Matrimony OTT-Platforms Jobs Coupons Business

திருவள்ளூரில் 29 பேருக்கு கொரோனா உறுதி - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட் டத்தில் இதுவரை 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இவர்கள் வசித்த பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நோய் பரவாமல் தடுக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் உள்ள சாலைகள் சீல் வைக்கப்பட்டு, யாரும் வெளியே செல்லவும், வெளிநபர்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வாயிலாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கண்காணிப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதிகளில் யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளும், கடுமையான சுவாச குறைபாடுகள் இருப்பதாக தானாக முன்வந்தால் அவர்களுக்கு டாக்டர்கள் மூலம் உரிய பரிசோதனை செய்யப்பட்டு முக கவசங்கள் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என கண்டறிய பூதூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 106 பேரும், பூந்தமல்லியில் உள்ள பொதுசுகாதார நிறுவனத்தில் 56 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மொத்தம் 3,849 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இவர்களை கண்காணிக்க 48 மருத்துவ கண்காணிப்பு குழுக்களும், 1,885 சுகாதார பணியாளர்களும் மாவட்டம் முழுவதும் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நோய் தொற்று பரவாமல் தடுக்க நாள் ஒன்று 320 லிட்டர் கிருமி நாசினியும், 412 லிட்டர் ஹைப்போ குளோரைடும் தெளிக்கப்பட்டு வருகிறது.

பெருந்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு
பெருந்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பெருந்துறை பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பலியானார். இதைத்தொடர்ந்து பெருந்துறையில் கண்ணகி வீதி, திலகர் வீதி உள்பட 9 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாதபடியும், அங்குள்ளவர்கள் வெளியே வரமுடியாத படியும் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பெருந்துறை கண்ணகி வீதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மக்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி, கோபி நகராட்சி, கரட்டடிபாளையம், பவானி, கவுந்தப்பாடி, சத்தியமங்கலம், கண்ணகி வீதி உள்பட 10 இடங்களில் சுமார் 33 ஆயிரத்து 330 குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 66 ஆயிரத்து 806 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ குழுவினர் மூலம் கண்காணிப்பட்டு வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் இறந்துள்ளார். பெருந்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எந்த காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, சுகாதார துணை இயக்குனர் சவுண்டம்மாள், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் மணி உள்பட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

காஞ்சீபுரத்தில் மளிகை கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது
காஞ்சீபுரத்தில் மளிகை கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத் தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மளிகை, பால் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரம் வரை திறந்து இருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் சீராக கிடைத்திட காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் மளிகை கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, சப்-கலெக்டர் சரவணன், காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி மற்றும் மொத்த மளிகை வியாபாரிகள், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சீபுரம் நகரில் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதி மக்களுக்கு வீடுகளுக்கே சென்று மளிகை பொருட்களை வழங்குவது, சென்னையில் இருந்து மளிகை பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களை காஞ்சீபுரம் நகருக்குள் வர அனுமதி வழங்குவது, நகருக்குள் உள்ள அந்தந்த பகுதிகளுக்கு வரும் வாகனங்களை அனுமதிப்பது மற்றும் விலைவாசி உயர்வு இல்லாமல் தங்குதடையின்றி பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் கிடைக்க வழிவகை செய்வது உள்ளிட்டவைகள் குறித்து மளிகை கடை உரிமையாளர்களுடன் மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தி சில அறிவுரைகளையும் வழங்கினார்.

மாவட்டத்தில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறக்க அனுமதி - கலெக்டர் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மருந்தகம், மளிகை உள்ளிட்ட கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. சாலைகள் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளும் இனிமேல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே செயல்பட வேண்டும்.

இந்த கடைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கால அளவான காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவினை கடை பிடிக்காமல் மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அபிராமம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை - கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவு
அபிராமம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவின்படி சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா மேற்பார்வையில் அபிராமம் பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் தலைமையில் காய்கறி, உணவகங்கள், இறைச்சி, மளிகை, மருந்து கடைகள் மற்றும் அரசு அலுவலகங்கள், வங்கி, ஏ.டி.எம். ஆகிய இடங்களில் கட்டங்கள் வரையப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் குப்பைகள் தனியாகவும், பாதுகாப்பாகவும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளில் உள்ள தெருக்களிலும் பிளச்சிங் பவுடர் போடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. சந்தை முடிந்த பின்பு உடனடியாக தூய்மை செய்யப்பட்டு செயல் அலுவலரால் ஆய்வு செய்யப்படுகிறது. 144 தடை உத்தரவை கடைபிடிக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளிலும் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

செம்பாக்கம் நகராட்சியில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 கி.மீ. சுற்றளவுக்கு ‘சீல்’ வைக்க கலெக்டர் உத்தரவு
சென்னையை அடுத்த செம்பாக்கம் நகராட்சி பகுதியில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சீல் வைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதி மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் நோய் பரவாமல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் வசித்த பகுதியை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சாலைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதால் அந்த பகுதியில் உள்ள சாலைகள் சீல் வைக்கப்பட்டது.

இந்தநிலையில் செம்பாக்கம் நகராட்சியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் செம்பாக்கம் நகராட்சியில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த வீடுகள் உள்ள சாலைகள் மட்டும் சவுக்கு கம்பால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் சர்வ சாதாரணமாக வீட்டை விட்டு வெளியேறி அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று வருகிறார்கள். செம்பாக்கம் நகராட்சி பகுதியில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து செம்பாக்கம் நகராட்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றிலும் 5 கி.மீ. சுற்றளவுக்கு முழுமையாக சீல் வைத்து, அங்குள்ள கடைகளை மூடவும், பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவிட்டார்.

அதன்படி செம்பாக்கம் நகராட்சி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் சீல் வைக்கப்பட்டு, அனைத்து கடைகளும் மூடப்படும்.

பொதுமக்களுக்கு வாரத்துக்கு 2 முறை காய்கறிகளும், 1 முறை மளிகை பொருட்களும் நகராட்சி ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக செம்பாக்கம் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்
தென்காசியில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 3 பேர் கொரோனா தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் புளியங்குடியைச் சேர்ந்த ஒருவரும் உள்ளார். எனவே புளியங்குடி நகரசபை முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மரகத நாதன், தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ், நகரசபை ஆணையர் சுரேஷ், தாசில்தார் அழகப்பராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புளியங்குடியில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் முறைகள், தனிமைப்படுத்தப் பட்டவர்களின் வீடுகளை கண்காணித்தல், புதிதாக காய்ச்சல் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்தல், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி இருப்பவர்களை கண்காணித்தல், கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.

நெல்லையில் அத்தியாவசிய தேவைக்காக வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே வர அனுமதி அட்டை வழங்கப்படும் - மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தகவல்
நெல்லையில் அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே வர அவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்படும் என்று நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நெல்லை மாநகராட்சி பகுதியில் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருவதால் காய்கறி மார்க்கெட்டுகள், பலசரக்கு கடைகள் போன்ற இடங்களில் கூட்டம் அதிகமாக ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கும் பொருட்டு கலெக்டர் ஷில்பா அறிவுரைப்படி பொதுமக்கள் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வெளியில் வருவதற்கு அனுமதி அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டைகளில் இளம்பச்சை நிறத்திலான அட்டை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் வெளியில் வருவதற்கும், நீல நிறத்திலான அட்டை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் வெளியில் வருவதற்கும், பிங்க் நிறத்திலான அட்டை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் வெளியில் வருவதற்கும் வழங்கப்படுகிறது.

முதல் கட்டமாக நேற்று முன்தினம் முதல் மேலப்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரத்தில் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதியில் வருகிற 16-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ள அந்த 2 நாட்களில் மட்டும் வெளியில் வந்து, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிறுவனங்கள் பொதுமக்களிடம் உள்ள அனுமதி அட்டையின்படி சரிபார்த்து அந்த நாளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும். இதை மீறுபவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி - வங்கி கணக்கு எண்ணை செலுத்த கலெக்டர் அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்ட அமைப்பு சாரா தொழி லாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க, வங்கி கணக்கு எண்ணை நலவாரிய அலுவலகத்தில் அளிக்காத தொழிலாளர் கள் உடனடியாக அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா டிரைவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் கொரோனா தடுப்பு சிறப்பு நிவாரண உதவித்தொகையாக ரூ.1000 வீதம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்புசாரா டிரைவர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற வங்கி கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை நலவாரிய அலுவலகத்தில் அளிக்காத தொழிலாளர்கள் உடனடியாக அளிக்க வேண்டும்.

அதில் தங்களது பெயர், தொலைபேசி எண், வங்கி கணக்கு எண் மற்றும் நலவாரிய பதிவு எண் ஆகியவற் றினை திருவள்ளுர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் ‘வாட்ஸ்-அப்’ நம்பர்-9382976564 அல்லது மின்னஞ்சல் முகவரி lossst-lr@gm-a-il.com அல்லது டி.பொன்னேரி உதவி ஆணையர், அலுவலகம் ‘வாட்ஸ்-அப்’ நம்பர்-9626194761 அல்லது மின்னஞ்சல் முகவரி losss-p-o-n-n-e-ri@gm-a-il.com மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பாக உறுப்பினர்கள் யாரும் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மருந்துகள் உள்பட அனைத்தும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் தற்காலிக சந்தைகள் மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்கறி மற்றும் பழங்கள் வாகனம், தள்ளு வண்டிகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தங்களது வாடிக்கையாளர்களின் வீடுகளில் நேரடியாக சென்று வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், வங்கி ஏ.டி.எம்.கள், எரிவாயு முகவர்கள், இறைச்சி கடைகள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பொது மக்கள், வியாபாரிகள், வணிகர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்மோகன், துணை கலெக்டர் (பயிற்சி) மந்தாகினி, வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தாசில்தார்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஆம்பூரில் வங்கிகள் இயங்காது வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கப்படும் - பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
ஆம்பூரில் வங்கிகள் இயங்காது என்றும், பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் வீடுகளுக்கே கொண்டுசென்று வழங்கப்படும், எனவே யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.

ஆம்பூர் வர்த்தக மையத்தில் அனைத்து அத்தியாவசிய அரசு துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ம.ப. சிவன்அருள் தலைமையில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தாசில்தார் செண்பகவல்லி, நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன், பொறியாளர் எல். குமார், வேளாண்மைத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து, காய்கறி, மளிகை, பழம், பால் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நகரம் முழுவதும் பல்வேறு பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் குறித்து அறிந்து அவற்றை பொதுமக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு கலெக்டர் ம.ப.சிவன்அருள் கூறியதாவது:-

ஆம்பூர் நகரில் மட்டும் வங்கிகள் இயங்காது. அந்தந்த பகுதிகளில் இயங்கும் ஏ.டி.எம். மையங்கள் மூலம் பொதுமக்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அந்தந்த குடியிருப்பு பகுதிகளுக்கே கொண்டு சென்று வழங்கப்படும்.

பொதுமக்கள் எந்த பொருள் வங்குவதற்காகவும் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது. பொதுமக்கள் வாகனங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். முதியவர்கள், சுவாச கோளாறு உள்ளவர்கள் கட்டாயமாக வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். ஆம்பூர் பகுதி பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தந்து கொரோனா தொற்று இல்லாத நகரமாக மாற்றிட மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad