கொரோனா பாதித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீர் போராட்டம் - மதுரையில்அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை அண்ணாநகரை சேர்ந்த ஒருவர் பலியானார். அதை தொடர்ந்து அவர் வசித்த பகுதியை சுற்றியுள்ள அனைத்து தெருக்களும் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலின்படி போலீசார் தடுப்புகள் அமைத்து அங்குள்ள மக்கள் வெளியே வர தடை விதித்தனர்.
மேலும் அந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பாக அத்தியாவசிய தேவைகளான காய்கறி, தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பகுதியில் வந்து விற்கப்படும் பொருட்களை மட்டும் தான் அங்குள்ளவர்கள் வாங்கும் நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் நாட்கள் செல்ல செல்ல அவர்களிடம் அங்கு விற்கப்படும் பொருட்களை வாங்க போதிய வருமானம் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் திடீரென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் கூறும் போது, நாங்கள் அனைவரும் கூலித்தொழிலாளிகள் என்பதால் வெளியே சென்றால் தான் வருமானம். அந்த வருமானம் மூலம் தான் தேவையான பொருட்களை வாங்க முடியும். அப்படி இல்லை என்றால் நாங்கள் கடன் வாங்குவதற்காக வெளியே செல்ல வேண்டும். எனவே எங்களை வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

உடனே அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சம்பவ இடத்திற்கு மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்படாததால் படகில் தவிக்கும் 25 மீனவர்கள்
பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்படாததால் பாம்பன் கடலில் படகில் நாகை மீனவர்கள் 25 பேர் தவித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கடந்த மாதம் நாகப்பட்டினத்தை சேர்ந்த 25 மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடி தொழிலுக்காக 2 பெரிய விசைப்படகுகளில் சென்றுள்ளனர். அவர்கள் மீன்களுடன் மீண்டும் கொச்சி திரும்பி வந்துள்ளனர். ஆனால் கொரோனா பீதியால் நாகையை சேர்ந்த 2 படகு மற்றும் மீனவர்களும் கரைக்கு வர அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து 2 படகுடன் 25 மீனவர்களும் சொந்த ஊரான நாகப்பட்டினம் செல்ல பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடக்க பாம்பன் கடல் பகுதிக்கு வந்தனர். ஊரடங்கு காரணமாக ரெயில்வே தூக்குப்பாலம் திறக்கப்படாததால் அவர்கள் சில நாட்களாக படகிலேயே தங்கி தவித்து வருகின்றனர்.

படகில் உள்ள உணவுபொருட்களும் குறைந்து வருவதால் மீனவர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே படகில் தவிக்கும் நாகையை சேர்ந்த மீனவர்கள் படகுடன் கடந்து செல்ல பாம்பன் தூக்குப்பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாம்பனில் உள்ள நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் அருள் உள்ளிட்டோர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை தொடங்கும் மீன்பிடி தடைக்காலத்தை குறைக்க நடவடிக்கை வேண்டும் - விசைப்படகு மீனவர் சங்கம் வலியுறுத்தல்
நாளை தொடங்கும் மீன்பிடி தடைக்காலத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது இதனை குறைத்து மே மாதத்தில் இருந்து மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் பாக்ஜலசந்தி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க தடைக்காலம் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை 61 நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த காலம்தான் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் சீசனாகவும் உள்ளது. இதனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டின் 61 நாள் மீன் பிடி தடைக்காலமானது நாளை (14-ந் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் தொடங்குகிறது. ஏற்கனவே கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் கடந்த 20 நாட்களுக்கு மேலாகவே ராமேசுவரம், பாம்பன் கடல் பகுதிகளில் 900-த்திற்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி ராமநாதபுரம் மாவட்ட அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசுராஜா கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவால் கடந்த மாதம் 21-ந் தேதியில் இருந்தே ராமேசுவரத்தில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. தற்போது விசைப்படகு மீனவர்களுக்கான 61 நாள் தடைக்காலமானது தொடங்க இருக்கிறது.

ஏற்கனவே 20 நாட்களுக்கு மேலாக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வருவதால் மீனவ குடும்பங்கள் பசி பட்டினியுடன் தவித்து வரும் நிலையில் இந்த 61 நாள் தடை காலத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 61 நாள் தடைக்காலத்தை ரத்து செய்யவோ அல்லது தடைக்காலத்தை குறைத்து மே மாதத்தில் இருந்தோ விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும். மேலும் இந்த ஒரு ஆண்டு மட்டுமாவது தடைக்கால நிவாரண தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் அரசு உரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காரைக்குடி பகுதியில் இறைச்சி-மீன் கடைகளில் ஆய்வு; கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
காரைக்குடி பகுதியில் இயங்கி வரும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன 10 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்குடி பகுதியில் 60-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளும், 80-க்கும் மேற்பட்ட மீன் கடைகளும் இயங்கி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவு விற்பனை மும்முரமாக இருப்பது வழக்கம். தற்போது ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் நேற்று இறைச்சி மற்றும் மீன் கடைகளில் குவித்தனர். மேலும் கடைகளில் தரமான இறைச்சி மற்றும் மீன்கள் விற்கப்படுகிறதா என அவ்வப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்குடி நகராட்சித்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் சோதனை நடத்தி கெட்டுப்போன சுமார் 1¼ லட்சம் மதிப்புள்ள இறைச்சி மற்றும் மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தனர். மேலும் வாரந்தோறும் சோதனை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராமன் பாண்டியன் அறிவுரையின் பேரில், காரைக்குடி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் வேல்முருகன் தலைமையில், அதிகாரிகள் நகரில் உள்ள இறைச்சி மற்றும் மீன்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். மேலும் சில கடைகளில் மக்கள் நெருக்கமாக நின்றதால் அவர்களை சமூக இடைவெளி விட்டு நிற்கும்படியும், கடை விற்பனையாளர்களை முக கவசம் அணிந்து விற்பனை செய்யும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து சில கடைகளில் கெட்டுப்போன 10 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். பின்னர் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் வேல்முருகன் கூறியதாவது:-

இறைச்சி கடை உரிமையாளர்கள், மக்களுக்கு கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி கடை உரிமையாளர்களை சிறையில் அடைக்க நேரும். எனவே தரமான இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஊரடங்கு உத்தரவால் 30 ஆயிரம் கட்டிட தொழிலாளர்கள் 19 நாட்களாக வேலையின்றி தவிப்பு - நிவாரணத்தொகை அதிகரிக்க வலியுறுத்தல்
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் 30 ஆயிரம் கட்டிட தொழிலாளர்கள் கடந்த 19 நாட்களாக வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இவர்கள், தங்களுக்கு வழங்கப் படும் நிவாரணத்தொகை உயர்த்தி வழங்கவேண்டும் என அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது.

அத்தியாவசிய தேவைக்கான காய்கறிகடை, மளிகைக்கடை, மருந்துக்கடை போன்ற கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள், நகைக்கடைகள், பூ மார்க்கெட், சிறு தொழில்கள் என அனைத்து வகையான தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

விவசாய பணிகளுக்கு எந்தவித தடையும் இல்லை என்று அரசு அறிவித்து உள்ளதால் விவசாய தொழில்கள் தங்கு தடையின்றி நடந்து வருகின்றன. ஆனால் கட்டிட தொழில்கள் நடைபெறவில்லை. மேலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருட்களும் வாங்க முடியவில்லை. இதனால் சிறிய கட்டிடம் முதல் பெரிய கட்டிடங்கள் வரையிலான கட்டுமான பணிகள் முடங்கிப்போய் உள்ளன. இதனால் கட்டிட தொழிலாளர்களும் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேல் கட்டிட தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். தஞ்சை மாநகரிலும் பல்வேறு பகுதிகளில் கட்டிட தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த 19 நாட்களாக வேலையின்றி, வருமானம் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கட்டிட பணிகள் எதுவும் நடைபெறாததால் கட்டிட பணிக்கு கொண்டு செல்லப்படும் கலவை எந்திரங்களும் ஆங்காங்கே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சை சீனிவாசபுரம், ராஜப்பா நகர் பகுதிகளில் கலவை எந்திரங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே கட்டிட தொழிலாளர்கள் தங்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.1000 நிவாரணத்தொகை போதுமானது அல்ல. அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

மூவேந்தர் அனைத்து கட்டிட அமைப்புசாரா தொழிலாளர் சங்க செயல் தலைவர் கனகராஜ் கூறுகையில், “ஊரடங்கு உத்தரவால் கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர். கட்டுமான தொழில்கள் முடக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலை இழந்த கட்டிட தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண தொகை போதாது. அதனை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதிக்குப்பின் உள்ள நல வாரிய அட்டைகள் புதுப்பிக்கப்பட முடியாத நிலையில் இருப்பதால், அவர்களுக்கும் நிவாரணத்தொகையை அரசு வழங்க வேண்டும். கட்டிட பணிகளில் பெரும்பாலும் தனித்தனியே நின்று கொண்டு தான் பணிபுரிவார்கள். எனவே சிறிய கட்டிட பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் வேலை செய்து தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

தாய்திருநாடு கட்டிட உடலுழைப்பு தொழிலாளர் சங்க மாநில தலைவர் சேகர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. கட்டிட தொழில்களும் அடியோடு முடங்கி உள்ளன. தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டிட தொழிலாளர்கள், பதிவு செய்யாத கட்டிட தொழிலாளர்கள், மீனவ தொழிலாளர்கள், தரைக்கடை வியாபாரிகள், தொழிலாளர்கள் என தமிழகத்தில் கோடிக்கணக்கானோர் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது எந்த வகையிலும் போதாது. எனவே அனைத்து தொழிலாளர்களுக்கும் மிக குறைந்தது ஒரு குடும்ப அட்டைதாரருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்” என்றார்.

மீன்களை ஏலம் விடக்கூடாது; விற்பனைக்கு நேரக்கட்டுப்பாடு கடுமையான நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதி - நாட்டுப்படகு மீனவர்கள் வேதனை
மீன்களை ஏலம் விடக்கூடாது, விற்பனைக்கு நேரக்கட்டுப்பாடு என மத்திய அரசு கடுமையான நிபந்தனைகளுடன் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மீனவர்கள் வேதனையில் உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, கழுமங்குடா, காரங்குடா, அடைக்கத்தேவன், மந்திரிப்பட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேஷபுரம் உள்ளிட்ட 27 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் கிளாஸ் படகு, பாரம்பரிய நாட்டுப்படகு என 4,500 படகுகள் உள்ளன.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஒரு மாதமாக நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு கடும் நிபந்தனைகளுடன் நாட்டுப்படகு மீனவர்களை மீன்பிடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை, ஏலக்கூடங்களில் ஏலம் விடக்கூடாது. ஏலக்கூடங் களில், மீனவர்கள் கூட்டம் கூடக்கூடாது. பிடித்து வரும் மீன்களை அந்தந்த கிராமங்களில் உள்ள வியாபாரிகளிடமே விற்பனை செய்ய வேண்டும். வியாபாரிகளிடம், மீன்களை காலை 7 மணிக்குள் விற்று முடித்துவிட வேண்டும். அதற்கு மேல் வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படும் மீன்களை பறிமுதல் செய்வதுடன் படகு உரிமம் ரத்து செய்யப்படும்.

ஒவ்வொரு கிராமங்களிலும் குழு அமைத்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும். மீன் இறங்கு தளங்களில் மீன்களை விற்பனை செய்யக்கூடாது. மீன்பிடி தொழிலுக்கு செல்லும் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கரைக்கு வரவேண்டும். நிபந்தனைகளை மீறும் படகுகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர்கள் முக கவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும். வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி கை கழுவ வேண்டும் என்பன உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்துள்ள இந்த கடுமையான நிபந்தனைகளால் மீனவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘வெளியூர் வியாபாரிகள் வந்தால்தான் மீன் நஷ்டம் இன்றி விற்பனை செய்ய முடியும். இந்த நிலையில் உள்ளூர் வியாபாரிகளுக்கு மீன்களை விற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. காலை 7 மணிக்குள் மீன்களை வியாபாரிகளுக்கு விற்க வேண்டும் என்று நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிப்பது கடினம். இதுபோன்ற கடும் நிபந்தனைகளுடன் மீன்பிடி தொழில் செய்ய முடியுமா? என்ற குழப்பத்தில் உள்ளோம்’ என்றனர்.

செங்கோட்டையில் இறந்த தந்தை உடலை பார்க்க அனுமதி கிடைக்காமல் நெல்லையில் தவித்த மாற்றுத்திறனாளி பெண்
செங்கோட்டையில் இறந்த தனது தந்தையின் உடலை பார்க்க அனுமதி கிடைக்காமல் நெல்லையில் மாற்றுத்திறனாளி பெண் தவித்தார். அவரை சிறப்பு ஏற்பாட்டில் கலெக்டர் ஷில்பா ஊருக்கு அனுப்பி வைத்தார்.

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் மாரீசுவரன் (வயது 27). பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி விக்னேசுவரி (27). இந்த தம்பதிக்கு வாய் பேச முடியாது, காது கேட்கும் திறனும் கிடையாது. கொரோனா பீதி மற்றும் விடுமுறையையொட்டி இந்த மாற்றுத்திறனாளி தம்பதி சொந்த ஊரான கே.டி.சி. நகருக்கு திரும்பி வந்தனர்.

இந்த நிலையில் விக்னேசுவரியின் தந்தை செண்பகம், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நேற்று உடல் நலக்குறைவால் திடீரென்று இறந்தார்.

இதனால் அவரது உடலை பார்க்கவும், இறுதி சடங்கில் பங்கேற்கவும் விக்னேசுவரி தம்பதி புறப்பட்டனர். ஆனால் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால், மாற்று ஏற்பாடாக கார் மூலம் செல்ல உறவினர் கள் ஆலோசனை வழங்கினர்.

இதையடுத்து ஏதேனும் ஒரு காரில் செல்லும் வகையில் அனுமதி பெறுவதற்காக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அவர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர்களுக்கு உரிய அனுமதி கிடைக்காமல் தவித்தார்கள்.

மதியம் இந்த தம்பதி சமூக ஆர்வலர்கள் உதவியுடன், மாவட்ட உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரனை நேரில் சந்தித்து தங்களது நிலைமையை எடுத்துக் கூறினர்.

இதையடுத்து அவர், கலெக்டர் ஷில்பாவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்த மாற்றுத்திறனாளி தம்பதிக்கு சிறப்பு ஏற்பாடாக ஒரு காரில் உரிய அனுமதியுடன் அனுப்பி வைக்க மாவட்ட கலெக்டர் ஷில்பா நடவடிக்கை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பிற்பகலில் இந்த தம்பதி காரில் செங்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அந்த பெண், மாவட்ட நிர்வாகத்துக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்த தம்பதி செங்கோட்டைக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது தவறாக விண்ணப்பித்து விட்டனர். இதனால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. பின்னர் நேரடியாக வந்த அவர்களது கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டு, செங்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்“ என்று தெரிவித்தனர்.

தந்தை இறந்த தகவல் கிடைத்தும் அவரது உடலை பார்க்க செல்ல முடியாமல் மகள் அவதிப்பட்டதும், அதனை பிறரிடம் எடுத்துக் கூற முடியாமல் சிரமப்பட்டதும் காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]