செங்கல்பட்டு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் கடைகள் மூடப்படும் - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகள் இன்று முதல் அடைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கூறியதாவது:-

full-width செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 28 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்படையவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் பரவல் காக்கப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை மூலம் தனித்தனி குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு வந்து செல்வதாக புகார்கள் வந்துள்ளதால், மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் இன்று (சனிக்கிழமை) முதல் மூடப்படும்.

அந்த பகுதி மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பழம், காய்கறிகள் அடங்கிய பை ஒன்று ரூ.100 வீதம் வாகனங்கள் மூலம் அவர்களது வீட்டுக்கே சென்று வினியோகம் செய்யப்படும். மளிகை சாமான் மற்றும் மருந்து, மாத்திரைகளும் தேவைப்படும் வீட்டுக்கே நேரடியாக சென்று வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

ஒவ்வொரு முறையும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் இந்த பகுதிக்கு உள்ளே செல்லும்போதும், வெளியே வரும் போதும் கிருமி நாசினி தெளிக்கப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் வசித்த வீடுகளில் தினம் 5 முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

பால் வினியோகம் செய்யும் வெளி நபர்கள் எவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் செல்லாத வண்ணம் அப்பகுதி தன்னார்வலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட நிர்வாகத்தின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

25 பேருக்கு தான் கொரோனா பாதிப்பு: சமூக தொற்றாக பரவவில்லை
மதுரையில் 25 பேருக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை சமூக தொற்றாக பரவவில்லை என்று கலெக்டர் வினய் கூறினார்.

மதுரை நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான மேலமடை, நரிமேடு மற்றும் தபால்தந்தி நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் கலெக்டர் வினய் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

மதுரை மாநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 25 நபர்கள். இவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தான். மதுரை நகரை பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக இதுவரை பரவவில்லை. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 இடங்களில் தான் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது.

இவற்றில் மதுரை மாநகரில் மேலமடை, நரிமேடு மற்றும் தபால் தந்தி நகரிலும், மதுரை புறநகரில் 7 இடங்கள் உள்ளன. இந்த 10 இடங்கள் தடுப்புகள் அமைக்கப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளன. நகர்புறங்களில் 1 கிலோ மீட்டர் அளவிற்கும், கிராமப்புறங்களில் 3 கிலோ மீட்டர் அளவிற்கும் வெளியே செல்லாதவாறு பாதுகாப்பு தடுப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு தெருவிற்கும் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தினந்தோறும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மதுரை நகரில் அத்தியாவசிய பொருட்கள் எந்தவித தட்டுப்பாடின்றி அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஒரு சில பொருட்கள் மட்டும் தான் தட்டுப்பாடு இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பிய 3400 பேர் 28 நாள் தனிமை காலத்தை நிறைவு செய்துள்ளனர் - ராமநாதபுரம் கலெக்டர் தகவல்
வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 3400 பேர் 28 நாள் தனிமை காலத்தை நிறைவு செய்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து 4,777 பேர் சொந்த ஊர் வந்திருந்த நிலையில் தற்போது 28 நாட்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் 1,343 பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மீதம் உள்ள 3434 பேரின் தனிமை காலம் முடிவடைந்து விட்டதால் ஊரடங்கு உத்தரவினை கடைபிடித்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் தற்போது 17 பேர் உள்ளனர். இவர்களில் 11 பேருக்கு ரத்த பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அதில் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. மீதம் உள்ள 6 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் உணவுக்கு வழியின்றி தவித்து வந்தவர்கள் 786 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக 290 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 200 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டிகளில் கொரோனா வார்டு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்களும் தேவையான அளவு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி ஊழியருடன் பழகியவர்கள் விவரம் சேகரிப்பு
தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி ஊழியருடன் பழகியவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பெரும்பாலான மக்கள் மொத்தமாக காய்கறிகளை வாங்கி சென்று விடுகின்றனர். இதனால் காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று தற்காலிக மார்க்கெட்டுக்கு குறைந்த அளவில் மக்கள் வந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சாலைகள், கடைகள், மார்க்கெட் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

தனியார் ஆஸ்பத்திரி

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் வீடுகள் அமைந்து உள்ள போல்டன்புரம் உள்ளிட்ட 8 பகுதிகள் முடக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியில் வர முடியாத அளவுக்கு அனைத்து சாலைகளும் தகரங்களால் அடைக்கப்பட்டு உள்ளன. ஒரு வழியில் மட்டும் சுகாதாரத்துறையினர், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்காக திறக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் அந்த பெண் ஊழியருடன் நெருங்கி பழகிய மற்ற ஊழியர்களுக்கும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரத்தை சேர்ந்த மற்றொரு பெண் ஊழியருக்கும் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.

விவரம் சேகரிப்பு

இதனால் அந்த பெண் ஊழியருடன் பழகியவர்கள், வேனில் ஊருக்கு சென்ற மற்ற ஊழியர்கள் விவரங்களையும், தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்து கொண்ட நோயாளிகள் விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். அந்த விவரங்களை சேகரித்து அவர்களை முழுமையாக தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து கிருமி நாசினி தெளித்து கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

தங்கம்மாள்புரத்தை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. சுகாதாரத்துறையினர் அந்த பகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று, யாருக்கும் சளி, காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்யும் பணிகளையும் தொடங்கி உள்ளனர். இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் உடன் இருந்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad