5 மாநகராட்சியில் முழு ஊரடங்கு இன்று முதல் அமல் - வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது நடவடிக்கை

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. குறிப்பாக, சென்னை, மும்பை, சூரத், ஐதராபாத், அகமதாபாத், தானே ஆகிய நகரங்களில் கொரோனா நோய்த்தொற்று அதிவேகமாக பாதித்து வருகிறது.

தமிழகம் 5-வது இடத்தில் உள்ள நிலையில், நாடு முழுவதும் அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகம் பாதித்து வருவதாக கண்டறியப்பட்ட சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் 29-ந் தேதி வரை 4 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதேபோல், கொரோனா நோய்த்தொற்றில் அடுத்தபடியாக உள்ள சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் இன்றுமுதல் வரும் 28-ந் தேதி வரை 3 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மே 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக தினமும் மதியம் 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து, அருகில் உள்ள மளிகை, காய்கறி கடைகளுக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தனர். மதியம் 1 மணிக்கு மேல் ஊர் சுற்றுபவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓட்டிவந்த வாகனங்களை பறிமுதல் செய்ததுடன் அபராதமும் விதித்தனர்.

தற்போது, சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில் இன்றுமுதல் 4 நாட்களும், சேலம், திருப்பூர் ஆகிய 2 மாநகராட்சிகளில் 3 நாட்களும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், யாரும் வீட்டை விட்டே வெளியே வருவதற்கு அனுமதி இல்லை. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஏற்கனவே உள்ள ஊரடங்கு நடைமுறைகள் பொருந்தும்.

முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட குறிப்பிட்ட 5 மாநகராட்சி பகுதிகளில், கடைகளும் அடைக்கப்படும் என்பதால், நேற்று சென்னை உள்ளிட்ட நகரங்களில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, சமூக இடைவெளி என்பதை பெரும்பாலானோர் பின்பற்றவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால், நேற்று ஒருநாள் மட்டும் மதியம் 1 மணி வரை என இருந்த ஊரடங்கு தளர்வு பிற்பகல் 3 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை நேற்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இன்று முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் 5 மாநகராட்சி பகுதிகளிலும், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், பத்திரிகைகள், டெலிவிஷன்கள் செய்தி தொடர்பான பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து, வீட்டை விட்டு வேறு பணிகளுக்காக யாரும் வெளியே வந்தால், அவர்களை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று காலை 9 மணி நிலவரப்படி, ஊரடங்கை மீறியதாக 3 லட்சத்து 12 ஆயிரத்து 282 பேர் கைது செய்யப்பட்டு சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 65 ஆயிரத்து 756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3 கோடியே 13 லட்சத்து 98 ஆயிரத்து 554 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதால், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு வருகின்ற ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு ஊரடங்கால் சென்னையில் நாளை முதல் வரும் 29ம் தேதி வரை காய்கறி கடைகள் இயங்காது: சென்னை மாநகராட்சி
முழு ஊரடங்கால் சென்னையில் நாளை முதல் வரும் 29ம்  தேதி வரை காய்கறி கடைகள்,  பழங்கள் விற்பனை  கடைகள் இயங்காது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நடமாடும் மற்றும் மொபைல் வாகனம் மூலம் மட்டுமே காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad