சென்னையின் நிலை என்ன? கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 767 ஆக உயர்வு; கோயம்பேடு காய்கறி சந்தையில் 1500 சிறு வியாபாரிகள் போராட்டம்

சென்னையின் கொரோனா பாதிப்பு நிலை என்ன?அதிக பாதிப்பைச் சந்திக்கும் திருவிக நகர்
சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 64.88% பேரும், பெண்கள் 35.12% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று உறுதி செய்யப்பட்ட 104 தொற்றுகளில் 94 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 767 நபர்களில், 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக, திருவிக நகர் மண்டலத்தில் 41 நபரும், ராயபுரத்தில் 25 நபரும், அண்ணாநகரில் 8 நபரும், தண்டையார்பேட்டையில் ஏழு நபரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதற்கு முன் தினமும் ஒரே நாளில் அதிக தொற்று உறுதி செய்யப்பட்ட மண்டலம் திருவிக நகர் தான்.

நேற்றின் முன் தினம் அங்கு 34 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று நாற்பத்தி ஒரு நபருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 75 நபர்கள் திருவிக நகர் மண்டலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவிக நகரில் அதிகமான பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் அந்தப் பகுதியில் மிக நெருக்கமான வீடுகள் இருப்பதாலும், அப்பகுதி மக்கள் தனிநபர் இடைவெளியை சரியாக கடைப்பிடிப்பதில்லை என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் பாதிக்கப்பட்ட 2 நபரும் குணமடைந்து உள்ள நிலையில், சென்னையில் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்ட மண்டலமாக சோழிங்கநல்லூர் மாறியுள்ளது.
மண்டலம் வாரியாக பார்க்கையில், இதுவரை ராயபுரத்தில் 189 பேரும், திரு.வி.க நகரில் 169 பேரும், தேனாம்பேட்டையில் 85 பேரும்,  தண்டையார்ப்பேட்டையில் 77 பேரும், அண்ணாநகரில் 73 பேரும், கோடம்பாக்கத்தில் 63 பேரும் பாதித்து உள்ளனர்.மேலும், வளசரவாக்கத்தில் 30 பேரும், அம்பத்தூரில் 20 பேரும், அடையாறில் 19 பேரும்,  திருவொற்றியூரில் 16 பேரும்,  ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மாதவரத்தில் 4 பேரும்,  சோழிங்கநல்லூரில் 2 பேரும், மணலியில் 1 நபரும் உள்ளனர்.

மண்டலம் - மொத்தம் - உயிரிழந்தவர்கள் - குணமடைந்தவர்கள்
திருவொற்றியூர் - 16 - 0 - 4

மணலி - 1 - 0 - 0

மாதவரம் - 4 - 0 - 3

தண்டையார்பேட்டை - 77 - 1 - 21

ராயபுரம் - 189 - 6 - 64

திருவிக நகர் - 169 - 3 - 31

அம்பத்தூர் - 20 - 0 - 0

அண்ணாநகர் - 73 - 4 - 19

தேனாம்பேட்டை - 85 - 0 - 24

கோடம்பாக்கம் - 63 - 0 - 21

வளசரவாக்கம் - 30 - 1 - 6

ஆலந்தூர் - 9 - 0 - 6

அடையார் - 19 - 0 - 7

பெருங்குடி - 9 - 0 - 7

சோழிங்கநல்லூர் - 2 - 0 - 2

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 64.88% பேரும், பெண்கள் 35.12% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 164 பேருக்கும், 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 164 பேருக்கும் தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 80 வயதுக்கு மேல் 11 பேரும், 9 வயதுக்கு கீழ் 16 பேரும் பாதித்து உள்ளனர்.

10 முதல் 19 வயதுள்ளோர் 72 பேருக்கும்,  40 முதல் 49 வயதுள்ளோர் 137 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 107 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 65 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 24 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

வயது = பாதித்தோர் எண்ணிக்கை
0-9 = 16

10-19 = 72

20-29 = 164

30-39 = 164

40-49 = 137

50-59 = 107

60-69 = 65

70-79 = 24

80 = 11

சென்னையில் மக்கள் தொகை அதிகமாகவும் நெருக்கமாகவும் இருப்பதால்தான் தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதாகவும், மற்ற மாவட்டங்களை விட அதிகமான சோதனைகளை மேற் கொள்வதாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது.

மேலும், சென்னையில் அதிக பாதிப்பு உள்ள 6 மண்டலங்களாக ராயபுரம், திருவிக நகர், தண்டையார்பேட்டை, அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ள நிலையில் இந்த மண்டலங்களில் நோய்த்தடுப்பு பணிகளை கண்காணிக்கஒவ்வொரு மண்டலத்திற்கும் களப்பணி குழுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார்.

இதன் மூலம் இனி வரும் நாட்களில் நோய் பரவலை மிக தீவிரமாக கட்டுப்படுத்த முடியும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 1500 சிறு வியாபாரிகள் போராட்டம்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 1500 சிறு வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோயம்பேடு சந்தை அருகில் உள்ள காலி இடங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்தில் ஒருவரும், வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்தில் 2 பேருக்கு பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் பேசின் பிரிட்ஜ் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பில் தங்கியுள்ளனர் என கூறப்படுகிறது. மேலும்  அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் வேலைபார்த்துவிட்டு அரியலூர் சென்ற கூலித் தொழிலாளிக்கு கொரோனா
சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவிட்டு அரியலூர் சென்ற கூலித் தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் ஏற்கனவே 7 பேர் பாதிப்பு ஆளான நிலையில் அங்கு பணியாற்றிய அரியலூர் தொழிலாளிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊரான செந்துறை அருகே நக்கம்பாடிக்கு சென்ற நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ கண்ணகாணிப்பாளர், 2 மகன்கள், மருமகள் ஆகியோரும் மருத்துவமனயைில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad