Matrimony OTT-Platforms Jobs Coupons Business

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு திட்டம்: சென்னை, மதுரை, கோவையில் இன்றுடன் நிறைவு; நிரவ் மோடி, விஜய் மல்லையா ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு திட்டம்: சென்னை, மதுரை, கோவையில் இன்றுடன் நிறைவு

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊடரங்கு  அமலில் இருந்தாலும் பொதுமக்களில் சிலர் பைக், ஸ்கூட்டர் மற்றும்  கார்களில் வெளியே சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் மற்றும் நூதன தண்டனை விதித்தாலும்,  நாளுக்கு நாள்  பொதுமக்கள் வெளியே வருவது அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறையவில்லை.

குறிப்பாக காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள வாகனங்களில் மனைவி, குழந்தைகளுடன் குடும்பத்துடனும்,  நண்பர்களுடனும் செல்வது கூட்ட நெரிசலை அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை,  கோவை, மதுரை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. சென்னையில் மட்டும் தினசரி 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற நகர் பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 26ம் தேதி காலை 6 மணியில் இருந்து (இன்று) 29ம் தேதி இரவு 9 மணி வரை தொடர்ந்து 4 நாட்களும், சேலம்,  திருப்பூர் மாநகராட்சிகளில் கடந்த 26-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதில் சேலத்தில் கடந்த 25-ம் தேதியை ஊரடங்கு தொடங்கியது. அரசு அறிவித்தப்படி இன்று 4-வது நாளாக  முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த 4 நாட்களும் மருந்து கடைகள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், பத்திரிகைகள், தொலைக்காட்சி பணியாளர்களை தவிர வேறு யாரும் வெளியே வர அனுமதியில்லை. மளிகை கடை, காய்கறி கடை, பேக்கரி உள்ளிட்ட எந்த கடைகளும்  திறக்கவும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளுக்கான முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நேற்று இரவுடன் முடிந்தது  குறிப்பிடத்தக்கது. கடலூர், திருவாரூர், தென்காசி, விழுப்புரம், நாகை, தஞ்சை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.

சேலம், திருப்பூரில் நேற்றுடன் முழு ஊரடங்கு முடிந்தது. சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்றுடன் முழு ஊரடங்கு நிறைவடைகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை 4 நாட்களும், சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 28ம் தேதி வரை 3 நாட்களுக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், தஞ்சை, நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 26ம் தேதி ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு அனுசரிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் முழு ஊரடங்கு இருந்தது. திருப்பூர் மாநகராட்சி, சேலம் மாவட்டத்தில் நேற்றுடன் முழு ஊரடங்கு நிறைவடைந்தது.

 கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளான சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்றுடன் முழு ஊரடங்கு நிறைவடைகிறது. நெல்லை மாநகராட்சி, தென்காசி நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு அனுசரிக்கப்பட்டது. வரும் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றும் இங்கு முழு ஊரடங்கு இருக்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் குடைகளை பயன்படுத்த அறிவுரை சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று அளித்த பேட்டி:

முழு ஊரடங்கு நாளை (இன்று) முதல் தளர்த்தப்படுகிறது. வழக்கம்போல காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடைகளை திறந்து கொள்ளலாம். அதேசமயம், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, தொடர்ச்சியாக கடைகள் உள்ள தெருவில், ஒருநாள் இடதுபுறம் உள்ள கடைகளும், மறுநாள் வலது புறம் உள்ள கடைகளும் என சுழற்சி முறையில் திறக்க அனுமதிக்கப்படும். வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிப்பதுடன், சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க, கேரளாவை போன்று குடைகளை பயன்படுத்தலாம் என்றார்.


நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இது தவிர மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர்.

இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. வெளிநாடுகளில் இருக்கும் விஜய் மல்லையா உள்ளிட்ட தொழில் அதிபர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. விஜய் மல்லையா லண்டனில் இருந்தபடி, தனக்கு எதிரான வழக்குகளை சந்தித்து வருகிறார்.

இது தொடர்பாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பிரச்சினையை கிளப்பிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதனால் சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி அமளி ஏற்பட்டது.

இந்த நிலையில், சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

அதன்படி கடந்த 24-ந்தேதி ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்ற விவரத்தையும் தெரிவித்து உள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் சிலரது நிறுவனங்களுக்கு எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

* மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் -ரூ.5,492 கோடி.

* ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனம் -ரூ.4,314 கோடி.

* வின்சம் டயமண்ட்ஸ் -ரூ.4,076 கோடி

* ரோட்டேமேக் குளோபல் நிறுவனம் -ரூ.2,850 கோடி

* குடோஸ் கெமி -ரூ.2,326 கோடி

* ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான ருச்சி சோயா -ரூ.2,212 கோடி

* சூம் டெவலப்பர்ஸ் -ரூ.2,012 கோடி

* விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் -ரூ.1,943 கோடி

* பிரீசியஸ் ஜூவெல்லரி அண்டு டயமண்ட்ஸ் -ரூ.1,962 கோடி

* மெகுல் சோக்சியின் கிலி இந்தியா மற்றும் நட்சத்திரா நிறுவனங்கள் முறையே -ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடனை மத்திய அரசு ரத்து செய்து இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அளித்த பதில் மூலம் தெரியவந்து இருக்கிறது.

வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களை வெளியிடுமாறு முன்பு நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, நிதி மந்திரி அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் இப்போது நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பாரதீய ஜனதாவின் நண்பர்கள் பெயர்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. இந்த உண்மையை நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசு ரூ.6 லட்சத்து 66 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்து இருப்பதாக காங் கிரஸ் கட்சி கூறி உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad