அத்தியாவசிய பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி - காஞ்சீபுரம் போலீசார் அறிவிப்பு

அத்தியாவசிய பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்லவேண்டும் என்று காஞ்சீபுரம் போலீசார் அறிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்பவர்கள் தவிர மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் பொதுமக்கள் தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிகிறார்கள். அனாவசியமாக சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், நூதன தண்டனைகளையும் வழங்கி எச்சரித்து வருகின்றனர்.

ஆனாலும் பொதுமக்கள் சிலர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக கூறி இருசக்கர வாகனங்களில் 2 பேர் என வெளியே சுற்றி திரிகிறார்கள். காஞ்சீபுரம் மாவட்டத்தில் இவ்வாறு அதிகளவில் அத்தியாவசிய பொருட்கள் கடைகளில் கூட்டம் கூடுகின்றனர்.

இதையடுத்து போலீசார், இதுபோன்று வரும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இனிமேல் இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்லவேண்டும். மீறி இருசக்கர வாகனத்தில் 2 பேர் பயணம் செய்தால், அந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்து உள்ளனர்.

அதன்படி நேற்று காஞ்சீபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட் பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் 2 பேராக வந்தவர்களை போலீசார் நிறுத்தி ஒருவரை வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு ஒருவர் மட்டுமே மார்க்கெட் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் மார்க்கெட் பகுதியில் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. மேலும் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம், மூங்கில் மண்டபம் பகுதியில் 2 பேராக சென்றவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2,371 வாகனங்கள் பறிமுதல் - போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய வழக்கில் 2,371 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கூறினார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கையொட்டி பணியாற்றி வரும் போலீசாரை ஊக்கப்படுத்தும் வகையிலும், கிருஷ்ணகிரியில் பணியாற்றி வரும் போலீசாருக்கு ஒளிரும் கிருஷ்ணகிரி அமைப்பினர், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது முதல் தொடர்ந்து 3 வேளை உணவை இலவசமாக அளித்து வருகின்றனர். அத்துடன் தனி நபர்களும், இப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பழச்சாறு, பழம், காபி, டீ போன்றவற்றையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி டவுன், கிருஷ்ணகிரி தாலுகா, மகாராஜகடை, குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி டேம், காவேரிப்பட்டணம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் சுமார் 300 போலீசாருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா, ராயக்கோட்டை மேம்பாலம் ஆகிய இடங்களில் நடந்தது.

இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் தலைமை தாங்கி 300 போலீசாருக்கும், தலா 10 கிலோ அரிசி, பருப்பு வகைகள் 2 கிலோ, மைதா மற்றும் கோதுமை மாவு 2 கிலோ, உப்பு ஒரு கிலோ, வெங்காயம் 1 கிலோ, சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் என வீட்டு சமையலுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பையை வழங்கி, போலீசாரை வாழ்த்தி பேசினார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,671 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,371 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சுழற்சி முறையில் மூன்றில் ஒரு பங்கு காவலர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ள காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் சட்டத்தை மதித்து, போலீசாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் (கிருஷ்ணகிரி டவுன்), சுரேஷ்குமார் (கிருஷ்ணகிரி தாலுகா), கணேஷ்குமார் (மகராஜகடை), வெங்கடாசலம் (காவேரிப்பட்டணம்), ரஜினி (குருபரப்பள்ளி) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

நாமக்கல்லில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிசீட்டு இல்லாமல் வந்த பொதுமக்களை எச்சரித்த போலீசார்
நாமக்கல்லில் அனுமதி சீட்டு இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வீட்டினை விட்டு வெளியே வருவதினை முறைப்படுத்தும் நோக்கத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் கடந்த 9-ந் தேதி முதல் அமலுக்கு வந்து விட்டன.

அதன்படி அனைத்து வீடுகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்ல அனுமதி சீட்டு 3 வண்ணங்களில் வழங்கப்பட்டு உள்ளது. பச்சை வண்ண சீட்டு உள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளிலும், நீல நிற சீட்டு உள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும், ரோஸ் வண்ண சீட்டு உள்ளவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீட்டில் குறிப்பிட்டுள்ளபடி பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்களா? என போலீசார் அவ்வப்போது வாகன சோதனை செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நாமக்கல்-திருச்சி சாலையில் சோதனை மேற்கொண்ட போலீசார் அனுமதி சீட்டு இல்லாமல் வெளியே வந்த நபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலர் தங்களுக்கு இன்னும் அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]