கொரோனாவுக்கு மருத்துவர் பலி: இந்தியாவில் முதல் முறை - இந்தூரில் சோகம்
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் உயிரிழந்தார். கொரோனாவுக்கு எதிராக இரவு பகல் பாராமல் மருத்துவர்கள் போர் செய்து கொண்டிருக்கக் கூடிய நிலையில், அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் சரியாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சார்பாக கூட கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான உபகரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டிருந்தது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் மருத்துவர் ஒருவர், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை வழங்கி வந்தார். இதன் பின்னர் இவருக்கும் கொரோனா தொற்று இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்துதனிமை வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.அதே போல டெல்லியின் இருக்கக்கூடிய சப்தர்ஜங், எய்ம்ஸ மருத்துவமனையை சேர்ந்த சில மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர மும்பை, ஹைதராபாத், பெங்களூர் என்று முக்கியமான நகரங்களில் பணிபுரிந்து வந்த மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.