Matrimony OTT-Platforms Jobs Coupons Business

சாலையில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்; அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு - எடப்பாடி பழனிசாமி

கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனையொட்டி அரியலூர் நகராட்சி சார்பில் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சின்னகடை தெருவில் கடைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியை நகராட்சி ஆணையர் குமரன் பார்வையிட்டார்.

அப்போது பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அவ்வாறு கடைபிடிக்காத நபர்களுக்கும், சாலைகளில் எச்சில் துப்புபவர்களுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்யும் கடை வியாபாரிகளுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும் அபராதம் விதிப்பது இன்று (அதாவது நேற்று) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார்.

சேலம் மாவட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சேலம் மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும் அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் காலை மற்றும் மதியம் இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாநகராட்சியில் 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர் ஆகிய 4 நகராட்சிகளிலும் என மொத்தம் 15 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு சூடான, தரமான, சுவையான காலை டிபன் மற்றும் மதியம் 3 வகையான கலவை சாத வகைகள் அரசு நிர்ணயித்த மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் மற்றும் வசதி குறைவான ஏழை, எளிய மக்கள் உணவருந்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, அவர்கள் போதிய வருமானம் இன்றி உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில், அ.தி.மு.க. சார்பில் இன்று (திங்கட்கிழமை) முதல் சேலம் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் 11 அம்மா உணவகங்களிலும், ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர் ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களிலும் காலை மற்றும் மதியம் வேளைகளில் உணவருந்தும் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்படும். இதற்கான செலவை சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளும்.

மேலும், சேலம் மாநகராட்சியில் 2,112 தூய்மை பணியாளர்களும், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 356 தூய்மைப் பணியாளர்களும், மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 25 தூய்மை பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் போதும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களின் சேவையை பாராட்டி, ஊக்கப்படுத்தும் வகையில் தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி, மற்றும் மே மாதம் 3-ந் தேதி வரை தினமும் ஒவ்வொரு முக கவசத்தை சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழங்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது எப்போது?விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் காமராஜ் தகவல்
மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது எப்போது? என்பது குறித்து விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 23-வது வார்டு மற்றும் 29-வது வார்டு பகுதியில் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகரசபை முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் பொன்.வாசுகிராம், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் தமிழ்ச்செல்வம், கூட்டுறவு நகர வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தமிழகத்தில் தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் தொடர் நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்றாவது நிலைக்கு செல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் உறவுகளையும், நட்பையும், சமுதாயத்தையும் பாதுகாக்க ஊரடங்கை பின்பற்ற வேண்டும். இதுவரை குடும்ப அட்டைதாரர்கள் 98 சதவீதம் பேர் ரூ.1,000 உதவித்தொகை பெற்றுள்ளனர். 3 லட்சத்து 62 ஆயிரம் பேர் மட்டுமே ரூ.1,000 உதவித்தொகை வாங்காமல் உள்ளனர். அவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.

ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை 97 சதவீதம் பேர் பெற்றுள்ளனர். மே மாதத்திற்கு உரிய ரேஷன் பொருட்கள் எப்போது வழங்கப்படும்? என்பதை முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார். திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களில் திருவாரூரில் சிகிச்சை பெற்று வந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் உள்பட 14 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தேவைப்படும் இடங்களில் ரூ.500-க்கு மளிகை பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தேவையுள்ள இடங்களில் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 75 சதவீத அமைப்புசாரா தொழிளாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு 6 ஆயிரம் ‘ரேபிட்’ பரிசோதனை கருவிகள் - கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்
சென்னை மாநகராட்சிக்கு முதற்கட்டமாக 6 ஆயிரம் ‘ரேபிட்’ பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவி மூலம், கொரோனா தொற்றை கண்டறியும் சோதனை தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இந்தநிலையில் சென்னை மண்ணடியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ எனப்படும் நவீன துரித பரிசோதனை கருவி மூலமாக கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதனை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை முழுவதும் தொற்று நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அறிகுறி உள்ளவர்கள், நேரடியாக மக்கள் தொடர்பில் உள்ள காவல் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுக்கு இந்த நவீன துரித பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு 6 ஆயிரம் ‘ரேபிட்’ பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் கூடுதலாக தேவைப்படுகிறது. அதனை நாங்கள் தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 83 பேர் குணமடைந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். வீடு வீடாக ஆய்வு செய்யும் மாநகராட்சி ஊழியர்களிடம், பொதுமக்கள் தங்களுக்கு இருக்கும் உடல்நலக் குறைபாடுகளை மறைக்காமல் சொல்ல வேண்டும்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலி, அம்பத்தூர் ஆகிய 2 மண்டலங்கள் பாதிக்கப்படாமல் இருந்தாலும், அங்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ‘ரேபிட்’ பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். கொரோனா தொற்று இல்லை என்றால் குறுஞ்செய்தி அனுப்பப்படாது.

சென்னை மாநகராட்சி பகுதியில் ஏழை, எளியவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் தன்னார்வலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* உணவு மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பெருநகர சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

* உணவு வழங்கும் இடம் மற்றும் இதர விவரங்களை மண்டல அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

* மண்டல அலுவலர், உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு வழங்கும் இடத்தினை ஆய்வு செய்து அவ்விடம் உணவு வழங்க உகந்த இடம் என கண்டறியப்பட்ட பின்னர் தான் உணவு வழங்க வேண்டும்.

* அரசால் தடை செய்யப்பட்ட பகுதி (தொற்று நோய் கட்டுப்படுத்தும் மண்டலம்) என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உணவு வழங்கக்கூடாது.

3 நபர்களுக்கு மட்டுமே அனுமதி

* உணவு வழங்குமிடத்தில் ஓட்டுநர் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி/தன்னார்வ அமைப்பு/அரசு சாரா அமைப்புகள்/குழுவினர் உள்பட 3 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

* உணவுப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனத்தில், 3 நபர்களுக்கு மேல் பயணிக்கக் கூடாது.

* உணவு வழங்கும் போது, சமூக இடைவெளியினை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

* இவை தவிர, அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் உணவு வழங்குதல் குறித்து அவ்வப்போது விதிக்கப்படும் நிபந்தனைகளையும் உணவு வழங்கவுள்ள அமைப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad