தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-லிருந்து 834 -ஆக உயர்வு
தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-லிருந்து 834 -ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் தற்போது கொரோனா இரண்டாம் கட்டத்திலிருந்தாலும் மூன்றாம் கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முயன்று வருவதாகவும் கூறினார்.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, வியாழக்கிழமை இரவுக்குள் கொரோனாவைச் சோதனை செய்வதற்காந 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் வந்துவிடுமெனத் தெரிவித்தார்.
கொரோனா தொற்று தற்போது இரண்டாம் கட்டத்தில் இருந்தாலும் மூன்றாம் கட்டத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருந்தபோதும் இரண்டாம் கட்டத்திலேயே இதனைத் தடுத்துவைப்பதற்கான முயற்சியில் மாநில அரசு முழுமையாக ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முதலமைச்சரிடம் ஒரிசா மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகத் தெரிவித்த முதல்வர், இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்று இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழக அரசு தற்போது வாங்கியுள்ள ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலம் முதலில் யாராரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் குடும்பத்தினருக்கு சோதனை செய்யப்படும். அடுத்ததாக, இந்தக் குடும்பத்தினரோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனை செய்யப்படும். அதற்குப் பிறகு, அந்த வீட்டைச் சுற்றி இருந்தவர்களுக்கு சோதனை செய்யப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு முழுவதுமுள்ள 1170 பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை திட்டத்தில் பதிவுசெய்ள்ள 1,70,200 பேருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென்றும் அரசு அறிவித்துள்ளது.
தூய்மைப் பணியாளர் நல வாரியம், கதர் கிராம தொழிலாளர் நல வாரியம், மீனவர் நல வாரியம், மூன்றாம் பாலினத்தவர் நல வாரியம், சிறு வியாபாரிகள் நல வாரியம், பூசாரிகள் நல வாரியம், உலாமாக்கள் நல வாரியம், சீர் மரபினர் நல வாரியம், நரிக்குறவர் நல வாரியம், திரைத்துறையினர் நல வாரியம், நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் ஆகிய வாரியங்களில் இடம்பெற்றுள்ள 7 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஊரடங்குப் பணியில் பணிபுரிந்துவந்த 33 வயது காவலர் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், அவர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படுமென முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல, அரசு ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்புப் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கும் இதே போன்ற சலுகை வழங்கப்படுமென்றும் முதல்வர் தெரிவித்தார்.
ஊரடங்கு நாட்கள் நீட்டிக்கப்படும் பட்சத்தில், கூடுதலாக நிதி உதவி வழங்கப்படும் வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படுவதில்லை. இருக்கும் நிதியை வைத்துத்தான் உதவிசெய்ய முடியுமெனத் தெரிவித்தார்.