செம்பாக்கம் நகராட்சியில் 9 சாலைகள் மூடப்பட்டன - பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் வேண்டுகோள்
தாம்பரம்,
சென்னையை அடுத்த செம்பாக்கம் நகராட்சி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த 3 பேர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியது தெரிந்தது. இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதியானது. 3 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து இவர்கள் 3 பேரும் வசித்து வந்த பகுதிகளில் தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் காமராஜபுரம் பகுதியில் இவர்களது வீடு அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள 9 சாலைகள் சவுக்கு கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தி மூடப்பட்டு உள்ளது. இந்த பகுதிக்குள் வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
செம்பாக்கம் நகராட்சி சுகாதார அலுவலர் நாகராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் கிரிமி நாசினி மருந்துகளை தெளித்தனர். வீடு, வீடாக நகர்ப்புற செவிலியர் குழுவினர் பொதுமக்களை கணக்கெடுத்து மருத்துவ உதவிகள் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக் கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகளில் நோய் பரவாமல் காக்கும் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது. செம்பாக்கம் நகராட்சி காமராஜபுரம், மறைமலை நகர், நத்தம், மாமண்டூர், சட்ராஸ் பவுஞ்சூர், செய்யாறு உள்ளிட்ட 9 இடங்களில் சாலைகள் தடுப்புகளால் மூடப்பட்டு, அந்த பகுதிகளில் சுகாதார பணிகள் நடைபெற்று அந்த பகுதி முழுவதும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளது.
இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் என்பதால் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியில் வராமல் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.