தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிக்கை வயிறு எரிச்சலின் உச்சக்கட்டமாக இருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அரசின் நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள். இது மு.க.ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. அவருடைய வயிறு எரிச்சலின் உச்சக்கட்டம் தான் அவரின் அறிக்கையாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், திருக்கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், உயிரியல் பூங்காக்கள் 16.3.2020 முதல் மூடப்பட்டுவிட்டன. அன்றைய தினம் முதல் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டது.

அதேநாளில் சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். அவருக்கு தகுந்த விளக்கம் அரசால் தரப்பட்டது. ஆனால் மு.க.ஸ்டாலின் அன்றையதினம் மாலையிலேயே சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆயிரம் பேர் கூடி இருந்த கூட்டத்தில் பேசினார். அதேபோல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் கூட்டங்கள் நடந்தது. சட்டமன்றத்துக்கு வந்தால் கொரோனா பரவும். பொதுக்கூட்டத்தில் கொரோனா பரவாதா? இதுதான் ஸ்டாலினின் பாணி. தி.மு.க.வினர் தான் நோய்த்தொற்று பரவ காரணமாக இருந்துள்ளனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

முதல்-அமைச்சர் ஆரம்பக்கட்ட நிலையிலேயே இந்த நோயை தடுக்க வேண்டும் என்ற நிலையில், பொது சுகாதார சட்டத்தின் கீழ் இதை தொற்று நோயாக அறிவித்தார். அதுமட்டுமில்லாமல், அவர் தலைமையில் வைரஸ் தொற்று தடுப்பு குறித்து 7 முறை மூத்த அமைச்சர்கள் கொண்ட உயர்மட்டக்குழு கூட்டம் நடந்து இருக்கிறது.

இதுதவிர காணொலி காட்சி மூலமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் தொடர்பு கொண்டு நோய் தடுப்பு குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டார். நோய் தடுப்பு பணிக்காக அரசு செயலாளர் அந்தஸ்தில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் பெற்றனர்.

அதேபோல், 19 பேர் மருத்துவக்குழுவினருடனும் ஆய்வு மேற்கொண்டார். நம்முடைய தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரூ.3,280 கோடி மதிப்பில் நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஏதாவது ஒரு தவறை கண்டுப்பிடிக்கலாம் என்று அவர் பார்க்கிறார். மைக்ரோஸ்கோப் கொண்டு பார்த்தால் கூட எங்களுடைய அரசில் தவறை கண்டுபிடிக்க முடியாது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் தடுப்பு பணி முதல்-அமைச்சர் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது. இதனை எல்லோரும் பாராட்டுகிறார்கள். மத்திய சுகாதாரத்துறையே நம்மை பாராட்டியுள்ளது. இது ஸ்டாலினுக்கு தெரியாதா?.

சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் பேட்டி கொடுக்காமல் தலைமை செயலாளர் பேட்டி கொடுப்பதால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன வருத்தம்?. நாட்டு மக்களுக்கு அரசு செய்வது சென்றடைகிறது. தலைமை செயலாளர் அனைத்துத் துறைகளின் தலைமை நிர்வாக அதிகாரி, ஒரு துறை சார்ந்த தகவல் என்றால் ஒரு துறையின் செயலாளர் தகவல் கொடுக்கலாம். ஆனால் பல துறை சார்ந்த தகவல் என்றால், தலைமை செயலாளர் தான் பதில் சொல்லவேண்டும்.

ஊரடங்கை அறிவித்ததில் இந்தியாவுக்கே நாம் தான் முன்னோடி. காணொலி காட்சியில் பிரதமரிடம் பேசியபோது, முதல்-அமைச்சர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கூறினார். ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும் என அப்போது பிரதமர் கூறி இருக்கிறார். ஊரடங்கை இந்தியா முழுவதும் பின்பற்றினால்தான் நோயை கட்டுப்படுத்த முடியும், இது அடிப்படையான விஷயம். ஆகவே அந்த ஊரடங்கு உத்தரவை பிரதமர் அறிவிப்பது தான் சாலச் சிறந்தது.

எங்களை பொறுத்தவரையில், முதல்-அமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசின் நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள். இது மு.க.ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. அவருடைய வயிறு எரிச்சலின் உச்சக்கட்டம் தான் அவரின் அறிக்கையாக பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் உலக தமிழ் சங்க கட்டிட வளாகத்தில் நடந்தது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கினார். கலெக்டர் வினய், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம், சரவணன், பெரியபுள்ளான், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன், மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தமிழகத்தில் மொத்தமாக கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 969. அதில் மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 25 பேரில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். முதல்-அமைச்சர் அறிவுரையின்படி சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை என பல்வேறு துறையினர் பணியினை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் இறப்பை ஒரு சதவீதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பது தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சான்றாகும். நோயை தடுக்கும்பட்சத்தில் வீடு, வீடாக கட்டுப்படுத்தும் திட்டத்தில் 33 ஆயிரம் பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.

நாளொன்றுக்கு ஏறத்தாழ 10 ஆயிரம் காய்கறிகள் மற்றும் பழங்கள் தொகுப்பு பைகளை மக்களிடையே சேர்ப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு பைகளை மக்களிடையே சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. தமிழக அரசின் சார்பில் தேசிய பேரிடர் மீட்பில் இருந்து ரூ.1000 கோடி நிவாரணம் கோரப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு ஏற்கனவே 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் நிதி பற்றாக்குறை இல்லை. மதுரையில் பல்வேறு சங்கங்கள் கொடுக்கக்கூடிய கோரிக்கைகள் எல்லாம் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்திருந்தனர்.

பர்கூர் மலைப்பகுதி ரேஷன் கடைகளில் எம்.எல்.ஏ. ஆய்வு
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார்.

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் ஊசிமலை, கோவில்நத்தம், ஒசூர், தேவர்மலை, தாளக்கரை, தட்டக்கரை உள்பட 11 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளின் மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 889 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களிடம் தமிழக அரசால் வழங்கப்படும் கொரோனா நிவாரண பொருட்கள் முறையாக கிடைக்கிறதா? என கேட்டறிந்தார். மேலும் அங்கிருந்த ஊராட்சி பணியாளர்களிடம் மலைக்கிராமங்களில் வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட குழு உறுப்பினர் சண்முகவேல், அந்தியூர் ஒன்றியக்குழு தலைவர் வளர்மதி தேவராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் ராயண்ணன், பர்கூர் ஊராட்சி தலைவர் மலையான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad