திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சிவப்பு நிற பட்டியலில் சேர்ப்பு

கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் திருப்பூர் மாவட்டம் சிவப்பு நிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மற்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கும் என்பதால், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் விவரங் களும் சேகரிக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 69 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றது தெரியவந்தது.

full-width இதில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 39 பேர், தாராபுரம் அரசு மருத்துவமனையில் 10 பேர், உடுமலை அரசு மருத்துவமனையில் 10 பேர் என மொத்தம் 59 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். மற்ற 10 பேர் முகவரியைவைத்து அடையளம் காணும் முயற்சியில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மாநாட்டிற்கு சென்றவர்களில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.மேலும் லண்டன் சென்று வந்த, திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், திருப்பூர் மாவட்டம் சிவப்பு நிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா பாதித்துள்ள மாவட்டங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் கொரோனா அதிக பாதிப்பிற்கு சிவப்பு நிறம், பாதிப்பிற்கு ஆரஞ்சு நிறம், லேசானா பாதிப்பு மஞ்சள் நிறம், பாதிப்பு இல்லாத மாவட்டம் பச்சை நிறம் என பிரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி மத்திய அரசின் பட்டியலில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறி திருப்பூர் மாவட்டம் சிவப்பு நிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிப்பதன் மூலம் பாதிப்பு உள்ள மாவட்டங்களை எளிதில் கண்காணிக்க முடியும்.

இவ்வாறு பட்டியலிடுவதால் அந்தந்த மாவட்டங்களில் கொரோனா பரவாமல் இருக்க மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள முடியும். மேலும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பேருக்கு நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் அந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மின்கம்பியில் உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது
திருவள்ளூர் அருகே வைக்கோல் ஏற்றி லாரி, உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது.

திருவள்ளூரை அடுத்த கடம் பத்தூர் ஒன்றியம் இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. அதே பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான வயலில் நேற்று நெல் அறுவடை செய்தார். பின்னர் வயலில் இருந்த 160 கட்டு வைக்கோல் போரினை ஒரு லாரியில் ஏற்றி திருத்தணிக்கு அனுப்பி வைத்தார். லாரியை ஆந்திராவைச் சேர்ந்த மனோகரன் (வயது 45) என்பவர் ஓட்டிச் சென்றார்.

வைக்கோல் ஏற்றி வந்த லாரி, வயலில் இருந்து சிறிது தூரம் வந்தவுடன் வயலின் மேலே தாழ்வாக சென்ற உயர்அழுத்த மின்சார கம்பியில் உரசியதால், லாரியில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மனோகரன் கீழே இறங்கி விட்டார்.

பின்னர் அங்கிருந்த வாலிபர்கள் சிலர் லாரியில் எரிந்து கொண்டிருந்த வைக்கோல் கட்டுகளை கம்பு மூலம் கீழே தள்ளி விட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தீயில் எரிந்த வைக்கோல்களை லாரியில் இருந்து கீழே தள்ளிவிட்டு தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பேரம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் லாரியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வைக் கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசமானது. லாரியும் தீயில் லேசாக சேதமானது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. தீயணைப்பு வீரர் கள் உடனடியாக தீயை அணைத்து விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

விழுப்புரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மாயமான டெல்லி வாலிபரை தேடும் பணி தீவிரம்
விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மாயமான டெல்லி வாலிபரை 4-வது நாளாக தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி பட்டேல் நகரை சேர்ந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் வேலை தேடி புதுச்சேரிக்கு வந்த இடத்தில் அங்கு சாலை விபத்தை ஏற்படுத்தியதாக அவரை புதுச்சேரி மாநில போலீசார் கைது செய்து அங்குள்ள காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

பின்னர் 3 மாதம் கழித்து புதுச்சேரி சிறையில் இருந்து வெளியே வந்த அவர் விழுப்புரம் வந்து வடமாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் சிலருடன் தங்கியிருந்துள்ளார். இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வெளிமாநிலத்தவரின் பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அவர் கடந்த 6-ந் தேதி விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இல்லை என்று சுகாதாரத்துறையினரால் மறுநாள் (7-ந்தேதி) இரவு விடுவிக்கப்பட்டார்.

அதன் பிறகு சிறிது நேரத்தில் வந்த பரிசோதனை அறிக்கையில் அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அவர் தங்கியிருந்த இடத்திற்கு சுகாதாரத்துறையினர் சென்றபோது அங்கு அந்த வாலிபர் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் அந்த வாலிபர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே அவரை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். கடந்த 3 நாட்களாக தேடுதல் பணி நடந்தும் அந்த வாலிபர் கிடைக்கவில்லை.

மாயமான டெல்லி வாலிபருக்கு உரிய சிகிச்சை இல்லாததால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைய அதிகம் வாய்ப்புள்ளது. அதோடு கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைய நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து, மாத்திரைகள், சத்தாண உணவு கிடைக்காவிட்டால் அவர் மேலும் நோய் தாக்கத்திற்கு ஆளாகி உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். அதோடு அவருடன் பழகி வருபவர்களுக்கும் இந்நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதால் அவரை எப்படியாவது தேடி கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்க்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக கூடுதலாக 3 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 10 தனிப்படை போலீசார் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட இடங்களிலும் அங்குள்ள போலீசாரின் உதவியுடன் 4-வது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 எல்லைப் பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வாலிபர் உணவின்றி இருக்க முடியாது என்பதால் எந்தெந்த பகுதிகளில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என்பதையும் போலீசார் கண்டறிந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அந்த வாலிபர், தனக்கு தெரிந்த ஒருவரிடம் ரூ.1,000 பெற்றுக்கொண்டு சென்னைக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி அவரை பிடிக்க சென்னைக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாகவும், விரைவில் கண்டுபிடித்து விடுவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad