Matrimony OTT-Platforms Jobs Coupons Business

தொடரும் வழிப்பறி சம்பவங்கள்: சென்னையில் கொரோனா பீதிக்கு மத்தியில் திருட்டு அதிகரிப்பு - ஊரடங்கால் கொள்ளையர்கள் உற்சாகம்

சென்னையில் கொரோனா பீதிக்கு மத்தியில், தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருந்து வருகிறது. எனவே கொரோனா நோய் தங்களுக்கு வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் சென்னை மக்கள் சிலர் வெளியே வராமல் வீட்டுக் குள்ளே முடங்கி கிடக்கிறார்கள்.

இந்தநிலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளை நோட்டமிட்டு வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்ட தொடங்கி உள்ளனர்.

சென்னை வடபழனியில் மத்திய அரசு ஊழியரிடம் செல்போன் பறிப்பு, நுங்கம்பாக்கத்தில் நடந்து சென்ற மீனாட்சி என்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு, செங்குன்றத்தில் 34 வயதுடைய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு, சூளைமேட்டில் மகளுடன் மொபட் வாகனத்தில் சென்ற திலகம் (65) என்ற மூதாட்டியின் பணப்பை பறிப்பு, அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் மொபட்டில் சென்ற பெண் போலீஸ் ஆசாவிடம் 7 பவுன் நகை பறிப்பு, அயனாவரத்தில் சாந்தி (67) என்ற மூதாட்டியிடம் 1½ பவுன் பறிப்பு என சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு இடங்களில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.

மேலும் புழல் பகுதிகளில் மளிகை கடைகளில் நோட்டமிட்டு கொள்ளை சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இதனால் கொரோனா பீதியில் இருக்கும் மக்களிடம் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போன்று திருட்டு சம்பவங்கள் அமைந்து உள்ளன. முகவரி கேட்பது போன்று நடித்து தான் வழிப்பறி சம்பவங்கள் அதிகளவு நடக்கிறது.

எனவே பொதுமக்களும், பெண்களும் உஷாராக இருக்க வேண்டும். வெளியே செல்லும் போது நகைகள் வெளியே தெரியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சாலையில் செல்லும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

சாலைகளில் போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளதால் வழிப்பறி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள் மூலம் குறுகிய சந்துகள், தெருக்கள் வழியாக நுழைந்து போலீசார் கண்ணில் படாமல் தப்பி விடுகிறார்கள்.

ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை எண்ணி மனவேதனையில் இருக்கும்போது, கொள்ளையர்கள் மட்டும் உற்சாகமாக சுற்றி வருகிறார்கள். கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் வழிப்பறி திருடர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தற்போது ஊரடங்கு உத்தரவை அனைவரும் முறையாக கடைபிடித்து வீட்டில் இருந்தால் போலீசாரின் வழக்கு நடவடிக்கையில் இருந்து மட்டும் அல்ல, திருடர்களின் கைவரிசையில் இருந்து தப்பிக்கலாம் என்பதையே வழிப்பறி சம்பவங்கள் உணர்த்துகின்றன.

கோயம்பேட்டில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபானங்கள் திருட்டு - போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்
கோயம்பேட்டில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிய மர்மநபர்கள், ரோந்து போலீசாரை கண்டதும் சில மதுபான பெட்டிகளை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

full-width கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன. குடிபோதைக்கு அடிமையான சிலர் எப்படியாவது குடித்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்தும், சுவரில் துளை போட்டும் திருடும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் தினமும் ரோந்து பணியில் இருக்கும் போலீசார் டாஸ்மாக் கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருக்கும் நோட்டுகளில் கையெழுத்து போட்டுவிட்டு கடையை கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கோயம்பேடு ரெயில் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள நோட்டில் கையெழுத்து போடுவதற்காக ரோந்து போலீசார் சென்றனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன், கடையின் வெளியே 7 அட்டை பெட்டிகளில் மதுபான பாட்டில்கள் இருப்பதும் தெரிந்தது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் நேற்றுமுன்தினம் இரவு மர்மநபர்கள் சிலர் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்றனர். அப்போது ரோந்து போலீசார் வருவதை கண்டதும், 7 பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்களை மட்டும் அங்கேயே வைத்து விட்டு சென்றதும் தெரிந்தது.

போலீசார் குறித்த நேரத்தில் வராவிட்டால் கடையில் உள்ள அனைத்து மதுபாட்டில்களையும் கொள்ளையடித்து சென்று இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை கோயம்பேடு போலீசார் தேடி வருகின்றனர்.

ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை முயற்சியா? நாகர்கோவிலில் ஏ.டி.எம். மையம், மருந்து கடை கண்ணாடி உடைப்பு - போலீசார் விசாரணை
நாகர்கோவிலில் ஏ.டி.எம். மையம், மருந்து கடை கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை முயற்சி நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட் பகுதியில் ஒரு தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இதில் பணம் எடுப்பதற்காக நேற்று காலை பொதுமக்கள் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றனர். ஏ.டி.எம். மைய கண்ணாடி உடைக்கப்பட்டு நொறுங்கி கிடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே பறக்கை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு மருந்து கடை முகப்பு கண்ணாடியும், கடையின் பூட்டும் உடைக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்றும் பார்வையிட்டனர். ஆனால் கடையில் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இடலாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் கண்ணாடியை அந்த வழியாகச் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர் உடைத்தது, அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இதேபோல் மனநலம் பாதிக்கப்பட்ட யாரோ ஏ.டி.எம். மையம் மற்றும் மருந்து கடையின் கண்ணாடிகளை உடைத்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தனர். மேலும் ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை முயற்சி நடந்ததா? என விசாரணை நடந்து வருகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad