Matrimony OTT-Platforms Jobs Coupons Business

‘டாக்டர்களுக்கு அரசு துணை நிற்கும்’ - எடப்பாடி பழனிசாமி; கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவேண்டும் - டாக்டர் சைமனின் மனைவி வேண்டுகோள்

மரணம் அடைந்தவர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு கிளம்பியது குறித்து வேதனை தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர்கள் தன்னலம் கருதாமல் பணியாற்றுபவர்கள் என்றும், அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் உறுதி அளித்து உள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 55 வயதான டாக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அவரது உடலை ஆம்புலன்சில் டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள கல்லறைக்கு கொண்டு சென்ற போது, அந்த பகுதி மக்கள் அங்கு உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அண்ணாநகர் வேலங்காடு பகுதியில் உள்ள கல்லறைக்கு கொண்டு சென்றனர். அந்த பகுதி மக்களும் அங்கு உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அப்போது ஆம்புலன்ஸ் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் சேதம் அடைந்ததோடு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இருவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலையரசன், செந்தில்குமார் உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைத்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாக்டரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கு முன், கொரோனா நோய்த் தொற்றால் இறந்த ஆந்திர மாநில டாக்டர் ஒருவரின் உடலை எரிக்க அம்பத்தூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உடலை திருப்பி அனுப்பியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த இரு சம்பவங்களுக்கும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மனித குலத்துக்கே சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் மற்றும் வருவாய்த்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தையே மறந்து, தன்னலம் கருதாமல் பணியாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு உயிரும் இந்த அரசுக்கு முக்கியம் என்று கருதி, இந்த அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. எனவே, களத்தில் முன்னின்று பணியாற்றும் களப் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை நான் ஏற்கனவே அறிவித்து இருந்தேன்.

இவர்களது பணியினை நாடே போற்றி, நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்களை, இறைவனுக்கு நிகராக நான் கருதுகின்றேன்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின் உடல்களை, உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

ஆனால், மருத்துவப் பணியில் ஈடுபட்டு, நோய்த் தொற்றுக்கு ஆளாகி, தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற ஓரிரு சம்பவங்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கின்றது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தன்னலம் கருதாமல், மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு, தங்கள் இன்னுயிரை துறப்பவர்களுக்கு, தகுந்த மரியாதை அளிக்கும் விதத்தில், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும் எனவும், டாக்டர்கள் மற்றும் பிற களப்பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும், அ.தி.மு.க. அரசு உங்கள் பக்கம் முழுமையாக நிற்கும் என்பதையும் இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

என் கணவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவேண்டும் - முதல்-அமைச்சருக்கு, டாக்டர் சைமனின் மனைவி உருக்கமான வேண்டுகோள்
அனாதைப்போல வேலங்காடு சுடுகாட்டில் புதைத்துவிட்டார்கள் என்றும், தன் கணவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவேண்டும் என்றும் முதல்-அமைச்சருக்கு, டாக்டர் சைமனின் மனைவி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில், கொரோனாவால் பாதிப்படைந்து உயிரிழந்த டாக்டர் சைமன் ஹெர்குலசின் மனைவி ஆனந்தி ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த உருக்கமான பேட்டியில் கூறியதாவது:-

என்னுடைய கணவர் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர். ஏழைகள் மீது மிகவும் அன்பு, அக்கறை கொண்டவர். தன்னுடைய கடினமான உழைப்பால் மருத்துவத்தில் பல பட்டங்களை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல், மருத்துவத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து, எல்லோருடைய அன்பையும் பெற்று திகழ்ந்தவர். 2015-ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்தவர். ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தி மருத்துவ உதவிகளை செய்தார்.

அவர் இப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். தினமும் ஏராளமான நோயாளிகளை பரிசோதிப்பது வழக்கம். வெளிநாட்டுக்கு எங்கும் சமீபத்தில் அவர் போனது இல்லை. எந்த வெளி இடங்களுக்கும் போனது இல்லை. ஆஸ்பத்திரியை விட்டால் வீடு, வீட்டை விட்டால் ஆஸ்பத்திரி இதை தவிர வேறு எங்கேயும் போகமாட்டார். இந்தநிலையில் அவர் பரிசோதித்த ஏதோ ஒரு நோயாளியிடம் இருந்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்தநிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நன்றாக குணமடைந்த நேரத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நாங்கள் இதனை அறிந்து துடி துடித்துவிட்டோம். ஆனால் மிகவும் வேதனைக்குரிய செய்தி என்னவென்றால் அவருடைய உடலை ஒரு மரியாதையோடு அடக்கம் செய்ய முடியவில்லை. அதுவும் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக நாங்கள் அன்போடு வாழ்ந்து வந்த நிலையில், என்னால் என்னுடைய அன்பு கணவரின் உடல் அடக்கம் செய்தபோது பார்க்க முடியாத ஒரு துர்பாக்கியமான நிலை ஏற்பட்டது.

அவருடைய உடலை எங்கள் ஆஸ்பத்திரி ஆம்புலன்சில் எடுத்துக்கொண்டு நானும், என் மகனும் ஓரிரு டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்களோடு போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்ய கொண்டுச்சென்றோம். கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் எங்கள் முறைப்படி அடக்கம் செய்ய நினைத்தோம். ஆனால் அங்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்படியே எங்களை வேலங்காடு சுடுகாட்டுக்கு கூட்டிச்சென்றார்கள். அங்கு அவரை அடக்கம் செய்யப்போகும் நேரத்தில் வெளியே இருந்து கற்களையும், கம்புகளையும் தூக்கி வீசியதால் எங்கள் எல்லோருக்கும் ரத்த காயம் ஏற்பட்டு, அப்படியே அவருடைய உடலை தூக்கிக்கொண்டு மீண்டும் கீழ்ப்பாக்கம் நோக்கி சென்றோம்.

எங்கள் ஆஸ்பத்திரி ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் செல்லும் வழியில், ஆம்புலன்சு டிரைவர்கள் 2 பேரும் ரத்தம் சொட்ட, சொட்ட இருக்கும் நேரத்தில் ஈகா தியேட்டர் அருகே வண்டியை நிறுத்திவிட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டார்கள். அந்த நேரத்தில் என்னுடைய கணவரோடு பணியாற்றும் டாக்டர் பிரதீப் என்னுடைய கணவர் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்சு அம்போ என்று இருப்பதை கண்டு துடிதுடித்துவிட்டார். அங்கே இருந்த போலீஸ்காரரின் சீருடையை வாங்கி மாட்டிக்கொண்டு, அவரே ஆம்புலன்ஸ் ஓட்டிச்சென்றார்.

வேலங்காடு மயானத்தில் அவரும், மேலும் 2 டாக்டர்கள், போலீஸ்காரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் சேர்ந்து வெளியே இருந்து வந்த எதிர்ப்பை மீறி அவசர, அவசரமாக அடக்கம் செய்துவிட்டனர். என்னுடைய கணவர் அடக்கம் செய்யப்பட்டதை நானோ, என் மகனோ எங்கள் கண்களால் பார்க்கவில்லை என்பதை எங்களால் இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நான் தமிழக அரசு, முதல்-அமைச்சருக்கு விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் என் கணவரின் உடல் உரிய மரியாதையோடு எங்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படவேண்டும்.

வேலங்காடு மயானம் ஒரு சுடுகாடு. அங்கு எந்த கல்லறையும் கிடையாது. அங்கு புதைப்பதற்கு பதிலாக உடலை எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்தால் தான் அவர் ஆன்மா சாந்தியடையும். எங்கள் மனமும் ஆறுதல் அடையும். அதைவிடுத்து அவருடைய உடலை ஒரு அனாதைபோல வேலங்காடு மயானத்தில் புதைத்திருப்பது எங்களை பெரிதும் வேதனைப்படுத்துகிறது. முதல்-அமைச்சர் தான் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்கள் ஆஸ்பத்திரியில், அரசு விடுத்த வழிமுறைகள் அனைத்தையும் சற்றும் பிசகாமல் நடைமுறைப்படுத்தியவர் என் கணவர். அவருக்கு இந்த கதி நேர்ந்துவிட்டதே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

என்னுடைய கணவர் உடல் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, முதலாவதாக கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு, அதன் வெளியே மரப்பெட்டி வைத்து அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. உடல் வைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி மற்றும் மரப்பேழையை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றி அடக்கம் செய்தால், அதில் எந்த தொற்றும் ஒருபோதும் ஏற்படாது என்று டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். ஆகையால் இதனால் எந்தவித தொற்றும் ஏற்படாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்துக்காகவே தன்னிகரில்லாமல் உழைத்த டாக்டரை அங்கீகரிக்கும் வகையில் முதல்-அமைச்சர் இதனை செய்து கொடுத்தால் என்னுடைய கணவரின் ஆன்மாவும் சாந்தியடையும், எங்கள் குடும்பமும் காலம் காலமாக அவரை போற்றிக்கொள்ளும்.

டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் பேட்டி
சென்னையில் கொரோனாவால் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த டாக்டர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டது மனித நேயம் இல்லாத சம்பவம். அது கண்டிக்கத்தக்கது.

இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகிறோம்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை, மாநகராட்சி மற்றும் வருவாய்துறையினர் அடக்கம் செய்து வருகிறார்கள். இதுபோல் இறந்தவர்களின் உடல் மூலம் கொரோனா நோய் தொற்று ஏற்படாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறி விட்டனர்.

அதற்கு பிறகும் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad