ஈரோடு கொடுமுடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் ஆய்வு

ஈரோடு கொடுமுடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.
கொடுமுடியில் கடந்த 3-ந் தேதி அன்று சுல்தான்பேட்டை மற்றும் காங்கேயம் சாலை ரோஜா நகரைச் சேர்ந்த 2 பேர் டெல்லி சென்று வந்தனர். இதனால் 2 பேரும் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே சுல்தான்பேட்டை, ரோஜா நகரில் உள்ள 463 குடும்பங்களை சேர்ந்த 1,100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று வந்தார். முதலில் அவர் சுல்தான்பேட்டை பகுதிக்கு சென்று கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், சுகாதார பணியாளர்கள் தினமும் எடுத்த புள்ளி விவரங்கள் குறித்தும் சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

மேலும் தாசில்தார் ஸ்ரீதரிடம், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுகிறதா? என்றும் கேட்டு தெரிந்து கொண்டார். இந்த ஆய்வின்போது வருவாய்த்துறையை சேர்ந்த மண்டல துணை தாசில்தார் மரியஜோசப், வருவாய் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் கொடுமுடி அருகே உள்ள ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் சோதனைச்சாவடிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு சோதனைச்சாவடியில் உள்ள பதிவேட்டினை ஆய்வு செய்தார். அங்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படும் பணியினை பார்வையிட்டார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகனிடம் சோதனைச்சாவடி வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்துதான் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின் போது சென்னசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் வசந்தா உடன் இருந்தார்.

தனி நபர்கள் பொதுமக்களுக்கு உணவு பொருட்களை  நேரடியாக வழங்கினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பொருட்களை பொதுமக்களுக்கு தனி நபர்கள் நேரடியாக வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் உலகளாவிய நோய்த்தொற்று என அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை பரவாமல் தடுக்கும் பொருட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவின்றி தவிப்போர், வெளிமாநில தொழிலாளர் உள்ளிட்டோருக்கு தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையாளர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 99 வெளிமாநில தொழிலாளர்கள், 114 மூத்த குடிமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் இயங்கும் 4 அம்மா உணவகங்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 12 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது சமூக விலகலை கடைபிடிப்பதை உறுதி செய்வதாகவும், தேவையற்ற போக்குவரத்தினை குறைப்பதாகவும் அமைந்துள்ளது.

எனவே இதுபோன்ற உணவின்றி தவிப்போர், வெளிமாநில தொழிலாளர் உள்ளிட்டோருக்கு உதவி புரிய விரும்பும் தன்னார்வலர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களிடம் தொடர்பு கொண்டு, அவர்களிடம் உணவு தயாரிப்பதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வழங்கலாம். இவ்வாறு பெறப்படும் பொருட்கள் உதவி தேவைப்படும் நபர்களுக்கு உடனுக்குடன் அலுவலர்கள் மூலமாக மட்டுமே வழங்கப்படும். எந்த ஒரு தனிநபரும் உணவு பொருட்களை தாங்களே நேரடியாக தனியாக தேவைப்படுபவரின் இடத்திற்கு சென்று வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. இதனை மீறி யாரேனும் பொதுமக்களுக்கு உணவு பொருட்களை நேரடியாக வழங்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]