ஆடம்பரமாக வலம் வந்து பல பெண்களிடம் பணம் பறிப்பு: பெண் டாக்டரை மிரட்டியதாக கைதான குமரி வாலிபர்

ஆடம்பரமாக வலம் வந்து பல பெண்களிடம் பணம் பறிப்பு:பெண் டாக்டரை மிரட்டியதாக கைதான குமரி வாலிபர் பற்றி அதிர்ச்சி தகவல்கள்
பெண் டாக்டரை மிரட்டியதாக கைதான வாலிபர் பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆடம்பரமாக வலம் வந்து பல பெண்களையும் மிரட்டி பணம் பறித்துள்ளார்.

பெண் டாக்டரை மிரட்டியதாக கைதான வாலிபர் பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆடம்பரமாக வலம் வந்து பல பெண்களையும் மிரட்டி பணம் பறித்துள்ளார். இவரின் செயலுக்கு நண்பர்கள் உடந்தையாக இருந்தார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26), கோழிக்கடை உரிமையாளர். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து உள்ளார். கல்லூரியில் படித்த போது இவருக்கும், சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது பெண் டாக்டரிடம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காசி அவரிடம் பழகி உள்ளார்.

இதைத்தொடர்ந்து பெண் டாக்டர் காசியிடம் நெருங்கி பழகினார். அதை காசி தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டார். பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி பெண் டாக்டரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் தன்னுடன் நெருக்கமாக இருந்த ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர் இதுகுறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த கோட்டார் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது காசி பெண் டாக்டரிடம் பழகியது போல ஏராளமான பெண்களுடன் நெருங்கி பழகி அதை புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பது தெரியவந்தது.

குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறியதாவது:-

கைது செய்யப்பட்டுள்ள காசி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளங்களில் போலியாக கணக்கு தொடங்கி ஏராளமான பதிவுகளை பதிவிட்டு வந்துள்ளார்.

பல பெண்கள் இவருடைய உண்மை முகம் தெரியாமல் இவரை நற்பண்பு உள்ளவர் என்று எண்ணி சமூக வலைதளங்களில் பழகி வந்துள்ளனர். அதையும் தாண்டி பல பெண்களிடம் காசி தனிப்பட்ட தொடர்பு எண்களை பெற்று தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் பேசி உள்ளார். பெண்களுடன் நல்ல நட்பை பெற்ற பிறகு காசி பெண்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்வார்.

மேலும் பெண்களுடனான தனிப்பட்ட வீடியோ அரட்டைகளின் போது ஸ்கிரீன் ஸ்சார்ட்டுகள் எடுத்து வைத்துக்கொள்வார். பெண்கள் அனுப்பிய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சேமித்து வைத்துக் கொள்வதையும் வழக்கமாக செய்துள்ளார். மேலும் அவசர மருத்துவ தேவைகளுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக அவர் பெண்களிடம் பணம் கேட்கும் போது அவரது உண்மை முகம் தெரியாத பல பெண்கள் அவரை நம்பி தேவையான பணத்தை அவருக்கு வழங்கியுள்ளனர். இது போல லட்சக்கணக்கான ரூபாயை பல பெண்களிடம் மிரட்டி பறித்திருக்கிறார். பெண்கள் காசியின் ஏமாற்றும் தன்மையை உணரும் போதோ அல்லது அவரது செயல் பற்றி தங்கள் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்ளும் போதோ காசியை முற்றிலுமாக நிராகரித்து வந்துள்ளனர். பெண்கள் காசியை நிராகரிக்க தொடங்கும்போது அவர் பெண்களின் தனிப்பட்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி உள்ளார்.

அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரங்கமாக வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் அவர் கேட்கும் தொகையை கொடுத்துள்ளனர். இதே போல தொடர்ந்து பெண்களை அதிக பணம் கொடுக்குமாறு தொந்தரவு செய்து பணம் பறித்துள்ளார். தற்போது காசியின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த செல்போன் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏமாற்றப்பட்ட பெண்கள் தங்கள் அடையாளம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று எண்ணி இவர் மீது இதுவரை எந்த புகாரும் கொடுக்கவில்லை. மேலும் காசியை பற்றிய புகார்களையோ அல்லது தகவல்களையோ பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது காசியைப் பற்றி தகவல் தெரிந்த நபர்கள் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை 9498111103 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

காசி சமூக வலைதளங்களில் ஏராளமான படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் போலீசார் நீக்கி உள்ளனர். அதோடு அவரது போலி ஐ.டி.க்களையும் முடக்கியுள்ளனர்.

மேலும் காசியுடன் நெருங்கி பழகிய நண்பர்களையும் போலீசார் தேடி வருகிறார் கள்.

இது தொடர்பாக நாகர்கோவில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லையில் இன்று முழு ஊரடங்கு:தடையை மீறி வெளியே வந்தால் கைது; வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்
நெல்லை மாநகரில் முழு ஊரடங்கை மீறி வெளியே வருவோர் கைது செய்யப்படுவார்கள். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று நெல்லை மாநகர போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

நெல்லை மாநகரில் முழு ஊரடங்கை மீறி வெளியே வருவோர் கைது செய்யப்படுவார்கள். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று நெல்லை மாநகர போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் கூறியதாவது:-

கொரோனா பரவலை தடுக்க பிற துறைகளுடன் போலீஸ் துறையும் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லை மாநகரில் இந்த ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. மாநகரம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாநகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே, இந்த ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளையும் திறக்கக்கூடாது. மருந்து கடைகளும், ஆஸ்பத்திரிகளும் மட்டுமே திறந்திருக்க வேண்டும்.

பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்டவைக்கு அனுமதி கிடையாது. அவசர மருத்துவ தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும். டாக்டர்கள், அரசு அத்தியாவசிய பணி ஊழியர்கள் மட்டுமே வெளியே வர அனுமதி உண்டு.

அதை விடுத்து மற்றவர்கள் தடையை மீறி வெளியே வந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள். வாகனங்களில் வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபரும் கைது செய்யப்படுவார். நெல்லை மாநகரில் இன்று ஒரு நாள் மட்டுமே முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நெல்லையில் கொரோனா பரவல் தடுக்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றவர்களும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 10 பேர் மட்டுமே கொரோனா தொற்றுடன் ஆஸ்பத்திரியில் உள்ளனர். எனவே, கொரோனா இல்லாத நிலையை உருவாக்க பொதுமக்கள் முழு ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

ஊரடங்கையொட்டி போலீசார் கண்காணிப்பு: தோப்பில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி - ஆளில்லா குட்டி விமான கேமராவை கண்டதும் தப்பி ஓட்டம்
கும்மிடிப்பூண்டியில் ஊரடங்கை ஆளில்லா குட்டி விமான கேமரா வாயிலாக போலீசார் கண்காணித்த போது தைல மரத்தோப்பில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி ஒன்று சிக்கியது. இதன் காரணமாக அந்த ஜோடி தலைதெறிக்க தப்பி ஓடிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீஸ் குழுவினர் ஆளில்லா குட்டி விமான கேமராவை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பட்டுபள்ளி கிராமம் அருகே உள்ள தைல மரத்தோப்பில் நேற்று மதியம் உச்சி வெயிலில் காதல் ஜோடி ஒன்று ஊரடங்கு நேரத்தில் உல்லாசமாக இருந்தது கேமரா மூலம் கண்டறியப்பட்டது.

அப்போது அந்த கேமராவை பார்த்தவுடன் காதலன் ஹெல்மெட்டை போட்டு கொண்டார். அந்த இளம்பெண் காதலன் மடியில் இருந்து வேகமாக எழுந்து துப்பட்டாவால் தனது முகத்தை மறைத்து கொண்டார்.

பின்னர் அந்த காதல் ஜோடியினர் அங்கிருந்து தங்களது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு தலைதெறிக்க ஓடினர். அதைத்தொடர்ந்து, மோட்டார் சைக்கிளின் பின்னால் காதலி அமர்ந்து கொள்ள ஒருவழியாக அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடி மறைந்து சென்றனர்.

ஊரே அடங்கி இருக்கும் போது தைல மரத்தோப்பில் காதலர்கள் உல்லாசத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல சேகண்யம் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்கள் ஆளில்லா குட்டி விமான கேமரா பறந்து வருவதை கண்டதும், ஏரியில் நீந்தி தப்பி செல்லும் காட்சிகளை கும்மிடிப்பூண்டி போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

செங்குன்றம் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு - 2 பேருக்கு வலைவீச்சு
செங்குன்றம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டி அம்மன் நகர், மொண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 34). இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் உதயா, சுரேந்தர். இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

உதயாவின் உடன்பிறந்த அக்காவுடன் ஆனந்தனுக்கு கடந்த ஒரு வருடமாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த உதயா, தனது அக்கா உடனான கள்ளக்காதலை கைவிடும்படி ஆனந்தனிடம் பலமுறை எச்சரித்தார். ஆனாலும் அதை கேட்காமல் ஆனந்தன், கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த உதயா, தனது நண்பர் சுரேந்தருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு ஆனந்தன் வீட்டுக்கு சென்றார். பின்னர் இது தொடர்பாக ஆனந்தனை கண்டித்த அவர், திடீரென அரிவாளால் ஆனந்தனை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு வலது கை மணிக்கட்டு மற்றும் இடது கை, மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆனந்தனின் மனைவி ஜெனிபர் அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவஹர்பீட்டர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய உதயா, சுரேந்தர் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்.

சேத்தியாத்தோப்பு அருகே, பெண் கொலையில் மேலும் 3 பேர் கைது
சேத்தியாத்தோப்பு அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ஜோதி (வயது 40). இவரது மனைவி ரேவதி (36). இந்த நிலையில் ரேவதியின் நடத்தை மீது சந்தேகமடைந்த அவரது தந்தையான கொழை கிராமத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் உறவினர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அவரை அடித்து கொலை செய்தனர்.

இதுகுறித்து தூண்டுதலின் பேரில் கொலை செய்யப்பட்டதாக கூறி 15-க்கும் மேற்பட்டோர் மீது சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேட்டு தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் பிரசாந்த் (28), வீரமுடையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் செல்வவிநாயகம் (24), அதே ஊரைச் சேர்ந்த வீர அரசு மகன் வீரபாண்டியன் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரமேரூர் அருகே, மனைவியின் கள்ளக்காதலன் அடித்து கொலை - 2 பேர் கைது
உத்திரமேரூர் அருகே மனைவியின் கள்ளக் காதலன் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்திரமேரூர் அடுத்த பருத்திக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 38). இவர், உத்திரமேரூர் பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு திருமணமாகி கணவர் ஜெயகுமாருடன் பருத்திக்கொல்லை கிராமத்தில் வசித்து வருகிறார். சண்முகசுந்தரத்துக்கும், திவ்யாவுக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் அறிந்த ஜெயகுமார் மனைவியை கண்டித்தார். ஆனால் திவ்யா, கணவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து சண்முகசுந்தரத்துடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயகுமார் தனது நண்பர் தினேஷ் (22) உடன் சண்முகசுந்தரத்தை மல்லியங்கரைகனை அருகே அழைத்துச்சென்று தனது மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார். இதனால் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஜெயகுமார் அருகில் இருந்த கட்டையை எடுத்து சண்முகசுந்தரத்தின் தலையில் பலமாக தாக்கினார். இதில் சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகுமார் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad