Matrimony OTT-Platforms Jobs Coupons Business

ரம்ஜான் வரை ஊரடங்கு நீடித்தால்?

இஸ்லாமிய மக்களுக்கு இந்திய முஸ்லீம் லீக் அறிக்கை
ரமலானிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமானால் தமிழக அரசு தலைமை காஜி, உலமாக்கள் உரிய நேரத்தில் வழங்கும் வழிகாட்டல் படி செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சமுதாய மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
இதுவரை எப்படி நாம் கட்டுக்கோப்பாக இருந்து இந்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்து கொண்டிருக்கின்றோமோ அதே ஒத்துழைப்பை இனிவரும் காலங்களிலும் நாம் அளித்திட வேண்டும் என சமுதாய மக்களுக்கு நான் பணிவோடு வேண்டிக்கொள்கிறேன். உலகத்தையே பேரிடராக அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய கொரோனா வைரஸ் கிருமித் தொற்று பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதன்படி நமது இந்திய நாட்டில் மத்திய அரசும், நமது தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும் இந்த வைரஸ் கிருமித் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வரிசையில் இம்மாதம் 14ஆம் நாள் வரை நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகும் அது கால நீட்டிப்புச் செய்யப்படலாம் என்றும் பேசப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் முஸ்லிம்கள் புனித ரமலான் மாதத்தை அடையவிருக்கிறார்கள். இந்த ஒரு மாதம் முழுக்கவும் பகல் நேரங்களில் - அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்பிலிருந்து சூரியன் மறைவது வரை எதையும் சாப்பிடாமலும், குடிக்காமலும் - பசியோடும், தாகத்தோடும் இருக்க வேண்டியது முஸ்லிம்கள் கடமை. அந்தக் கடமையை அவர்கள் நிறைவேற்றுவதோடு அம்மாதம் முழுக்க இரவு நேரங்களில் வழமைக்கும் அதிகமாக தராவீஹ் சிறப்புத் தொழுகை, புண்ணியம் நாடி இஃதிகாஃப் எனும் - பள்ளியில் தரித்திருத்தல் உள்ளிட்ட வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுவர். அத்தோடு எல்லா நாட்களிலும் பசியோடு இருப்பவர்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க தான தர்மங்களும் செய்வர்.

பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்து வருகிற போதிலும் நம் தமிழக மக்கள் - குறிப்பாக நம் சமுதாய மக்கள் நமது மத்திய - மாநில அரசுகள் இந்த வைரஸ் கிருமித் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மனதார முழு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருப்பதை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கு பள்ளிவாசல்களும், பெண்கள் தைக்காக்களும் செயல்களமாக இருந்து கொண்டிருக்கின்றன. இப்போது பேசப்படுவது போல ஊரடங்கு மேலும் கால நீட்டிப்புச் செய்யப்படுமானால் இந்த வழமையான வணக்க வழிபாடுகளைச் செய்வதில் பெரும் சிரமம் இருக்கும்.

நமக்குப் பல்வேறு சிரமங்கள் இருக்கின்ற போதிலும், "மக்கள் நலன் கருதி அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது நம் கடமை" என இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான உலமா பெருமக்களும், மஹல்லா ஜமாஅத்களின் நிர்வாகிகளும், சமுதாய புரவலர்களும், சான்றோர்களும், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகளும் மக்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்திக் கூறிக் கொண்டிருக்கின்றனர். மக்களும் அதை ஏற்றுச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இதுவரை எப்படி நாம் கட்டுக்கோப்பாக இருந்து இந்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்து கொண்டிருக்கின்றோமோ அதே ஒத்துழைப்பை இனிவரும் காலங்களிலும் நாம் அளித்திட வேண்டும் என சமுதாய மக்களுக்கு நான் பணிவோடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்த கொரோனா வைரஸ் கிருமி பரவல் விரைவில் முடிவுக்கு வந்து, அதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவாகத் திரும்ப எல்லாம் வல்ல இறைவன் நல்ல சூழலை அமைத்துத் தரவேண்டும் என இந்த நேரத்தில் நாம் உளமாரப் பிரார்த்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அதே நேரத்தில் இந்த ஊரடங்கு மேலும் கால நீட்டிப்பு செய்யப்படுமானால், நபிகள் நாயகம் அவர்களது காலத்தில் ரமலான் சிறப்பு வணக்க வழிபாடுகள் வீடுகளிலும் நடைபெற்றுள்ளன என்ற வரலாற்றுச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, பள்ளிவாசல்களைத் தவிர்த்து - அவரவர் வீடுகளில் அரசு வழிகாட்டியுள்ள படி சமூக இடைவெளியைக் கடைபிடித்து, வணக்க வழிபாடுகளைச் செய்து கொள்ள வேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம் என்பதையும் கடமை உணர்வோடு இங்கே நினைவூட்டிக் கொள்கிறேன்.

தமிழக அரசின் தலைமை ஹாஜியும், சங்கைக்குரிய உலமா பெருமக்களும் உரிய நேரத்தில் அதற்கான அறிவிப்பையும், வழிகாட்டலையும் வழங்குவார்கள். அதை ஏற்றுச் செயல்பட வேண்டும் என உங்களை நான் அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

விஷக்கிருமி பரவல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, விஷக் கருத்துக்களைப் பரப்புவதும் மற்றொரு பக்கம் திட்டமிட்டு நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. "அண்மையில் தில்லியில் நடைபெற்ற தப்லீக் இஜ்திமா மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள்தான் நாட்டில் கொரோனா வைரஸ் கிருமி பரவிடக் காரணமாகி விட்டார்கள்" என அப்பட்டமான அவதூறுகளை, அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் செய்திகளாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதையே ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கின்றன. காட்சி ஊடகங்களில் இன்றளவும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.

அதே நேரத்தில், "இந்த வைரஸ் கிருமி பரவல் சீனாவில் இருந்து துவங்கி, ஐரோப்பிய நாடுகளைத் தாக்கி, அமெரிக்காவிற்கும் சென்று, இந்தியாவிற்குள் நுழைந்து இருக்கிறது" என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதோடு, "இங்கிலாந்து பிரதமருக்கும், இளவரசர் சார்லஸுக்கும், அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தப்லீக் ஜமாஅத்திற்குச் சென்று வந்தவர்களா இந்த வைரஸைக் கடத்திச் சென்றார்கள்?" என்று அவதூறு பரப்புபவர்களை நோக்கி முதல்வர் பொறுப்பிலிருந்து அற்புதமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த நியாயக் குரல் தேவைப்படும் போதெல்லாம் எழுப்பப்பட வேண்டும் என்று நான் எனது விருப்பத்தை முன் வைக்கிறேன்.

நம் தமிழகத்தைப் பொருத்த வரை, பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இங்கே வாழ்ந்து வந்தாலும் - அனைவரும் ஒருவருக்கொருவர் உறவு முறை சொல்லி சகோதர வாஞ்சையோடு பழகி வருகிறோம். "பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்...? அவர் நம்மை சார்ந்தவரா...?" என்றெல்லாம் பாராமல், பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும், தேவையுடையோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நம்மாலான உதவிகளை ஓடோடிச் சென்று செய்து கொண்டிருக்கின்றோம். இந்த நல்லிணக்கச் செயல் தமிழக மக்களுக்குப் பரம்பரை பரம்பரையாக அவர்களின் பிறப்போடு சேர்ந்து பின்னிப் பிணைந்துள்ள பிரிக்க முடியாத நற்குணமாகும். இந்த நற்பண்பு, தமிழ்ப் பாரம்பரியம் நம்மிடம் என்றும் புதுப்பொலிவோடு இருக்க வேண்டும் என நம் தமிழக மக்களையும், அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு செயலாற்றிட நம் நாட்டு மக்களையும் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த தொடர் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசின் சார்பில் உதவித்தொகை அறிவிக்கப்பட்டு, அவை மக்களிடையே சென்று சேர்ந்தும் - சேராமலும் இருக்கிறது. நாடு முழுக்க யார் யாருக்கெல்லாம் தேவை இருந்தும் உதவிகள் சென்று சேரவில்லையோ அவர்களை மிகச் சரியாக அடையாளங்கண்டு, அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

நாட்டின் எந்தப் பகுதியில் பேரிடர் ஏற்பட்டாலும் அங்கெல்லாம் ஓடோடிச் சென்று மக்களைக் காக்கும் பணியிலும், அடுத்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியிலும், பிறகு அவர்கள் தம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையானவற்றை வழங்குவதிலும் முன்னின்று காரியமாற்றி வரக்கூடிய நமது கே.எம்.சி.சி. அமைப்பினர் இந்தத் தருணத்தில் தம் வாழ்வாதாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்க கூடிய மக்களுக்கு, தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என உரிமையோடு உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி ஐ., ஆகியவை இணைந்து, மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து, அரசுக்கு அதன் பட்டியலை வழங்கி இருக்கிறார்கள். இந்தக் குழுவினர் அரசுக்கும், சமுதாய மக்களுக்கும் இடையே தகவல் பாலமாக இருந்து செயல்படுவார்கள். அரசின் அறிவிப்புகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியையும், அரசிடம் ஏதேனும் முறையீடுகள் இருந்தால் அதை மக்களிடமிருந்து பெற்று அரசிடம் சேர்க்க வேண்டிய பணியையும் இந்தக் குழுவினர் செய்து வருகிறார்கள்; இனியும் செய்வார்கள். இந்தக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது சமுதாயத்தின் கடமையாக உள்ளது.

"விழிப்போடு இரு! வீட்டிலேயே இரு! விலகி இரு!" ஆகிய முழக்கங்களை முன்வைத்து, தமிழக முதல்வர் நம் மக்களை ஒத்துழைக்கக் கோரியிருக்கிறார். நாமும் ஓத்துழைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் அரசு அலுவலர்கள் வீடு வீடாக அனுப்பி, சுகாதார கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. அவ்வாறு கணக்கெடுக்கும்போது உடல் நலன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்தபடியே மருந்துகளை உட்கொண்டு ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிவகைகளையும் அரசு செய்து கொண்டிருக்கிறது. இதை நாங்கள் உளமார வரவேற்கின்றோம். இப்படியான பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது மக்களின் கடமை என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்.

இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தக் கஷ்டங்கள் இன்னும் சில காலம் நீடிக்கலாம் என்றாலும், எப்போதும் போல் அரசுக்கு நாம் ஒத்துழைத்து உடல் நலன் காப்போம். எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த விஷக்கிருமி பரவலில் இருந்து அனைவரும் மீண்டெழுந்து, முன்பை விட வளமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் நல்ல சூழலை எல்லாம் வல்ல இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கி அருள வேண்டும் என உளம் உருக பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad