Matrimony OTT-Platforms Jobs Coupons Business

தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கப் போவது இல்லை- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவது இல்லை என்று உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த்(வயது 71) உடல் நலக்கோளாறு காரணமாக  அவதிப்பட்டு வந்தார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த் சிங் பிஷ்த், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, கடந்த  15-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.  எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.

அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் எனத் தெரிகிறது. அவரது சொந்த ஊரி்ல இறுதி சடங்குகள் செய்யப்படவுள்ளது.
 ஆனால், தனது தந்தை ஆனந்த் சிங்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை என முதல்வர்  யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அதில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மாட்டேன் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த இத்தாலி சுற்றுலாப்பயணி:  கேரளாவில் பாதுகாப்பாக உணர்ந்தேன் என நெகிழ்ச்சி பேட்டி
கொரோனா தொற்றுக்கு ஆளாகி கேரளாவில் சிகிச்சையில் இருந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி முழுமையாக குணமடைந்தார். அவரை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மருத்துவமனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ராபர்ட்டோ டொனேசோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். வந்த இடத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.

அங்கு தனிமைப்படுத்தப்பட்ட அவருக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சையின் பலனாக கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவிடம் நன்றி தெரிவித்துப் பேசினார் டொனேசோ. அப்போது அவர், “ஐரோப்பாவைவிட கேரளாவில் பாதுகாப்பாக உணர்ந்தேன்” என்று சொல்ல அமைச்சர் ஷைலஜா நெகிழ்ந்து போனார். மருத்துவமனையில் இருந்து ராபர்ட்டோ டொனேசோ கிளம்பும்போது, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனும், டொனேசோவுக்கு சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினரும் அவரை வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டொனேசோ, “கேரளம் எனது இரண்டாவது வீட்டைப் போல இதயத்தில் இடம் பிடித்துவிட்டது. இந்தக் கடவுளின் தேசத்துக்கு மீண்டும் நான் வருவேன். எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும், சேவை செய்து கவனித்த செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் அடிமனத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு எனக்குக் கிடைத்த சிகிச்சையின் தரமும், உணவுகளும், மருத்துவப் பராமரிப்பும், கேரளம் குறித்த உயர்வான மதிப்பீட்டை என்னுள் உருவாக்கியுள்ளது” என்று சொன்னார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad