Matrimony OTT-Platforms Jobs Coupons Business

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுக்காக 515 பேர் காத்திருப்பு கலெக்டர் தகவல்

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுக்காக 515 பேர் காத்திருக்கின்றனர் என்று கலெக்டர் கூறி உள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுக்காக 515 பேர் காத்திருக்கின்றனர் என்று கலெக்டர் கூறி உள்ளார். தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் 17,749 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு கொரோனா நோய் தொற்று தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 898 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 8,173 நபர்கள், வெளிமாநிலங்களிலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு திரும்பிய 909 நபர்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 438 நபர்கள் என மொத்தம் 9,520 நபர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 7,444 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு காலம் முடிந்து, இவர்களுடன் சேர்த்து மீதமுள்ள நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராசா மிராசுதார் மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 1,209 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 676 நபர்களுக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. இதில் 515 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

நியாய விலைக்கடைகள் மூலம் 6,52,648 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் 2 மாத உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வீதம் 6,895 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 6 லட்சத்து 64 ஆயிரம் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள் ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் பணி செய்பவர்களுக்கு 2 நாள் சிறப்பு ஊதியமாக ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 510 நபர்களுக்கு, அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.6 கோடியே 57 லட்சம் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களினால் மாவட்ட எல்லையை தாண்டி செல்ல வேண்டி ஆன்லைனில் அனுமதி கேட்ட 5,084 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 3,426 பேருக்கு 14 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திடும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்று விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம்.

சரக்குகள் கொள்முதல் செய்ய வணிகர்கள் பெற்ற வாகன அனுமதி மே 3-ந்தேதி வரை செல்லும் - கலெக்டர் தகவல்
சரக்குகள் கொள்முதல் செய்வதற்காக வாகனங்களில் செல்ல வணிகர்கள் பெற்ற அனுமதி வருகிற 3-ந் தேதி வரை செல்லும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டி, ஏற்கனவே வணிகர்களுக்கு சரக்குகளை கொள்முதல் செய்வதற்காக வாகனங்களில் சென்று வர மாவட்ட நிர்வாகம் 14.4.2020 வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது 3.5.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தின் மூலம் 14.4.2020 வரையிலான காலத்திற்கு பெறப்பட்ட அனுமதி கடிதத்தை 3.5.2020 வரை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக மீண்டும் அவர்கள் தனியே அனுமதி பெற தேவையில்லை. இந்த அனுமதி சீட்டு வருகிற 3-ந்தேதி வரை செல்லும்.

மேலும், பொதுமக்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அரசு அலுவலக பணியாளர்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பயணங்கள் மேற்கொள்வதற்காக கலெக்டரிடம் அனுமதி பெற வருபவர்கள் விண்ணப்ப படிவம் கொண்டு வரதேவையில்லை. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் 3 வண்ணங்களில் விண்ணப்ப படிவம் அச்சடிக்கப்பட்டு அதன் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி பொதுமக்களுக்கு பச்சை கலர் படிவ அனுமதிச்சான்றும், தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சிவப்பு கலர் படிவ அனுமதிச்சான்றும், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நீலநிற படிவ அனுமதிச்சான்றும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

விளைபொருட்களை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டால் தோட்டக்கலைத்துறையை தொடர்பு கொள்ளலாம் - கலெக்டர் அறிவிப்பு

விளைபொருட்களை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டால் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் அனைத்தையும் வியாபாரிகள் உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகிறார்கள். மாவட்டத்தில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை மூலமாக திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கேயம், பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது. இதிலும் உழவர்கள் தங்கள் விளை பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயிகள் பாதுகாத்து வைக்கும் வகையில் குளிர்பதன கிடங்குகள் இயங்கி வருகிறது. அதாவது அவினாசி, பல்லடம், உடுமலை, வெள்ளகோவில் பகுதிகளில் தலா 25 டன் கொள்ளளவும், பொங்கலூரில் 50 டன் கொள்ளளவும் கொண்ட குளிர்பதன கிடங்கு வசதி உள்ளது. இந்த குடோன்களில் விவசாயிகள் தங்கள் காய்கறி, பழங்களை வருகிற 30-ந் தேதி வரை இலவசமாக இருப்பு வைத்து விற்பனை செய்ய அரசு சலுகையை அறிவித்துள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனைசெய்வதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

உயர்மட்ட குழு பரிந்துரை இல்லை: விதிமுறையை பின்பற்றாமல் பட்டாசு ஆலை செயல்பட்டால் நடவடிக்கை - கலெக்டர் தகவல்
பட்டாசு ஆலை இயங்க உயர்மட்ட குழு பரிந்துரைக்க வில்லை எனவும் விதிமுறையை பின்பற்றாமல் ஆலை செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் கண்ணன் கூறினார்.

விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 20-ந் தேதி முதல் கிராமப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி இந்த ஆலைகள் செயல்பட வேண்டுமென தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தில் 954 பட்டாசு ஆலைகள் கிராமப்புறங்களில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வருகிற 20-ந் தேதி முதல் எந்தெந்த தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கலாமென ஆய்வு செய்து பரிந்துரை செய்ய நிதிதுறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் உயர் மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவர் கிருஷ்ணனை தொடர்பு கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் செயல்பட பரிந்துரை ஏதும் செய்யப்பட்டுள்ளதா என கேட்டபோது அவர் குழு இதுதொடர்பாக பரிந்துரை செய்யவில்லை என்று தெரிவித்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் அரசு அறிவுறுத்தலின்பேரில் அனுமதி வழங்கி இருக்கலாம் என்று தெரிவித்ததுடன் இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துடன் பேசுவதாகவும் தெரிவித்தார்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கிராமப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிப்பதற்கு ஒரு செயல்திட்டத்தை அரசு தந்துள்ளது. இந்த செயல்திட்டத்தில் உள்ளபடிதான் கிராமப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் செயல்பட முடியும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி 50 சதவீத தொழிலாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தொழில் நிறுவனம் செயல்பட வேண்டும். தொழில் நிறுவனம் செயல்படுவதற்கு முன்பு தொழில் நிறுவன வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

தொழிலாளர்கள் முக கவசம் அணிந்துதான் வேலைபார்க்க வேண்டும். 6 அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு தொழிலாளரும் வேலைபார்ப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

அந்த வகையில்தான் இந்த மாவட்டத்தில் கிராமப்பகுதியில் செயல்படும் 954 பட்டாசு ஆலைகள் 20-ந் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்துள்ள பட்டாசு ஆலைகளுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதர பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி இல்லை.

இந்த பட்டாசு ஆலைகள் செயல்படுவதற்கு முன்பு பட்டாசு ஆலைகள் இடம்பெற்றுள்ள தாலுகா அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே செயல்பட தொடங்க வேண்டும். 50 சதவீத தொழிலாளர்களுடன் பட்டாசு தயாரிப்பதற்கு வாய்ப்பு இல்லையென உற்பத்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விதிமுறைப்படி 50 சதவீத தொழிலாளர்களைத்தான் பணியமர்த்த வேண்டும். அவர்களை கொண்டு பட்டாசு தயாரிக்க வாய்ப்பு இல்லையென்றால் ஆலை செயல்படுவது குறித்து ஆலை உரிமையாளர்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த வாய்ப்பு இல்லை.

பட்டாசு தயாரிப்பு மூலப்பொருட்கள் வினியோகிக்கும் நிறுவனங்கள் நகர்ப்பகுதியில் உள்ளதால் அந்த நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி தர வேண்டுமென உற்பத்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. நகர்ப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர பிற நிறுவனங்களுக்கு செயல்பட அனுமதி இல்லை என்ற காரணத்தால் பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் வினியோகிக்கும் கடைகள் செயல்பட அனுமதிக்க இயலாது.

பட்டாசு ஆலைகள் விதிமுறைப்படி செயல்படுகிறதா என்பது அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்படும். விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு ஆலை செயல்படுவது கண்டறியப்பட்டால் அந்த ஆலை செயல்படுவதற்கு தடை விதிக்கப்படும். நூற்பு மில்களில் 6 அடி இடைவெளி விதிமுறையை பின்பற்ற வாய்ப்பு உள்ளது என்றும் பட்டாசு ஆலைகளில் அந்த விதிமுறை பின்பற்றப்படுவதற்கு சாத்தியப்படாது என்றும் கூறப்பட்டது. விதிமுறையை பின்பற்ற இயலவில்லை என்றால் பட்டாசு ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad