரன் ஆகிய 2 உயர் அலுவலர்கள் சென்னை மாநகரத்திற்கு கூடுதலாக மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad