டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து போலீஸ்காரர் பலி - போலீஸ் ஏட்டு படுகாயம்


சென்னை ஆயிரம்விளக்கு போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 24). இவர், சென்னை ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். செய்யாறு போலீஸ் நிலையத்தில் மதுவிலக்கு பிரிவு ஏட்டுவாக வேலை செய்பவர் சன்னிலாயத் (45). இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை செய்யாறில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்தனர்.

காரை சன்னிலாயத் ஓட்டினார். அவருக்கு அருகில் துரைராஜ் அமர்ந்து பயணம் செய்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் அருகே வேகமாக வந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் பல்டி அடித்து கவிழ்ந்ததுடன், சுமார் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. அதே வேகத்தில் அந்த பகுதியில் சாலை விரிவாக்கப்பணிக்காக சாலையோரம் கால்வாய் பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் பாய்ந்த கார், அங்கு கால்வாய் பாலத்துக்காக அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பின்பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் போலீஸ்காரர் துரைராஜ், உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் ஏட்டு சன்னிலாயத், படுகாயத்துடன் காருக்குள் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சன்னிலாயத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url