Matrimony OTT-Platforms Jobs Coupons Business

வேலூர் மாவட்டத்தில் டோர்டெலிவரி மூலம் இறைச்சி விற்பனை செய்யும் வசதி - வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம்

வேலூர் மாவட்டத்தில் டோர்டெலிவரி மூலம் இறைச்சி விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை இறைச்சி மற்றும் மீன் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தாமாகவே முன்வந்து தங்களது கடைகளை அடைப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக இறைச்சிக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

தற்போது தமிழக அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு ஊடரங்கு உத்தரவினை மே மாதம் 3-ந் தேதி வரையில் நீட்டித்துள்ளதாலும் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட அனைத்து இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தங்களது விற்பனையை தொடர்வதற்கு அனுமதி கேட்டனர்.

மேலும் அவர்கள், அவ்வாறு விற்பனை செய்யும்பொழுது எக்காரணம் கொண்டும் கடைகளில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை நடத்தப்படாது என்றும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே ஆர்டரின் பேரில் நேரடியாக சென்று விற்பனை செய்யப்படும் எனவும், இதனை மீறி செயல்படும் கடைகளின் மீது மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம் என்றும் தெரிவித்தனர்.

அதனை ஏற்று இன்று (புதன்கிழமை) முதல் வேலூர் மாவட்டத்தில் அனைத்து இறைச்சி மற்றும் மீன் விற்பனைகள் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு சென்று கொடுக்கும் டோர்டெலிவரி என்ற விற்பனை முறை நடைமுறைக்கு வருகிறது.

இந்த கடைகள் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்க வேண்டும். இந்த கால நேரத்தினை அவர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொரு வியாபாரியிடமும் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்து தங்களது வீடுகளிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் கடைகளில் விற்பனை செய்யப்படமாட்டாது.

கடைகளில் இந்த உத்தரவை மீறி விற்பனை செய்வது தெரியவந்தால் கடைகள் மூடி ‘சீல்’ வைக்கப்படும். அந்த கடைகள் வருகிற ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி வரையில் திறப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

பேக்கரி கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கு தேநீர், குளிர்பானங்கள் அருந்துவதற்கோ, ஸ்நாக்ஸ் போன்றவை சாப்பிடுவதற்கோ அனுமதிக்கப்படாது. விற்பனை செய்யும் முன்பு கடைகளில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகுப்பு - கலெக்டர் அண்ணாதுரை தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிற நிலையில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுனர் ஆகிய தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரண தொகுப்பு வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு அறிவித்த நிவாரண தொகுப்பான ரூ.1000 ரொக்கம், 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் அடங்கிய தொகுப்பு 29,677 தொழிலாளர்களுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் ரேஷன் கடைகளுக்கு மூலம் வழங்கப்படும். அவ்வாறு பெறப்படும் தொகுப்பிற்கு டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன் பெறும் தொழிலாளர்கள் அந்தந்த குறிப்பிட்ட நாட்களில் ரேஷன் கடைகளுக்கு சென்று உரிய நலவாரிய அட்டை, ஆதார் அட்டை காண்பித்து தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் ரேஷன் கடைகளில் போதிய சமூக இடைவெளியை கடை பிடித்து கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நிவாரண தொகுப்பைபெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர் தமிழ்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க 1,650 படுக்கைகளுடன் மருத்துவமனைகள் தயார் - கலெக்டர் விஜயகார்த்திகேயன் தகவல்
கொரோனா தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க திருப்பூர் மாவட்டத்தில் 1,650 படுக்கைகளுடன் மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. நோய் தொற்று உள்ளவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை தனிமைப்படுத்தி அவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கும் பணி தொடர்ந்து வருகிறது. அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குடியிருப்பு பகுதிகளை சுற்றியுள்ள வீதிகள், பகுதிகளை சேர்த்து மொத்தமாக மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு மண்டலங்களாக 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளை சிறப்பு கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறோம். அத்தியாவசிய பொருட்கள் அந்த பகுதிகளுக்கு எடுத்து சென்றால் கூட தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று ஏற்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளை சுற்றியுள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ரத்தம்,சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

டெல்லி சென்று வந்தவர்கள் அனைவருக்கும் ரத்தம், சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவு வந்து விட்டது. இதைத்தொடர்ந்து அவர்களின் குடும்பத்தினருக்கு மாதிரி எடுத்து அனுப்பி வைக்கப்பட்டு அதன் முடிவுகளும் வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினர் தொடர்புவைத்தவர்களுக்கும் மாதிரி எடுத்து அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

நேற்று(நேற்றுமுன்தினம்) மட்டும் 300 பேரிடம் ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்று(நேற்று) 1,000 பேரிடம் ரத்தம், சளி மாதிரிகள் எடுக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடக்கிறது. இவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். கொரோனா தடுப்பு கட்டுப்பாடு மண்டல பகுதியில் தொடர்ச்சியாக மாதிரி எடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளோம். ஒருவேளை அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கும் வகையில் 1,650 படுக்கைகளுடன் அரசு மற்றும் தற்காலிக மருத்துவமனைகள் மாவட்டத்தில் பல பகுதிகளில் தயார் நிலையில் உள்ளன. வெண்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டெல்லி சென்று வந்தவர்களில் குடும்பத்தினருக்கு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு பிறகு கூட 43 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. இருப்பினும் அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த போலீசார், அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்ட செவிலியர்கள், டாக்டர்கள், சம்பந்தப்பட்ட பகுதியில் துப்புரவு பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள் என ஒவ்வொருவரின் தொடர்புகளையும் மிகவும் நுணுக்கமாக கண்காணித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். அந்தந்த துறை மூலமாகவும் பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதை எவ்வாறு படிப்படியாக செய்வது, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையுடன் அவர்களை தொடர்பில் வைப்பது, பனியன் நிறுவனத்துக்கு கீழ் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு தினமும் காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்வது குறித்து பனியன் நிறுவன தொழில்துறையினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. பனியன் நிறுவனங்களில் சிறிய பணிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டுள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்களையும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் துணி முககவசம் மற்றும் சாதாரண முககவசங்களை பயன்படுத்தலாம். டாக்டர்கள், செவிலியர்கள் தான் என்.95 உள்ளிட்ட முககவசங்களை பயன்படுத்துகிறார்கள். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே கட்டாயம் முககவசம் அணிந்து தான் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடியில் பிறந்தநாள் விழா : அம்பேத்கர் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் கூறும்போது, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள் ளார். டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில், அவரது சிலைக்கு மாவட்ட கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என்றார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி அலுவலர் சையது முகமது, தாசில்தார் செல்வக்குமார், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சில அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக மாலைகளுடன் வந்தனர். ஆனால் அவர்கள் மாலை அணிவிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

வாணியம்பாடியில் 2 நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் - கலெக்டர் சிவன்அருள் தகவல்
வாணியம்பாடியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 2 நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.

வாணியம்பாடி பகுதியி 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் 45 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வாணியம்பாடி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சிவன்அருள், மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தாசில்தார் சிவபிரகாசம், நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஏற்கனவே ஆம்பூர் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாணியம்பாடி நகர பகுதியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 2 நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. வாணியம்பாடி நகரில் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து போலீஸ்சூப்பிரண்டு விஜயகுமார் கூறுகையில், முழுமையான ஊரடங்கின் போது வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இதே போல் வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வேளாண் பொருட்கள் எடுத்து வரும் வாகனங்களுக்கு தடைகிடையாது என்றார்.

பிறந்தநாள் விழா: அம்பேத்கர் சிலைக்கு கலெக்டர் ஷில்பா மரியாதை
நெல்லையில் அம்பேத்கர் சிலைக்கு கலெக்டர் ஷில்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நிலுவையில் இருப்பதையொட்டி தலைவர்களின் பிறந்த நாளையொட்டி அவர்களது சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிக்க தடை விதிக்கப்பட்டது. அரசு சார்பில் மட்டும் மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு கலெக்டர் ஷில்பா மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் கலெக்டர் ஷில்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், நெல்லை தாசில்தார் பகவதி பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாளையங்கோட்டை மகாராஜ நகரில் அம்பேத்கர் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கண்மணி சர்மிளா, கண்மணி நிஷா, கண்மணி லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை சிவராம் கலைக்கூடம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மாணவ- மாணவிகள் தங்கள் வீட்டில் இருந்து அம்பேத்கர் ஓவியத்தை வரைந்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தனர். இதே போல் பல்வேறு தரப்பினர் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடினர்.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சதன்ரெயில்வே மஸ்தூர் யூனியன் உதவி கோட்ட தலைவர் சுப்பையா தலைமையில், கிளை செயலாளர் அய்யப்பன் முன்னிலையில் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad