போலீசிடம் சிக்கிய கணவரை மீட்க நடந்தே வந்த கர்ப்பிணி - சமூகவலைத்தளங்களில் பாராட்டு

தனக்காக மருந்து வாங்க சென்று போலீசிடம் சிக்கிய கணவரை மீட்க கொளுத்தும் வெயிலில் நடந்தே வந்த கர்ப்பிணியை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
மதுரையில் வாகன போக்குவரத்தை குறைக்கவும், தேவையில்லாமல் மோட்டார் சைக்கிளில் சுற்றிதிரிபவர்களை தடுக்கவும் நகரில் உள்ள அனைத்து பாலங்களையும் போலீசார் மூடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

full-width மேலும் வைகை ஆற்றின் வடக்கே இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் அனைத்து பாலங்களும் மூடப்பட்டு, கோரிப்பாளையம் ஏ.வி.மேம்பாலம் மட்டும் அத்தியாவசிய தேவைக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அதன் வழியாகவும் வாகனங்கள் அதிகமாக சென்றால் அவ்வழியாக செல்பவர்களை நிறுத்தி விசாரித்து அனுப்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் ஏ.வி.மேம்பாலம் பகுதியில் காலை 9 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை வாகனங்களை போலீசார் நிறுத்தி விசாரித்த பின்னரே அனுப்புகின்றனர். இந்த நிலையில் கோரிப்பாளையம் அருகே உள்ள ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது கர்ப்பிணி மனைவிக்கு மருந்து வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார்.

கோரிப்பாளையம் ஏ.வி.பாலம் அருகே வந்த போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் தனது மனைவிக்காக மருந்து வாங்க செல்வதாக கூறியும் போலீசார் கேட்காமல் அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதை அவர் போன் மூலம் வீட்டில் இருக்கும் தன்னுடைய மனைவிக்கு தெரிவித்துள்ளார்.

உடனே தனது கணவரை போலீசாரிடம் இருந்து மீட்பதற்காக அந்த கர்ப்பிணி வெயிலில் நடந்தே வந்தார். பின்னர் அவர் நடந்த சம்பவம் குறித்து அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளை திரும்ப தரமுடியாது என்று கூறி கடுமையான வார்த்தைகளால் பேசி அங்கிருந்த விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த அந்த பெண், தனது கணவரை அழைத்து கொண்டு வீட்டிற்கு மீண்டும் நடந்தே சென்றார்.

இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த சிலர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் உடனடியாக விசாரணை நடத்தினர். பின்னர் நடவடிக்கை எடுத்து, கர்ப்பிணியின் கணவரிடம் மோட்டார் சைக்கிளை திரும்பவும் ஒப்படைத்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசாரின் உன்னத பணிகளை பொதுமக்கள் பாராட்டுகிறார்கள். இந்த நிலையில் அவசர தேவைக்கு மருந்து வாங்க செல்கிறவர்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. அதே போன்று தனக்காக மருந்து வாங்க சென்ற கணவர் போலீசாரிடம் சிக்கியதை அறிந்து, அவரை மீட்க நடந்தே சென்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்த கர்ப்பிணியின் செயலையும் பாராட்டி மதுரையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

தேவையின்றி வலம்வரும் வாகனங்களுக்கு பெயிண்ட் அடித்து கண்காணிப்பு - போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி வாகனங்களில் வருபவர்களை அடையாளம் காணும் வகையில் வாகனங்களில் வண்ண பெயிண்ட் அடித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கூறியதாவது:- மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தி உள்ள நிலையில் மக்கள் நலன் கருதி அதனை தீவிரமாக கடைபிடிக்க மாவட்ட காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் தேவையின்றி வாகனங்களில் சர்வ சாதாரணமாக சுற்றித்திரி கின்றனர். இதுகுறித்து ரோந்து போலீசார் விசாரித்தால் காய்கறிகள், உணவு பொருட்கள் வாங்க வருவது போன்ற காரணங்களை கூறி வருகின்றனர். இன்றுதான் வெளியில் வருகிறேன். இதற்கு முன்னர் வரவில்லை என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இதுபோன்ற செயல்களை தவிர்க்கும் வகையில் ஒரே நபர் தொடர்ந்து தினமும் வாகனங்களில் சுற்றித்திரிவதை தடுக்கும் நோக்கில் பெயிண்ட் அடித்து கண்காணிக்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி சம்பந்தப்பட்டவரிடம் காரணம் குறித்து விசாரிக்கப்படும். மேலும் அவரின் வாகனத்தின் முன்பக்க சக்கரம் மற்றும் மட்கார்டு பகுதியில் வண்ண பெயிண்ட் அடையாளமாக பூசப்படும். இந்த வாகனம் அடுத்த 5 நாட்களுக்கு இடையில் வெளியில் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு உத்தரவு அரசின் அறிவிப்பின்படி வருகிற 14-ந்தேதி வரை உள்ளதால் 5 நாட்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் வெள்ளை, சிவப்பு, ஊதா, இளஞ்சிவப்பு என ஒவ்வொரு வண்ணம் பூசப்படும். இதன்மூலம் அந்த வாகனம் 5 நாட்களுக்கிடையில் வெளியில் சுற்றினால் வாகனத்தில் பூசப்பட்டுள்ள வண்ணத்தின் அடிப்படையில் இதற்கு முன் அந்த வாகனம் எந்த நாளில் வெளியில் வந்தது என்பது தெளிவாக தெரிந்துவிடும். இதன்படி மாவட்டம் முழுவதும் சாலைகளில் தேவையின்றி சுற்றிய நபர்களின் வாகனங்களில் வெள்ளை நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளது.

எந்த தேவையாக இருந்தாலும் 5 நாட்கள் இடைவெளிக்கு முன்னதாக வந்ததும் உறுதியாகிவிடும். இதன்மூலம் வாகனத்தின் வண்ண ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். இந்த நடைமுறையை அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் தீவிரமாக கடைபிடித்து நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்களை தண்டிப்பது எங்கள் நோக்கமல்ல. கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றுவதே நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெளியில் தேவையின்றி சுற்றித் திரிவதை தடுக்க மாவட்ட காவல்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் 2 ஆயிரம் பேருக்கு ரூ.15 லட்சம் மளிகை பொருட்கள் - போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் 2 ஆயிரம் பேருக்கு ரூ.15 லட்சம் மளிகை பொருட்களை போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் வழங்கினார்.

கொரோனாவை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அமல்படுத்த போலீசாருடன் ஊர்க்காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீசாருடன் பணியாற்றும் ஊர்க்காவல்படை மற்றும் தன்னார்வலர்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் மளிகை, காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கலந்து கொண்டு சுமார் 2 ஆயிரம் பேருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான மளிகை பொருள்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார். ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா, இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உடன் இருந்தனர்.

கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி 968 கேமராக்கள் மூலம் திருச்சி மாநகரை கண்காணிக்கும் போலீசார்
போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி திருச்சி மாநகரில் ஊரடங்கு எப்படி உள்ளது? என 968 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்தனர்.

திருச்சி மாநகரில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபடுவோரை கண்டறியும் வகையிலும், பொதுமக்கள் சாலை விதிகளை மீறுகிறார்களா? என்றும், கண்காணிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பிரமாண்ட தொலைக்காட்சி பெட்டிகளில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்காக மாநகர காவல்துறை சார்பில் மட்டும் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடுகிற மத்திய பஸ் நிலையம், காந்தி மார்க்கெட் பகுதி, சாலை சிக்னல் சந்திப்புகள், ரவுண்டானாக்கள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 968 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் நகரில் இருசக்கர வாகன ஓட்டிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. எந்தெந்த பகுதியில் அதிக நடமாட்டம் உள்ளது என கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் மட்டும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் ஷிப்டுக்கு 6 போலீசார் வீதம் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ரேஷன் கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கவில்லை என புகார் வந்தாலும் உடனடியாக போலீசார் உஷார்படுத்தப்பட்டு உடனடியாக சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நகரில் உள்ள 8 தற்காலிக காய்கறி சந்தையும் மூடப்பட்டு விட்டதால் வாகன நடமாட்டம் மிகவும் குறைந்து விட்டது. மதியம் 1 மணிவரை சில வாகனங்கள் மட்டுமே சாலையில் சென்று வந்தன. ஆனால், பிற்பகல் 1 மணிக்கு மேல் பெரும்பாலான சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின.

மேலும் எங்கெல்லாம் பிரச்சினை என தெரிந்தாலும் அவற்றை சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணித்து கட்டுப்பாட்டு அறை போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசாருடன் இணைந்து தன்னார்வலர்கள் மற்றும் சாரணப்படை மாணவர்களும் பணியில் ஈடுபட்டனர்.

ஊரடங்கை மீறுபவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்த இடவசதியின்றி போலீசார் திணறல்
ஊரடங்கை மீறுபவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்த இடவசதியின்றி போலீசார் திணறி வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை மக்கள் அலட்சியமாக மீறி வீதிகளில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட், வேதாரண்யம் சாலை, திருவாரூர் சாலை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து உள்ளனர். சோதனை சாவடிகளில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரூபாதேவி, தேவதாஸ் ஆகியோர் உள்பட ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சாவடி வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் எங்கு செல்கிறீர்கள்? எதற்காக செல்கிறீர்கள்? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி வரும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யும் போலீசார் அவர்களுடைய வாகனங்களையும் பறிமுதல் செய்கிறார்கள்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 450-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 410 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் குவிவதால் இடநெருக்கடி ஏற்பட்டு, போலீஸ் நிலைய வளாகத்துக்குள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்த போலீசார் திணறி வருகிறார்கள்.

மேலும் போலீஸ் நிலையத்துக்குள் செல்வதற்கே சிரமம் ஏற்பட்டு இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள். நோயில் இருந்து காப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை பொதுமக்கள் முறைப்படி கடைபிடிக்க வேண்டும் என்பது போலீசாரின் எதிர்பார்ப்பாகும்.

அரியூர் அருகே மலைப்பகுதிகளில் சாராய கும்பலை பிடிக்க ஹெலிகேம் மூலம் போலீசார் சோதனை
அரியூர் அருகே உள்ளே மலைப்பகுதிகளில் சாராய கும்பலை பிடிக்க ஹெலிகேம் மூலம் போலீசார் சோதனை செய்தனர்.

ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாராய வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது. மதுபிரியர்களும் எங்காவது சாராயம் கிடைக்குமா? என விசாரித்து அங்கு சென்று சாராயம் குடித்து வருகின்றனர். குறிப்பாக வேலூரை அடுத்த அரியூர் அருகே புலிமேடு மலைப்பகுதியில் ஒரு கும்பல் சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அதை தட்டிக் கேட்ட புலிமேடு பகுதி கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 3 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து 3 பேரை அரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) கைது செய்தார். எனினும் அந்த மலைப்பகுதியில் சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் பல்வேறு இடங்களிலும் சாராய விற்பனை நடந்து வருகிறது. இதை தடுக்க முடியாமல் மாவட்ட காவல்துறை திணறி வருகிறது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கு தொடர்வதால் சாராய விற்பனையும் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் காய்ச்சுபவர்கள் மலைகளில் பதுங்குவதால் அவர்களை பிடிப்பது போலீசாருக்கு சவாலாகவே உள்ளது.

இந்த நிலையில் சாராய கும்பலை பிடிக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் புலிமேடு மலைப்பகுதியில் ஹெலிகேம் மூலம் சாராய கும்பலின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், புலிமேடு, சிவநாதபுரம், குருமலை, மாட்டுப்பாறை போன்ற இடங்களில் ஹெலிகேம் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் புலிமேடு மலைப்பகுதியில் சாராய கும்பலின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. சாராயம் காய்ச்சும் இடங்கள், விற்பனை இடங்களை கண்டறிந்துள்ளோம். விரைவில் சாராய கும்பலை சுற்றி வளைத்து கைது செய்வோம் என்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad