Matrimony OTT-Platforms Jobs Coupons Business

ஊரடங்கு நீட்டிப்பா? ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி எடுத்துள்ள முடிவு என்ன? துல்லியம் இல்லாத சீன கொரோனா சோதனை கருவிகளுக்கு மத்திய அரசு இரண்டு மடங்கு விலை கொடுத்ததா?

கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளது: ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி
கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்கள் உடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில், சில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தியுள்ளன.

கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள 40 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு இன்னும்6 நாட்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே, மார்ச் 20, ஏப்ரல் 2 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பிரதமர், அனைத்து மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று நான்காவது முறையாக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்ககளின் நிலைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், ஊரடங்கிற்குப் பிறகு எப்படி, கட்டுப்பாடுகளை தளர்த்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பரவும் சூழலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் மே 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மேலும் சில மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும்  ஒடிசா மாநிலங்கள் மே 3க்கு பின்னரும் ஊரடங்கினை தொடருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றும் என அறிவித்துள்ளன. தெலங்கானா மாநிலத்தில் மட்டும் ஊரடங்கை நீட்டித்து அரசு  ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

பிரதமருடனான ஆலோசனைக்கு பின் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு செய்ய அசாம், கேரளா மற்றும் பீகார் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநிலம் மற்றும் யூனியன்பிரதேச முதல்வர்களுடன் வீடியோ  கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 10 மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம், மேகாலாயா உள்ளிட்ட 10 மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊரடங்கை ஒரு மாதம் நீடிக்க வேண்டுமென ஒடிசா முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். சிவப்பு மண்டல பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கும் என பிரதமர் கூறியதாக தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிக்கப்படாத இடங்களில் தொழில்களை தொடங்க அனுமதிக்க கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் சில தளர்வுகள் இருக்கும் எனவும் பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல மாநிலங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவதாக அறிக்கைகள் வருகின்றன. மிக கண்டிப்புடன் கட்டுப்பாடுகளை அமல்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில், 9 மாநில முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர். இதனால், கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, அம்மாநில தலைமை செயலாளர் பங்கேற்றார்.ஊரடங்கை மே 16-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் ஆகிய 5 மாநிலங்கள் ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில், இன்றூ நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களும் இதை வலியுறுத்தின.

எனினும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்கச் செய்து, மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்று பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், இது தொடர்பான அறிவிப்பு மே- 3 அல்லது அதற்குப் பின்னர் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த திட்டங்களை வகுக்கவும் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களிடம் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

துல்லியம் இல்லாத சீன கொரோனா சோதனை கருவிகளுக்கு மத்திய அரசு இரண்டு மடங்கு விலை கொடுத்ததா?
துல்லியம் இல்லாத சீன கொரோனா சோதனை கருவிகளை மத்திய அரசு இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கியதா? இது குறித்து டெல்லி ஐகோர்ட் என்ன உத்தரவிட்டது?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்து உள்ளது. கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 872 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா பரிசோதனையை விரைவாக நடத்த சீனாவிடம் இருந்து 30 லட்சம் ரேபிட் கிட்டுகளை இந்தியா வாங்கியது. அந்த ரேபிட் கிட்கள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சீனாவின்ரேபிட் கிட்டுகளில் பரிசோதனை முடிவுகள் துள்ளியம் இல்லை என புகார் எழுந்தது. இதை தொடர்ந்து  அந்த சோதனைகளை நிறுத்திவைக்க இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.

சீனாவில் இருந்து வாங்கிய ரேபிட் கிட்டுகளுக்கு இந்திய இரண்டு மடங்கு பணம் அளித்து உள்ளது என தற்போது தெரியவந்து உள்ளது. கொரோனா சோதனை கருவிகள் இந்திய விநியோகஸ்தரால் அதிக விலைக்கு அரசிற்கு விற்கப்பட்டு  உள்ளது.

கொரோனா பரிசோதனை கருவி விநியோகஸ்தருக்கும் இறக்குமதியாளருக்கும் இடையிலான சட்ட மோதலில் இருந்து இது வெளிப்பட்டுள்ளது. இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டிற்கு சென்று உள்ளது என என்டிடிவி செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மத்திய அரசு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மூலம் மார்ச் 27 அன்று சீன நிறுவனமான வோண்ட்ஃபோவிடம் இருந்து ஐந்து லட்சம் விரைவான ஆன்டிபாடி சோதனை கருவிகளை ஆர்டர் செய்திருந்தது.

ஐ.சி.எம்.ஆர் மற்றும் ஆர்க் பார்மாசூட்டிகல்ஸ் இடையே கையொப்பமிடப்பட்ட கொள்முதல் உத்தரவு நகலை என்டிடிவி வெளியிட்டு உள்ளது.

ஏப்ரல் 16 ம் தேதி, சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, விரைவான கொரோனாஆன்டிபாடி சோதனை கருவிகள் மற்றும் ஆர்.என்.ஏ பிரித்தெடுத்தல் கருவிகள் உட்பட 650,000 கிட்டுகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக டுவீட் செய்துள்ளார்.

சோதனைக் கருவிகளை இறக்குமதியாளர் மேட்ரிக்ஸ் சீனாவிலிருந்து ரூ.245 க்கு வாங்கி உள்ளார். ஆயினும் கூட, விநியோகஸ்தர்களான ரியல் மெட்டபாலிக்ஸ் மற்றும் ஆர்க் பார்மாசூட்டிகல்ஸ் ஆகியவை ஒரு கிட்டை அரசாங்கத்திற்கு தலா 600 ரூபாய்க்கு விற்று உள்ளன.

அதே இறக்குமதியாளரான மேட்ரிக்ஸிடமிருந்து மற்றொரு விநியோகஸ்தர் ஷான் பயோடெக் மூலம் தமிழக அரசு சீன கிட்களை தலா ரூ .600 க்கு வாங்கியபோது சிக்கல் தொடங்கியது. தமிழகத்திற்கும் ஷான் பயோடெக்கிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட கொள்முதல் ஆணையை என்டிடிவி வெளியிட்டு உள்ளது.

மேட்ரிக்ஸ் இறக்குமதி செய்த கருவிகளுக்கான பிரத்யேக விநியோகஸ்தர் என்று கூறி ரியல் மெட்டபாலிக்ஸ் டெல்லி ஐகோர்ட் சென்றது.ஒப்பந்தத்தை மீறி தமிழகத்திற்கு மற்றொரு விநியோகஸ்தரை (ஷான் பயோடெக்) ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டி உள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய டெல்லி ஐகோர்ட் விலை உயர்வு அதிகம் இருப்பதைக் கண்டறிந்து, ஒரு கிட்டின் விலையை ரூ .400 ஆகக் குறைக்க உத்தரவிட்டது.

"கடந்த ஒரு மாதமாக பொருளாதாரம் கிட்டத்தட்ட ஸ்தம்பித்து நிற்கிறது. கொரோனா தடிப்பு போரில் ஈடுபடும் ஏஜென்சிகள் மக்களை பாதுகாப்பதற்கு உறுதியளிக்க வேண்டும். மக்களின் உடல்நலம், நாடு முழுவதும் விரிவான சோதனைகளை மேற்கொள்வதற்காக, மிகக் குறைந்த செலவில் அதிக கருவிகள் / சோதனைகள் கிடைக்க வேண்டும். பொது நலன் தனியார் ஆதாயத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். கட்சிகளுக்கு இடையிலான லிஸ் (சர்ச்சை) பெரிய பொது நன்மைக்கு வழிவகுக்க வேண்டும். மேற்கூறியவற்றைப் பார்க்கும்போது, கிட்ஸ் / டெஸ்ட் ஜிஎஸ்டி உட்பட ரூ .400 க்கு மேல் இல்லாத விலையில் விற்கப்பட வேண்டும், ”என்று உத்தரவிட்டது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad