Matrimony OTT-Platforms Jobs Coupons Business

சென்னையை அச்சுறுத்தும் கொரோனா; கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மக்கள் செல்வதற்கு தடை

சென்னையை அச்சுறுத்தும் கொரோனா: அதிக பாதிப்பைச் சந்தித்த 6 மண்டலங்கள்
சென்னையில் நேற்று வரை 168-ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை இன்று 202-ஆக அதிகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் சென்னையின் பாதிப்பு விகிதம் 32.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சென்னை முதல் முறையாக மார்ச் 18-ஆம் தேதி டெல்லியில் இருந்து ரயிலில் மூலம் வந்த வடமாநில வாலிபருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

அதன்பின், சென்னையில்  மார்ச் மாதத்தில் மொத்தம் 25 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர், ஏப்ரல் 2-ஆம் தேதி 20 பேரும், 3ம் தேதி 35 பேரும், ஏப்ரல் 7ம் தேதி 39 பேர் பாதிக்கப்பட்டனர்.  பின்னர், 10 நாட்கள் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஏப்ரல் 19ம் தேதி சென்னையில் ஒரே நாளில் 50 பேர் பாதிக்கப்பட்டு, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக அதிகரித்து.

தொடர்ந்து, ஏப்ரல் 20-ஆம் தேதி 18 பேரும், ஏப்ரல் 21-ஆம் தேதி 55 பேரும், ஏப்ரல் 22-ஆம் தேதி 15 பேரும், ஏப்ரல் 25ம் தேதி 43 பேரும், ஏப்ரல் 26-ஆம் தேதி 28-ஆம் தேதி பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று ஒரே 47 பேர் பாதிக்கப்பட்டனர். இது மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் 90 சதவீதமாகும்.இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் இன்று மீண்டும் ஒரே நாளில் சென்னையில் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 2058 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில், 32.7 சதவீதமாகும்.
சென்னையில், ஏப்ரல் 19-ஆம் தேதி வரை 78 வார்டுகளில் தான் பாதிப்பு இருந்தது. ஆனால், 19-ஆம் தேதியில் இருந்து சென்னையில் மட்டும் 558 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 64.22 சதவீதம் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், ராயபுரம், திரு.வி.க நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய 6 மண்டலங்களில் தொற்றால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் நேற்று வரை 168 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை இன்று 202 ஆக அதிகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, சென்னையில் 10 லட்சம் பேரில் 3096 பேர் சராசரியாக பரிசோதிக்கப்படுகின்றனர். இதுமற்ற மாவட்டங்களை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம். இதுவும் அதிக தொற்றுகளை கண்டறிய காரணமாக இருக்கலாம்.

மேலும், மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. சென்னையில், ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்களால் அல்லாமல், புதிதாக தொற்று ஏற்படக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வரக்கூடிய சில நாட்கள் மேலும் சென்னையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மக்கள் செல்வதற்கு தடை
சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த அந்தந்த பகுதிகளில் உள்ள திறந்தவெளி மைதானம் மற்றும் பேருந்து நிலையத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மக்கள் செல்வதற்கு அனுமதியில்லை என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய் தீவிரம் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி, பழங்கள் சந்தையை மூன்றாக பிரித்து கேளம்பாக்கம், மாதவரம், கோயம்பேடுகளில் இயக்குவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் நேரடியாக வர தடைசெய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு வணிக வளாகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் சில்லறை விற்பனை முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது. சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த அந்தந்த பகுதிகளில் உள்ள திறந்தவெளி மைதானம் மற்றும் பேருந்து நிலையத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ மார்க்கெட் மற்றும் பழங்கள் அங்காடி வியாழன் முதல் மாதாவரம் பேருந்து நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் ஏற்றிவரும் வெளி மாநில வாகனங்கள் மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்களை இறக்கி வைத்தபின் வெளியேற்றப்படும். அதிகாலை முதல் 7.30 மணி வரை வியாபாரிகள் சில்லறை விற்பனைக்கு காய்கறிகள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்கறி அங்காடிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அட்டவணையானது கோயம்பேடு உணவுதானிய அங்காடிக்கும் பொருந்தும். தற்பொழுது சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் லாரிகள் மற்றும் வீட்டு வினியோக நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் காய்கறி வினியோகமானது தொடர்ந்து நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad