Matrimony OTT-Platforms Jobs Coupons Business

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 9 இடங்களில் தீவிர கண்காணிப்பு - கலெக்டர் ஷில்பா; காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ரேபிட் பரிசோதனை - கலெக்டர் பொன்னையா ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 9 இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் ஷில்பா கூறினார்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான 9 இடங்களில் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம், மேலப்பாளையம் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அந்த பகுதிகளில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மண்டல சிறப்பு அதிகாரி கருணாகரன், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், கலெக்டர் ஷில்பா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
பின்னர் கலெக்டர் ஷில்பா கூறுயதாவது:-

9 பகுதிகள் கண்காணிப்பு

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பு, அத்தியாவசிய பொருட்கள், நிவாரண பணிகள் என பல்வேறு பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து பொதுமக்களை காத்து வருகிறது.

கொரோனா நோய் தொற்று தாக்கம் அதிகமுள்ள பகுதிகளான மேலப்பாளையம், என்.ஜி.ஓ. காலனி, நெல்லை டவுன் கோடீசுவரன் நகர், நெல்லை டவுன், பேட்டை, பாளையங்கோட்டை சிவன் கோவில் தெரு, பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள டார்லிங்நகர், களக்காடு, பத்தமடை ஆகிய 9 பகுதிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள்

கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ள மக்களை விரைவு பரிசோதனை செய்வதுடன், தேவையானவர்களுக்கு, மருத்துவ சிகிச்சை, அத்தியாவசிய பொருட்கள், நிவாரண நிதி உள்ளிட்டவை தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் மண்டல சிறப்பு குழவினர் ஆய்வு செய்து அங்குள்ள போலீசார், அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த பகுதிகளில் நவீன எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டு, கூடுதலாக முககவசங்கள், கையுறைகள் வழங்கப்பட்டன.

இந்த ஆய்வின்போது நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மாநகர நகர்நல அலுவலர் சதிஷ்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வரதராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் - போலீசாருக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவு
சென்னிமலை பகுதியில் ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லைகள் 6 இடங்களில் உள்ளன. இந்த எல்லைகளில் இரவு, பகலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 18-ந் தேதி இரவு திருப்பூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் சென்னிமலை அருகே கூத்தம்பாளையம் ஊராட்சிக்கு வந்தனர். அவர்கள் மெயின்ரோடு வழியாக வராமல் கிராமங்கள் வழியாக வந்துள்ளனர். அவர்களை ஊர் மக்கள் தடுத்து நிறுத்தினர்.

அதன்பின்னர் சென்னிமலை போலீசார் அவர்களை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொரோனா நோய் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் நடக்கும் கண்காணிப்பு பணிகள் குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு நடத்தினார். அவர் சென்னிமலை அருகே ஊத்துக்குளிரோட்டில் உள்ள ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையான சிறுக்களஞ்சி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த போலீசார் மற்றும் மருத்துவ குழுவினரிடம் கண்காணிப்பு பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

அதன்பிறகு கலெக்டர் சி.கதிரவன் அதிகாரிகள், போலீசாரிடம் பேசும்போது கூறியதாவது:-

வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் நுழையும் கார், லாரி உள்பட அனைத்து வாகனங்களையும் போலீசாரும், மருத்துவ குழுவினரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மோட்டார் சைக்கிளில் ஒருவரும், கார்களில் 2 பேருக்கும் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதேபோல் லாரிகள் வரும்போது டிரைவர், மாற்று டிரைவர் என 2 பேர் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் ஆட்கள் இருந்தால் லாரிகளை மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது.

வாகன அனுமதி கடிதம் வைத்திருந்தாலும் அதிக நபர்களை ஏற்றி வரும் வாகனங்களை மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன், பெருந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், நில வருவாய் அதிகாரி தினேஷ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ரேபிட் பரிசோதனை - கலெக்டர் பொன்னையா ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகராட்சி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வார்டுகள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், மற்ற வார்டுகள் 5 மண்டலங்களாகவும், மாவட்டத்துக்கு உட்பட்ட 5 பேரூராட்சி பகுதிகள் 3 மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்தநிலையில் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை பரிசோதிக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை அளித்த 300 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் மூலம் நேற்று முதல் 5 இடங்களில் மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது. காஞ்சீபுரம் நகராட்சி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பரிசோதனை மையத்தினை மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் கூறும்போது, காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு முதல் கட்டமாக வந்துள்ள ரேபிட் கிட் கருவிகள் மூலம் காஞ்சீபுரம், மொளச்சூர், எம்.ஜி.ஆர்.நகர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட 5 பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய நபர்கள் 54 பேர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதை சார்ந்து பணியாற்றும் காவல்துறையினர், மருத்துவபணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது என்றார்.

அப்போது மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் உடன் வந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு, 780 ரேபிட் கிட் கருவிகள் வந்தன - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 102-ஆக குறைந்துள்ளது. நேற்று 34 பேர் வீடுகளில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுதலை நிறைவு செய்துள்ளனர். டெல்லி சென்று வந்தவர்களில் கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்களுடனும் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீசார், தன்னார்வலர்கள் மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியில் உள்ளவர்கள் என 148 பேருக்கு ரேபிட் கிட் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. குறிப்பாக, இந்தக் கருவி மூலம் முதன்மையாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பணியில் உள்ள போலீசார், தன்னார்வலர், வருவாய்த் துறையினர் ஆகியோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வரை மொத்தம் 38 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 33 பேர் வேலூர் அரசு மருத்துவமனையிலும், 5 பேர் வேலூர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 33 பேரில் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 16 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் நோய் பாதிப்பை உணர்ந்து மக்களே அதனை கடைப்பிடித்து வருகின்றனர். மாவட்டத்தில் 1,200 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் நேற்று வரை பொதுமக்கள் 72 பேருக்கு பரிசோதனை செய்ததில் 46 பேருக்கு பாதிப்பு இல்லை என முடிவுக்கு வந்துள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு விதிமுறைகள் அப்படியே பின்பற்றப்படும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள அத்தியாவசியப் பணிகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லை. ஜெர்மனி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கல்லறைகள் கட்டுவதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட கற்களை பயன்படுத்துவதற்கான கற்கள் ஏற்றுமதி ஒரு நிறுவனத்தின் மூலம் அனுப்பப்பட்டு விட்டது. புதிதாக குவாரிகளில் கற்கள் உற்பத்தி ஏதும் நடைபெறவில்லை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 நாட்கள் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு நிற மண்டலத்துக்கு மாறிவிடும், 28 நாட்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் பச்சை நிற மண்டலத்துக்கு ராணிப்பேட்டை மாவட்டம் மாறிவிடும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் இன்று வரை 780 ரேபிட் கிட் கருவிகள் வந்துள்ளது.

விவசாயிகளுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் ராமன் தகவல்
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையினால் சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை எளிதாக கையாளும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தொலைபேசி ஒதுக்கீடு செய்யப்பட்டு அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை மற்றும் விதை ஆய்வு, சான்றளிப்பு அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளும், பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், விளைபொருள் விற்பனை மற்றும் உரிய வியாபாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். மேலும், பொருளட்டு கடன் பெறும் வழிமுறைகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட இடங்கள் மற்றும் வழிமுறைகள், குளிர்பதன கிடங்கு வசதி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என அனைத்து வித ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.

சேலம் மாவட்ட விவசாயிகள் மட்டும் அலுவலக நேரத்தில் (காலை 10 முதல் மாலை 6 மணி வரை) 0427-2417520 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடையாள அட்டையை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்:அத்தியாவசிய பொருட்கள் வாங்க இனி வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை
அத்தியாவசிய பொருட்கள் வாங்க இனி வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. அடையாள அட்டையை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க இனி வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. அடையாள அட்டையை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மூன்று வண்ணங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அட்டையை வைத்திருப்பவர்கள் வாரத்தில் இருநாட்கள் மட்டுமே வெளியே வர முடியும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், இனி அடையாள அட்டையை, வாரத்தில் 2 நாட்களில் ஒரு நாளுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த அடையாள அட்டையை குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துபவரின் ஆதார் மற்றும் குடும்ப அட்டையின் எண்களை அடையாள அட்டையில் பதிவிட வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தங்களின் வீடுகளிலிருந்து ஒரு கி.மீ. தூரத்திற்குள் அமைந்துள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் போலீசார் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் மூலம் அனுமதி அடையாள அட்டையை சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற உள்ளது. 1 கி.மீ. தூரத்திற்கு அதிகமாக உள்ள கடைகளுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றால், அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். அடையாள அட்டையில் ஆதார் எண் பதிவு செய்த நபரை தவிர்த்து, வேறு நபர்கள் பயன்படுத்தினால், அனுமதி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே வருவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும்.

திருவள்ளூரில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை - மாவட்ட கலெக்டர் ஆய்வு
திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா நோய் தொற்றினை கண்டறியும் பரிசோதனை கருவி வாயிலாக சுகாதார பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று கண்டறிய உதவும் ரேபிட் பரிசோதனை கருவி மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் 900 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் 3 பேர், பெண்கள் 14 பேர், ஆண்கள் 29 பேர் என 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

மொத்தம் 4 ஆயிரத்து 118 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என அவர் தெரிவித்தார். அவருடன் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad